தூத்துக்குடியில் கனிமொழியை மக்கள் விரட்டியதாகப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

தூத்துகுடியில் கனிமொழி விரட்டியடிப்பு. பொய் சொல்லி சொல்லி எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்ற முடியும்

X like | Archive link

மதிப்பீடு

விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் வரும் (ஏப்ரல்) 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி பிரச்சாரத்தின் போது அங்கிருந்த மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வலதுசாரி மற்றும் நாம் தமிழர் கட்சியினரால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?

பரவக்கூடிய வீடியோவில் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை ஒருவர் கையில் பிடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது.  விடுதலை சிறுத்தை  கட்சியினர் எதற்காகக் கனிமொழியின் வாகனத்தை வழிமறித்து விரட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

எனவே, பரவி வரும் 20 வினாடி வீடியோவின் கீ ஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இதன் முழு வீடியோ ’Behindwoods Air’ என்ற யூடியூப் பக்கத்தில் கடந்த (ஏப்ரல்) 1ம் தேதியன்று “அக்கா.. நீங்க பேசுனா போதும்க்கா- வேனை சுத்துப்போட்ட சிறுத்தைகள்..!” என்கிற தலைப்பில் பதிவிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. 

அந்த வீடியோவில் அக்கா நீங்க பேசுனா போதும்.. பேசுனா போதும்… நீங்க மைக் புடிச்சி பேசுனா போதும்என அங்கிருந்தவர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. 

பிறகு பிரச்சார வாகனத்தில் இருந்தபடி ”இதைவிட அன்பான ஒரு வரவேற்ப நான் பார்க்கவில்லை. வழிமறித்துப் பேசிவிட்டுத் தான் போகவேண்டும் என்று கேட்கக்கூடிய அந்த அன்பு, அதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம். மீண்டும் உங்களுடன் பணியாற்றத் தூத்துக்குடி வேட்பாளராகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிற்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்து இருக்கிறது” என்று கனிமொழி பேசியுள்ளார். 

இந்த முழு நிகழ்வில் இருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து கனிமொழி தூத்துக்குடி மக்களால் விரட்டப்பட்டதாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. மக்கள் அவரை பேச சொல்லித்தான் வற்புறுத்தியுள்ளனர்.

முடிவு :

தூத்துக்குடியில் பிரச்சாரத்தின் போது கனிமொழி விரட்டியடிக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அவரை அன்பான முறையில் பேச சொல்லித்தான் மக்கள் கூறியுள்ளனர். 

Please complete the required fields.
Back to top button
loader