’நாடகக் காதல் – பாமக : லவ் ஜிகாத் – பாஜக’ நல்ல கூட்டணி!

நாடாளுமன்றத் தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்தத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு எல்லாம் முடிவடைந்த நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கலும் நேற்றோடு முடிவடைந்தது (மார்ச் 27). 

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாமகவும் அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள பாமக நேற்றைய தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ’21 வயதுக்குக் கீழான பெண்களின் திருமணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்’ என்பது சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெறும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

பாமக தேர்தல் அறிக்கை : 

பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநில அரசுகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குதல், நிதிப் பகிர்வு மற்றும் மானியத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கும் பங்கை அதிகரித்தல், தமிழ் நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல் எனப் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் அக்கூட்டணியின் தலைமை பாஜக ஏற்கிறதா என்பது முதல் கேள்வி. 

ஏனென்றால், மேற்குரிய விஷயங்களில் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் அனைத்தும் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதிர்க் கட்சிகள் சொல்லும் அதே விஷயங்களை பாமகவும் சொல்கிறது எனில் எதற்காக பாஜக கூட்டணியில் சேர வேண்டும். 

தமிழ்நாடு வழங்கும் வரியைவிட மிகக் குறைவான தொகையையே நிதி பகிர்வாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்கிறது என விளக்கமாக யுடர்ன் வீடியோ வெளியிட்டுள்ளது. 

இத்தகைய முரண்பாடுகள் ஒரு பக்கம் இருக்கத் திருமணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என பாமக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கவனிக்க வேண்டியுள்ளது. அந்த அறிக்கையில், “சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்குப் பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்புப் பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்” என்றுள்ளது. 

பாமக தேர்தல் அறிக்கை (மக்களவை தேர்தல் – 2024, பக்.39)

மேற்கூறிய நாடுகளில் 21 வயதிற்கு உட்பட்டோர் திருமணம் செய்து கொள்ளப் பெற்றோரின் சம்மதம் தேவை என இருப்பது உண்மைதான். அந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது என்பதற்காகவே அதனை நாமும் பின்பற்ற வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. 

இந்தியாவில் திருமண வயது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பெண்ணின் திருமண வயது 14, 15 என இருந்ததை ஒவ்வொரு கால கட்டத்திலும் மாற்றி இன்றைய தேதியில் 18ஆக உள்ளது. இந்த வயது வரம்பைப் பெண்களுக்கும் 21 என நிர்ணயம் செய்ய வேண்டுமென்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே முன் வைக்கப்பட்டு வருகிறது. 

அவ்வாறு பெண்களின் திருமண வயது அதிகரிக்கும் போது அவர்களின் கல்விகற்றல் விகிதம் அதிகரிக்கும், பெண்களின் பொருளாதார பங்களிப்பு மேம்படும், வெளியுலக அனுபவம் பெறுவர் எனப் பல மேம்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுவது வழக்கம். 

ஆனால், பாமக முன் வைக்கும் காரணம் என்ன தெரியுமா? ‘நாடகக் காதல்’. இளம் வயதில் நாடகக் காதலால் பெண்கள் ஏமாற்றப்படுவதாக பாமகவும் வன்னியர் சங்கமும் நீண்ட காலமாகப் பேசி வருகிறது. இன்னும் சில சாதி கட்சிகளும் இதே கருத்தை தெரிவிக்கின்றன.

இதேபோல் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம் என்ற பெயரில் மத மாற்றம் செய்கின்றனர் என்கிற பிரச்சாரத்தை பாஜக மற்றும் இந்துத்துவாவினர் நீண்ட காலமாக முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு அவர்கள் வைத்த பெயர் ’லவ் ஜிகாத்’. இவை இரண்டும் சாதி, மத கலப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகச் செய்யப்படும் அடிப்படை ஆதாரமற்ற பொய் பிரச்சாரமாகும். 

கர்நாடகா நீதிமன்ற கருத்து : 

21 வயதுக்குக் கீழான பெண்ணின் திருமணத்தில் பெற்றோரின் ஒப்புதல் தேவை என்கிற கருத்தைக் கர்நாடகா நீதிமன்றமும் வலியுறுத்தி இருப்பதாக பாமக தனது அறிக்கையில் கூறியுள்ளது. 2011ம் ஆண்டு திருமண வயதை அடையாத காதலர்கள் திருமணம் செய்து கொண்ட ஒரு வழக்கில் நீதிபதி பக்தவத்சலம் கூறிய கருத்துதான் இது. 

சட்டப்படி திருமண வயதை அடைந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளப் பெற்றோரின் சம்மதம் எதற்கு என்கிற விமர்சனங்கள் அப்போதே எழுந்தன. மேலும், இதனை நீதிபதி பக்தவத்சலம் ஒரு கருத்தாகக் கூறினாரே தவிர இது சட்டமாகக் கர்நாடகாவில் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை.

இதனைத் தவிர ’எல்லா கல்யாணமான பெண்களும் கஷ்டப்படுகிறார்கள். உங்கள் கணவர் நல்ல பிசினஸ் செய்கிறார். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். பிறகு ஏன் அவர் அடித்ததை பற்றிப் பேசுகிறீர்கள்’ என வேறொரு வழக்கில் நீதிபதி பக்தவத்சலம் கருத்து கூறியுள்ளார். 

அதேபோல், ‘குடும்ப விஷயங்களைத் திருமணமானவர்கள் மட்டுமே வாதிட வேண்டும், spinsters வாதிடக் கூடாது. நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது பொது போக்குவரத்து கிடையாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் இது போன்ற வழக்குகளை வாதிட நல்ல அனுபவம் கிடைக்கும்’ எனக் கூறியதும் கவனிக்க வேண்டியுள்ளது. இத்தகைய கருத்தைத் தெரிவித்தவர்தான், பாமக மேற்கோள் காட்டிய கருத்தையும் கூறியுள்ளார்.

இதே கர்நாடகா உயர் நீதிமன்றம் 2020ம் ஆண்டு திருமணம் என்பது இரண்டு பேரின் அடிப்படி உரிமை எனக் கூறியுள்ளது. அதற்கும் முன்னதாக 2018ல் உச்ச நீதிமன்றமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. 

இரண்டு பேர் விரும்பும் பட்சத்தில் பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சட்டம் உள்ளது. அப்படி இருப்பினும் பதிவு அலுவலகத்திற்குப் பெற்றோர் நேரில் வந்து திருமணத்திற்கு தங்களது ஒப்புதலைத் தெரிவிக்க வேண்டும் என்கிற நடைமுறை பல அலுவலகங்களில் பின்பற்றப்படுகிறது. இது சாதி அமைப்புகள் மற்றும் கட்சிகளின் அழுத்தத்தின் பெயரிலேயே செய்யப்படுகிறது. இதற்குச் சட்ட வடிவம் கொடுக்கவே பாமக முயல்கிறது. 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader