இராணுவ உடையில் கேரள முதல்வர் பற்றி தவறான தகவல் பரப்பிய மோசடிக்காரன்..!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகளில் ராணுவத்தினர் களமிறங்கி உள்ளனர். கேரளா வெள்ளம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் இணையத்தை ஆக்கிரமித்து உள்ளன. அரசின் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் வேண்டுமென்றே தவறான தகவல்கள் திணிக்கப்படுகின்றன.
சமூக வலைத்தளத்தில் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் இராணுவத்தினரை கேரள அரசு தவறாக நடத்தி வருவதாக இராணுவ உடையில் ஒருவர் பேசும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
Bharatiya mahila morcha thalaserry mandalam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி 2.30 நிமிடம் பேசிய வீடியோ பதிவிடப்பட்டது. அதில்,
“ நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் உடன் உரையாற்றுகிறேன். ஏன் நீங்கள் இந்திய இராணுவத்தினர் மீது அதிகளவில் விரோதத்தை கொண்டு உள்ளீர் ? இதற்கு காரணம் உங்கள் அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் இந்திய ராணுவம் உங்கள் மாநிலத்திற்கு வரக் கூடாது என விரும்பியதால் தானா. செங்கன்னூரில் ஆயிரக்கணக்கான மக்கள் தவிக்கின்றனர். நமது வேலையை செய்ய எங்களுடன் வாருங்கள். நாங்கள் உங்கள் மாநிலத்தை எடுத்துக் கொள்ளமாட்டோம். பயப்பட தேவையில்லை. உங்கள் மக்கள் பற்றி உங்களுக்கு கவலை இல்லையா? இதுபோன்ற பல மீட்பு பணிகளை நாடு முழுவதும் நாங்கள் செய்துள்ளோம். எங்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. ஆகையால், உங்களிடம் வேண்டிக்கொள்கிறேன் எங்களுடன் செங்கன்னூர் வாருங்கள், இணைந்து நமது பணியை செய்வோம் “ என்று கூறி இருப்பார்.இராணுவ உடையில் தன்னை இராணுவ அதிகாரி போல் சித்தரித்துக் கொண்டு வெள்ளத்தால் மிகவும் பாதித்த செங்கன்னூர் பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணியை முதல்வர் பினராயி விஜயன் வேண்டுமென்றே தடுப்பதாக தவறான கருத்துகளை உளறும் நபர் ஒரு மோசடிக்காரன் என இந்திய இராணுவத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கில் லைக், ஷேர்களை பெற்றுள்ளது. தவறான தகவல் பரப்பிய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இராணுவத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, “ வீடியோவில் மோசடிக்காரன் இந்திய ராணுவ உடையை அணிந்து வெள்ள மீட்பு நடவடிக்கை பற்றிய தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். இதுபோல் இந்திய ராணுவம் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டால் அதை பற்றி தெரிவிக்க +917290028579 என்ற வாட்ஸ் ஆஃப் எண்ணிற்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர் ”.
செங்கன்னூர் பகுதியில் இராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெறுவதாக முதல்வர் பினராயி விஜயன் ட்வீட் செய்துள்ளார்.
கேரளா அரசு பற்றி வீடியோ மூலம் அவதூறு பரப்புவது போன்று வாட்ஸ் ஆப்பில் ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. அதில், அணைகள் பற்றியும், கேரளா முதல்வர் பற்றியும் தவறான தகவல்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரசியல் நோக்கத்தில் சிலர் தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் விரோத எண்ணத்தை உருவாக்க முயல்கின்றனர்.
Kerala battles fake news along with floods