இராமர் இயற்கை எரிபொருள் விஞ்ஞானியா ? குற்றவாளியா ?

ராமர் பிள்ளை என்கிற பெயரைக் கேட்டால் அடடே மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்ததாக பொய் கூறிக் சிறைக்கு சென்றாரே அவர் தானே..! என பலரும் கூறும் ஒரு வாக்கியம். 90 காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் வரை பலருக்கும் இவரை பற்றி நன்கு தெரியும்.
உலகில் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தட்டுப்பாட்டை குறைக்கவும்¸அதற்கு மாற்று எரிபொருள் தேவை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்கள் நன்கு அறிந்து விட்டனர்.
1999-2000-ல் மூலிகைப் பொருட்களின் மூலம் பெட்ரோல் தயாரிப்பதாக இந்திய ஊடகங்களில் ராமர் பிள்ளை பிரபலமாகி இருந்தார். இயற்கையான இலைகளில் கிடைக்கும் மூலப் பொருட்களில் இருந்து பெட்ரோலை தயாரிக்க முடியும் என்றார். ஆனால், மூலிகை பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டு தண்ணீர் மூலம் பெட்ரோல் தயாரிப்பது என்பது சாத்தியமில்லாதது என்றனர் அறிவியலாளர்கள்.
ராமர் பிள்ளையின் மூலிகைகளை பெட்ரோல் குறித்த விவாதங்கள் இந்திய அளவில் எழுந்தது. பெட்ரோல் விலை 30 முதல் 35 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.10-க்கும் விற்பதாக அறிவித்தார். சிலர் பெட்ரோல் பங்க்களில் இருந்து பெட்ரோலை வாங்கி ராமர் பிள்ளை விற்பதாகவும் செய்திகளும் பரவியது.
இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 11 இடங்களில் விற்பனை நிலையங்களை நிறுவி அதற்காக முன்பணம் பெற்றுக் கொண்டு ஏஜென்ட்களை நியமித்து இருந்தார் ராமர் பிள்ளை. அவர் விற்பனை செய்த மூலிகை பெட்ரோலுக்கு ISI தர சான்றிதழ் இல்லை. இந்நிலையில் தான், ராமர் பிள்ளை மீது சிபிஐ வழக்கு பாய்ந்தது.
” மூலிகை பெட்ரோல் என்கிற பெயரில் தவறான தகவல்களை கூறி ரூ.2.27 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பெட்ரோலிய பொருட்களான டொலுவீன் மற்றும் நாப்தா ஆகியவற்றை கலந்து “ ராமர் பெட்ரோல் “ மற்றும் “ ராமர் தமிழ் தேவி மூலிகை பெட்ரோல் “ என்கிற பெயரில் விற்பனை செய்துள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இம்மாதிரியாக பெட்ரோலிய பொருட்களை கலந்து புது பெயரில் விற்பனை செய்வது “ மோட்டார் எரிபொருள் வாகன சட்டப்படி “ குற்றம் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது “
இவ்வழக்கின் சென்னை கூடுதல் முதன்மை நீதிபதி தலைமையிலான விசாரணையில் தீர்ப்பானது ராமர் பிள்ளைக்கு எதிராக வெளியாகியது. இந்த வழக்கில் ராமர் பிள்ளை, ஆர்.வேனுதேவி, சின்னசாமி , ராஜசேகரன், எஸ்.கே.பரத் உள்ளிட்ட அனைவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதிக்கப்பட்டது.
ராமர் பிள்ளையின் இயற்கை எரிபொருள் மூலிகை பெட்ரோல், பெட்ரோலிய பொருட்களின் கலவை என குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. மோசடி குற்றம் செய்ததாக ராமர் பிள்ளை மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இந்நிலையில், மூலிகை பெட்ரோல் தொடர்பான அறிவிப்பை மீண்டும் அறிவித்தார் ராமர் பிள்ளை.
ஆகஸ்ட் 15, 2018-ல் இந்திய சுதந்திரத் தினத்தன்று மீண்டும் மூலிகை பெட்ரோலை ஓரிரு நாட்களில் விற்பனை செய்வதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.4 மற்றும் டீசல் ரூ.5 என விற்பனை செய்ய இருப்பதாவும் அறிவித்தார். மேலும், பல ஏக்கர் நிலப்பரப்பில் தொழிலகம் ஒன்று இதற்காக செயல்பட உள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, சென்னை மதுரவாயல் பகுதியில் ராமர் பிள்ளையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
Herbal fuel hoax: When faith overrode scientific inquiry