கலைக்கு மதம் இல்லை.. திருப்பதி கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் !
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனைத்து விசேஷங்களுக்கும் நாதஸ்வர வித்வான்களாக 24 ஆண்டுகளாக கலைச் சேவையாற்றி வருபவர்கள் சுபான் காசிம் மற்றும் சுபான் பாபு சகோதரர்கள். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோவிலில் ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக திகழ்வதை கேட்டு ஆச்சரியப்படுவர்கள் சகோதரர்களின் இசை பரம்பரை பற்றியும், கலை சேவையில் பல தலைமுறைகளாக அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை பற்றியும் அறிவது மதம் கடந்து கலையின் மீது அவர்கள் கொண்ட அர்பணிப்பை எடுத்துரைக்கும்.
காசிம் மற்றும் பாபு சகோதரர்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். 300 ஆண்டுகள் வரலாற்றுக் கொண்ட இசைப் பரம்பரையில் 9-ம் தலைமுறையினரின் நீட்சியாக வெற்றிகரமாக கலைப் பணியாற்றி வருகிறார்கள். காசிம் மற்றும் பாபு சகோதரர்களின் தந்தை ஷேக் காசிம் ஷாகிப் மற்றும் மறைந்த ஷேக் ஆதம் ஷாகிப் ஆகியோர் இவர்களின் ஆஸ்தான குருக்கள்.
” காசிம் மற்றும் பாபு சகோதரர்கள் “ பத்மஸ்ரீ “ விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் பேரன்கள் ஆவர். ஷேக் சின்ன மவுலானா தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தவர். 1950 ஆம் ஆண்டுகளில் தஞ்சை நாதஸ்வர பாணியை கற்க வந்துள்ளார். அவரின் இல்லத்தில் தான் இன்றும் காசிம் மற்றும் பாபு சகோதரர்கள் வசித்து வருகிறார்கள் “
ஸ்ரீரங்கத்தில் ஷேக் சின்ன மவுலானாவினால் நிறுவப்பட்ட “ சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமம் “ இன்று அவரின் குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் ஷேக் ஷாகிப் இறப்பிற்கு பிறகு நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானா பெயரில் அறக்கட்டளை ஒன்றை காசிம் மற்றும் பாபு சகோதரர்கள் தொடங்கி இசைக் கலைஞர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அவரின் நினைவாக ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய இரு நாட்களில் இசை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.
சிறு வயதில் இருந்து நாதஸ்வரம் கற்கத் தொடங்கிய சகோதரர்கள் இன்று ஏழுமலையான் கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக உள்ளனர். திருப்பதி கோவிலுக்கு இவர்கள் அளித்து வந்த கலைச் சேவையை மதித்து 1996 ஆம் ஆண்டு திருப்பதி கோவிலின் ஆஸ்தான வித்வான்களாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது. இதனால், கோவிலின் அனைத்து சுப நிகழ்ச்சியிலும் இவர்களின் மங்கள இசை இடம்பெறுகிறது. திருப்பதியின் பிரம்மோத்சவம் சிறப்பாக நிகழ்வதில் இசை கொண்டு இறைப் பணியாற்றி வருகிறார்கள்.
காசிம் மற்றும் பாபு சகோதரர்கள் திறமைக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்து உள்ளது. நாதஸ்வர இசைக் கலையில் இஸ்லாமியர்கள் சிறந்து விளங்குவது கலையின் மீது அவர்கள் கொண்ட பற்றை எடுத்துரைக்கிறது.
“ கலையே என் மதம், பூரணத்துவமே எனது குறிக்கோள் “ என தங்களின் தாத்தா கூறியதாகவும், வட இந்தியாவில் பெரும்பாலான பாரம்பரிய இசைக் கலைகள் குழுவின் தலைவர்கள் முஸ்லிம்களே என காசிம் புன்னகையுடன் கூறியுள்ளார்.
மதம் கடந்து இசையை நேசிப்பவர்களும், அதை மதிப்பவர்களும் இந்திய தேசத்தில் மலையளவு உள்ளனர். கலைக்கு மதம் இல்லை…!!
Celebrating Sheik Chinnamoulana’s musical legacy
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.