This article is from Aug 24, 2018

சர்ச்சையானது UAE-ன் 700கோடி நிவாரண நிதி விவகாரம்..!

 

மாநிலம் மிதக்கிறது , பிணங்கள் ஆற்றில் மிதந்து வருகிறது. உறவிழந்து, வீடிழந்து. கண்ணீர் மட்டும் துணையாய் ஒரு மாநிலம் . ஒருவர் பில்லி சூனிய மாநிலம் அதனால் என்கிறார் இன்னொருவர் ஐயப்பன் சாபம் என்கிறார், பீப் சாப்பிட்ட பாவம் என்கிறது ஒரு குழு, உதவாதே என முகநூலில் கதறும் அளவிற்கு வன்மம் இங்கு! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை! இதில் புரளி சொல்லிகள் வேறு உதவாமல் உதவியதாய். எங்கேங்கோ செய்ததை இங்கு செய்தாய் ! எத்தனை அழுக்கு மனதில்! பிணங்களை தின்று அரசியல் செய்யும் வீணர்களாய் போன மனிதக்கூட்டமா நாம்? சக மனிதனை சக மனிதனாய் பார்க்கும் மனிதமே உயிர்பிக்கும் வன்மம் எதற்கு?? UAE சிக்கலுக்கு வருவோம் என்ன நடந்தது ? பார்ப்போம்.

 

 ஆகஸ்ட் 17-ம் தேதி UAE -வின் தலைவர் HH Sheikh Mohammed கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என பதிவிட்டு இருந்தார் என்பதை பார்க்கவும். மேலும், ஆகஸ்ட் 18-ம் தேதி அவசரகால குழு கேரள வெள்ள நிவாரண பாதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்டது. 

 

ஆகஸ்ட் 18-ம் தேதி கேரள மக்களுக்கு உதவ முன்வரும் UAE-விற்கு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் UAE -வின் துணைத் தலைவர் HH Sheikh Mohammed அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை ட்விட்டர் மூலம் தெரிவித்துக் கொண்டார். 

 

ஆகஸ்ட் 21-ம் தேதி கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், UAE சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் நிவாரணம் வழங்க இருப்பதாக ஒரு அறிவிப்பை பதிவிட்டார். அதில், நிதி உதவி பற்றிய தகவல்களை இந்திய பிரதமர் மோடியுடன் அபுதாபி இளவரசர் ஷேக் முஹமத் பின் சயாத் பின் சுல்தான் அல்- நஹ்யன் கலந்துரையாடினார். இந்த செய்தி முதலில் வளைகுடா நாட்டில் உள்ள மலையாள தொழிலதிபர் யூசப் அலிக்கு தெரிவிக்கப்பட்டது என்றும் ட்விட்டரில் பதிவிட்டார். 

 

ஆகஸ்ட் 21-இல் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது ” UAE அரசாங்கம் நமக்கு உதவுவதற்கு தயாராக உள்ளனர். இளவரசர் நமது பிரதமருடன் நேற்று பேசி இருக்கிறார். கேரளாவிற்கு 100 மில்லியன் டாலர்(ரூ.700 கோடி) உதவ இருப்பதாக UAE முடிவெடுத்திருக்கிறது. இது கேரளாக்காரரான எம்.ஏ . யூசூப் அலி இளவரசரை ஈகை வாழ்த்துக்கள் தெரிவிக்க சந்தித்த போது தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றார்

கேரளாவிற்கு UAE ரூ.700 கோடி நிதி அளிப்பதாக கேரள முதல்வர் கூறியதை அடுத்து பிரச்சனைகள் மூண்டன. மத்திய அரசின் மீது எதிர்மறை எண்ணங்கள் உருவாகின. UAEவழங்குவது கடன் மட்டுமே..! இலவச நிதி அல்ல என்று வதந்திகள் பரவத்துவங்கியது.

 

கத்தார் நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட செய்தியில், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஐக்கிய அமீரகத்தின் தலைவர் HH Sheikh Mohammed தொலைபேசி வாயிலாக உரையாடியது பற்றி கூறியுள்ளனர். மேலும், கத்தார் சார்பாக மட்டும்  HH Sheikh tamim bin hamad  5 மில்லியன் US டாலர்கள் நிவாரண நிதியாக கேரளாவிற்கு வழங்க இருப்பதாக  அதில் குறிப்பிட்டுள்ளனர். 

UAE-யின் ரூ.700 கோடி விவகாரத்தில் அவை கடன் என்று முதலில் சிலர் கூறினர், பின் அவ்வாறு நிதி அளிப்பதாக அறிவிக்கவில்லை என அந்நாட்டு தூதரகம் வெளியிட்டது என்றும் கூறினர். UAE நிவாரண நிதி வழங்குவதாக செய்தி பரவியதற்கு வெளிநாட்டு அரசின் நிதியை இந்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்தது. 2004 ஆம் ஆண்டு கொள்கை முடிவை கொண்டு வெளிநாட்டு நிதி ஏற்கப்படாது என்று வெளியுறவு அமைச்சகம் பதிவிட்டது. 

ஆகஸ்ட் 24-ல் UAE -வின் தூதர் அஹமத் அல்பன்னா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் கூறியது, “ வெள்ளத்திற்கும் அதற்கு பின் தேவைப்படும் நிவாரணதிற்கு மதிப்பீடு நடந்து வருகிறது. நிதி உதவியாக குறிப்பிட்ட தொகையை அறிவிப்பது இறுதியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, ஏனெனில் அது இன்னும் நடந்துகொண்டு தான் இருக்கிறது “

மேலும் UAE 700 கோடி நிதி உதவியை அறிவிக்கவில்லை என சொல்கிறீர்களா என கேட்டதற்கு ” ஆம் , அது சரி , இது இன்னும் இறுதியாகவில்லை. இது இன்னும் அறிவிக்கப்படவில்லை.” என்றார்.

“இந்தியாவின் நிதி உதவி கொள்கைகள் தெரிந்ததினால் உள்ளூர் அதிகார அமைப்புகளுடன் சேர்ந்து உடனடி நிவாரண பணிகளில் உள்ளோம். நாங்கள் UAE ரெட் கிரேசெண்ட் , கேரளாவில் இருக்கும் அமைப்புகள் மற்றும் இதர இந்தியா சார்ந்த அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம் ” என்றார்.
 

UAE -வின் தூதர் இக்கருத்தால் முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கின. எதன் அடிப்படையில் அவர் UAE ரூ.700 கோடி வழங்குவதாக அறிவித்தார் என்று கேள்விகள் கேரள எதிர்கட்சிகள் மூலம் முன்வைக்கப்பட்டன. இதற்கு இரு தேசத் தலைவர்களின் ட்விட்டர் பதிவில் அதற்கான பதில் இருப்பதாக தெரிவித்து இருந்தார் கேரள முதல்வர்.

செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ” ரூ.700 கோடி செய்தியை இரு நாட்டு தலைவர்களும் உலகிற்கு கூறியுள்ளனர். இப்பொழுது செய்ய வேண்டியது நிதியை பெறுவதா ? இல்லையா ? என்பது தான். என்னுடைய பார்வை நிதியை பெறலாம் என்பதே என்றார். 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட வளைகுடா தொழிலதிபர் யூசப் அலி அவர்கள் தான் இந்த தகவலை என்னிடம் கூறினார். இதை பற்றி முன்பே கூறியுள்ளேன். யூசப் அலி அமீரக தலைவர்களை சந்தித்த பொழுது இதுபற்றி தெரிவித்து உள்ளார்கள். அதனை யூசப் அலி என்னிடம் தெரிவித்தார். மக்களிடம் இதை தெரிவிக்கலாமா என்று அவரிடம் கேட்ட பொழுது ? சொல்லுங்கள் என்று உறுதி அளித்தார் ”  என்று தெரிவித்துள்ளார். 

 UAE நிதி : 

UAE சார்பில் கேரளாவிற்கு ரூ.700 கோடி வழங்குவதாக அந்நாட்டு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கவில்லை. எனினும், நிவாரண நிதியே அறிவிக்கவில்லை என்று அந்நாடு மறுக்கவில்லை. அதற்கான பணிகள் நடைபெறுகிறது. நிவாரண தொகையில் மட்டும் இங்கு பலரின் கருத்துக்கள் திணிக்கப்படுகிறது. ஆனால், நிதி எதுவாயினும் கொள்கை முடிவை மேற்கோள்காட்டி இந்திய மறுக்கலாம் அல்லது மக்களுக்காக ஏற்க கூட செய்யலாம். 

யூசப் அலி : 

தொழிலதிபரான யூசப் அலி குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கேரளா முதல்வருக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவருக்கு டெல்லி, கேரளா மற்றும் UAE ஆகிய மூன்று இடங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் கூறியது மக்களுக்கு  தெரியப்படுத்தியது விரும்பாத ஒன்றாக மாறியுள்ளது. 

பிரதமர் அலுவலகம் : 

ஐக்கிய அமீரகம் வழங்குவதாக கூறும் நிதி பற்றிய சர்ச்சைக்கு பிரதமரின் சார்பில் எத்தகைய கருத்துகளும் வெளியாகவில்லை. மேலும், பிரதமர் மற்றும் அவரது அலுவலகம் சார்பில் உரையாடல் மற்றும் நடந்தவை பற்றி தெளிவுபடுத்தாமல் உள்ளனர். 

ரூ.700 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் UAE இளவரசர் உரையாடலில் என்ன பேசிக்கொண்டனர் என்பதை வெளிப்படையாக அறிவித்தால் நன்று.  

தூதர் மறுக்கவில்லை! அவர் இறுதித் தொகை உறுதி செய்யப்படவில்லை என்கிறார். ஏனெனில் இன்னும் மதிப்பீடு நடப்பதாக தகவல் சொல்கிறார். பிரதமர் , அந்நாட்டு தலைவர்களை நேரடியாக ட்விட்டரில் குறிப்பிட்டே பதிவிட்டுள்ளார் கேரள முதல்வர். ஆக மறுக்க வேண்டுமெனில் அப்போதே செய்திருக்க முடியும்! பிரதமர் ட்விட்டரில் ‘gracious offer’ என்று குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொகை பற்றிய விவரம் மேல் மட்ட அளவில் விவாதிக்கபட்டுள்ளது. இதை மறுக்க வேண்டும் எனில் நமது பிரதமர் அல்லது UAE தலைமை செய்ய வேண்டும். இல்லை இல்லை உதவி இல்லை கடன் என்று கம்பு சுத்தியவர்கள், வெளிநாட்டிடம் பிச்சை வேண்டுமா என்றவர்கள் எல்லாம் இப்போது தருவதாக சொல்லவில்லை என்று போலி திசை திருப்பலில் ஈடுபடுதலின் உள் நோக்கம் என்ன??

Kerala floods: UAE says nothing official yet, no amount of financial aid announced 

News Of 700 Crore Aid From UAE Came From Both Countries: Pinarayi Vijayan

Kerala floods: ‘No ambiguity’, says CM Vijayan amid row over UAE’s 700 crore aid offer

Please complete the required fields.
Back to top button
loader