Articles

சாகர் மாலா திட்டம் ஒரு பார்வை.. அச்சம் தெரிவிக்கும் சு.ப.உதயகுமார்…

இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் புதிய புதிய பெயர்களில் ஏதாவது ஓர் திட்டங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணமே உள்ளன. அவ்வாறு வரும் பல திட்டங்கள் வளர்ச்சியை விட பாதிப்பையே அதிகம் தருகின்றன என்றுக் கூறி அதற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அனைத்து திட்டங்களையும் இந்திய அரசு செயல்படுத்தி தான் வருகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது மத்திய அரசு. அது தான் சாகர் மாலா திட்டம்..

Advertisement

சாகர் மாலா திட்டம்: 

 மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு தொடங்கிய “ சாகர் மாலா” திட்டத்தை தற்போது தீவிரப்படுத்தி உள்ளனர். சாகர் மாலா திட்டம் என்பது இந்திய துறைமுகங்களின் மேம்பாட்டு திட்டம் ஆகும். தொலைநோக்கு திட்டங்களின் அடிப்படையில் துறைமுகங்களை இணைப்பது, மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகத்திற்கு உபயோகித்து கொள்வதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

துறைமுகங்களின் மேம்பாடு தவிர துறைமுகங்களுடன் இரயில் பாதை இணைப்பு, விமான போக்குவரத்து, நீர்வழி இணைப்பு போன்றவை உருவாக்கப்படும். இத்திட்டம் கிழக்கே குஜராத் முதல் மேற்கே ஒரிசா வரை உள்ள கடற்கரைகளில் செயல்படுத்தப்படும். சாகர்மாலா திட்டத்தின் மதிப்பு 70 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் பழைய துறைமுகங்கள் சீரமைக்கப்பட்டு, புதிதாக சில துறைமுகங்கள் நிறுவப்படும். மேலும், இதில் குளிர்பதனக் கிடங்குகளும், சேமிப்பு கிடங்குகளும் அடங்கும்.  இத்திட்டத்தால் கடல்வழி போக்குவரத்தில் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சம் ஆகும் என்று கணக்கிட்டுள்ளனர்.   

இந்திய துறைமுகங்கள் :

7516 கி.மீ கடற்கரை நீளம் கொண்ட இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை 12, சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை 200 ஆகும். கடல்வழி போக்குவரத்தில் இந்தியா 16 வது இடத்தில் உள்ளது. 

2014-2015 ஆம் ஆண்டு நிலவரப்படி 12 பெரிய துறைமுகங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் 1,500 கோடி ஆகும். இதை 2,500 கோடி அளவிற்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டனர்.

சாகர் மாலா திட்டத்தில் தமிழகத்தின் இணையத்திலும், சீர்காழியிலும் தொழிற்சாலை பூங்காக்கள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிலேயே குளச்சல் அருகில் உள்ள இணையம் பகுதியில் நான்காவதாக துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கினர். 

ஒரு கோடி வேலை வாய்ப்பு :

2016 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற சாகர் மாலா உயர்நிலை குழு கூட்டத்தில் பேசிய மத்திய தரைவழி, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இத்திட்டத்தின் மூலம் 40 லட்சமா பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் உருவாகும், மறைமுகமாக 60 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

எதிர்ப்பு போராட்டம் :

 தமிழகத்தில் சாகர்மாலா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ சமுதாய பேரவையைச் சேர்ந்தவர்கள் 2017-ல் சென்னையில் பேரணி நடத்தினர். இதில் கலந்து கொண்ட இணையம் துறைமுகத் திட்ட எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது, “ சாகர்  மாலா திட்டம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பில்லா திட்டம். 

தமிழகத்தில் புதிதாக இரண்டு துறைமுகங்களை அமைக்கப் போகிறார்கள். அதில் இணையமும் ஒன்று. இணையத்தில் நிறுவப்படும் துறைமுகத்திற்காக பல ஆயிரக்கணக்கான நிலங்கள் கையப்படுத்தப்படும், கடல் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படும், மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும். 

மேலும், இணையம் பகுதியில் தான் ஆமை இனப்பெருக்கம் காலத்தில் அதிகம் முட்டையிடும் இடமாக விளங்குகிறது. இணையத்தை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் நிலங்களும் கைப்பற்றப்பட்டு தொழிற்மேம்பாட்டு பூங்காக்கள், இரயில் நிலையங்கள், அதற்கான பாதைகள் என அனைத்தும் நிறுவப்படும். இதனால் மீனவ சமுதாயம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் சு.ப.உதயக்குமாரின் கருத்து :

 Youturnக்கு அவர் அளித்த பதில் சீனாவின் முத்து மாலை திட்டத்திற்கு பதிலாக இந்தியா கொண்டு வந்த திட்டம் தான் சாகர் மாலா. மோசமான நிலையில் உள்ள துறைமுகங்களை சீரமைத்தும், புதிய துறைமுகங்களை நிறுவி, அங்குள்ள மீனவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்காக இணையத்தில் தொடங்கப்பட்ட துறைமுகம் அமைக்கும் பணிகளுக்கு எதிராக மக்கள் போராடியதை அடுத்து அது கன்னியாகுமரிக்கு மாற்றப்பட்டது. 

19,844 கோடி மதிப்பீடு கொண்ட திட்டத்தால் உருவாக்கப்படும் துறைமுகத்திற்கு சர்வதேச கப்பல்கள் வராமல் கொழும்பிற்கு அல்லது ஹம்பன் தோட்டாவின் துறைமுகங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. கொழும்பு மற்றும் ஹம்பன் தோட்டா துறைமுகங்களை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட அமைப்பு மற்றும் குறைவான செலவுகள் இருந்தால் மட்டுமே இங்குள்ள துறைமுகத்திற்கு கப்பல்கள் வரும்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆக, நாடு முழுவதும் உள்ள 20 துறைமுகங்களுக்கு 20,000 கோடி என்று வைத்தால், அதைவிட 3 மடங்கு அதிகமான வருவாய் வந்தால் தானே நமக்கு லாபம்…! இதில் அதானிக்கோ அல்லது மற்ற பெரு முதலாளிகளுக்கோ நஷ்டம் ஏற்பட போவதில்லை. இங்கு லாபம் வந்தால் முதலாளிகளுக்கும், நஷ்டம் வந்தால் மக்கள் தலையிலும் வந்து சேர்கின்றன.. 1 சதவீதம் எண்ணிக்கை கொண்ட பணக்காரர்கள் வளர்வதற்கு நம் வளங்களை அழிக்க கூடாது அல்லவா.! 

அதுமட்டுமல்லாமல், சுற்றுப்புறத்திற்கும் பேரழிவுகள் ஏற்படும்.  நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலைக்கு வந்துள்ளோம், நிலத்தடி நீரும் அதிகளவில் குறைந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில், 20 துறைமுகங்கள் நிறுவி வரும் கப்பல்களுக்கு தண்ணீர்க்கு என்ன செய்வது..? 

130 கோடி மக்களின் உணவு பற்றிய சிந்தனை தான் முதன்மையானதாக இருக்க வேண்டும். விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை விட்டு விட்டால், தேசிய பாதுகாப்பு தகர்க்கப்படும். இவர்கள் தேசிய பாதுகாப்பு என்றால் பாகிஸ்தான், சீனாவிடம் இருந்து பாதுகாப்பது என்று நினைக்கிறீர்கள்.  

20 துறைமுகங்கள் மற்றும் 12 பழைய துறைமுகங்கள் கட்டுமானத்தின் போது மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்படும். உணவு பாதுகாப்பிற்கு மீன்பிடி தொழில் மிக முக்கிய பங்கு அளிக்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த சமயத்தில், நாட்டில் பிறக்கும் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டோடு பிறக்கின்றன என்று கூறியிருந்தார். கடல் மீன் உணவும் இல்லாமல் போனால் அனைவரும் உடல்நலம் சார்ந்த பாதிப்பை அடைவர். 

புதிதாக துறைமுகம் நிறுவ உள்ள 20 பகுதிகளும் மீன்பிடி தொழிலுக்கு உகந்த இடமாகும். இந்தியாவில் 7,500 கி.மீ கடற்கரை நீளமுள்ள பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நவீன படகுகள் வழங்குவது, சேமிப்பு கிடங்குகள், மீன்பிடி முறையில் உள்ள நவீனத்துவம் பற்றி எடுத்துரைப்பது போன்றவற்றை அரசு செய்வதன் மூலம் படித்த இளைஞர்கள் கூட மீன்பிடி தொழில் களமிறங்குவர். இதன்மூலம் நம்மால் மீன் உணவில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க இயலும். மேலும், இத்தொழிலை மேம்படுத்துவதால் தென் ஆசியா மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நம்மால் மீனை அதிகளவு ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆனால், இதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் அரசு செயல்படுத்த முன்வருவதில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக அரசின் நிலை : 

2015-ல் தொடங்கிய சாகர் மாலா திட்டத்தின் முதல் செயற்குழு கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டவர் அப்போதைய சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரும், தற்போதைய முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தான். ஆக, இத்திட்டத்திற்கு தமிழக அரசால் எத்தகைய எதிர்ப்புகளும் இருக்க வாய்ப்பில்லை. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button