செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு சீல் ! நடந்தது என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலேஸ்வரத்தில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் ஆதரவற்றோருக்கான செயின்ட் ஜோசப் கருணை இல்லம் அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் இக்கருணை இல்லத்தின் நிர்வாகியாக தாமஸ் என்பவர் இருந்து வருகிறார். இவ்விடம் இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக இல்லத்தின் நிர்வாகம் தெரிவிக்கின்றனர். பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் 300-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொண்டு நிறுவனத்திற்கு கிழக்கு தாம்பரம், வேலூர், விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன. இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள இல்லத்தில் இருந்து பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு இறந்த உடலுடன் இரு முதியவர்களை வலுகட்டாயமாக வேனில் அடைத்து அழைத்து சென்றுள்ளனர்.
திருமுக்கூடல் அருகே செல்லும் பொழுது வேனில் இருந்து அலறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் வேனை மடக்கி பிடித்து சாலவாக்கம் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பாலேஸ்வரம் ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் அத்துமீறல்கள் நடப்பதாகவும், சித்தரவதைகள் செய்வதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், இறந்தவர்களின் உடல்களை மட்க வைத்து எலும்பு கூடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், மாதம் 30 மற்றும் 60 பேர் என ஆண்டிற்கு 300 பேர் இறப்பதாகவும் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாச்சியர் ராஜு தலைமையில் மாசுக்கட்டுப்பாடு துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை என 30க்கும் மேற்பட்டோர் கருணை இல்லத்தில் விசாரணை நடத்தினர். அதில், அங்குள்ளவர்கள் யாரும் உறவினர்களின் அனுமதியுடன் இல்லத்திற்கு அழைத்து வரப்படவில்லை. இல்லத்தில் உரிமம் 2017 நவம்பர் மாதத்தில் முடிந்து விட்டது. நிர்வாகம் அனுமதியை புதுப்பிக்கவில்லை. அங்கு சுகாதார வசதி, மருத்துவ வசதி, தீ தடுப்பு போன்ற குறைபாடுகள் உள்ளதையும் கண்டறிந்தனர்.
கருணை இல்லத்தில் இறப்பவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதில்லை. அதற்கென பிணவறையை சுற்றி சிறிது சிறிதாக பெட்டிகள் போன்ற அறைகளில் வைத்து ரசாயன ஊசிகள் செலுத்தி சிமென்ட் வைத்து அடைக்கப்படுகிறது. பின் 36 மணி நேரத்தில் உடல்கள் மட்கி பெட்டியின் கீழ் பகுதியின் வழியாக வெளியேறுவதால் எலும்பு எச்சங்கள் மட்டுமே மிஞ்சும். இது போன்ற முறை கீழ்ப்பாக்கம், கேரளா உள்ளிட்ட 150 இடங்களில் உள்ளதாக இல்லத்தின் நிர்வாகி தெரிவித்தார். ஆனால், இதற்கான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இம்முறையால் நிலத்தடி நீர் மாசடைய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக நாம் அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹடிமணி IPS அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, “ இந்த முதியோர் இல்லம் பற்றிய சர்ச்சை இன்று தொடங்கியது அல்ல. சில மாதங்களுக்கு முன்பே ஒரு அரசியல் பிரமுகர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார். அதில், அவர்களுக்கு காண்ட்ராக்ட் முறையில் கட்டிடங்கள் கட்டி தந்ததாகவும், அதற்கு தரவேண்டிய பாக்கி 5 லட்சத்துக்கு மேல் இருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால், அதற்கான தகுந்த ஆதாரங்கள் ஏதும் இல்லை. அவர்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தமும் போட்டு கொள்ளப்படவில்லை. அதனால், புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். மேலும், வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் பல துறைகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுடைய கிளை பல இடங்களில் இருக்கிறது. முழுமையாக விசாரித்து பிற துறையினரின் அறிக்கை கிடைத்த பிறகு மேலும் தகவல்களை தெரிவிக்க இயலும் என்கிறார்.
இது தொடர்பாக டாக்டர்.பிரவின் MBBS., MD அவர்களிடம் கேட்ட போது, மருத்துவரீதியாக பார்க்கும் போது எலும்புகளை கடத்தி பெரிய உபயோகம் இல்லை. ஏனென்றால், எலும்பு முறிவு போன்ற விசயங்கள் நடந்தாலே அதற்கு மாற்றாக ஸ்டீல் போன்றவை தான் பயன்படுத்துகின்றோம். கிட்னி, லிவர் போன்ற உறுப்புகளை மற்றவர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்ய இயலும். ஆனாலும், அதற்குரிய சட்டம் இங்கு மிகவும் கடுமையானது. சட்டத்தை மீறி நடக்கிறது என்று வைத்தாலும் கூட இரத்தப்பிரிவு பொருந்த வேண்டும், மரபணு ஒற்றுமை இருக்க வேண்டும். படத்தில் காட்டுவது போல் போகிற வழியில் எல்லாம் கிட்னியை திருடிவிட முடியாது. இது மட்டுமின்றி இவர்கள் எல்லாம் வயதானவர்கள், இவர்களின் உறுப்புகள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கின்றனவா என்பதும் ஒரு கேள்விக்குறியே ? என்கிறார்.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது கூறுகையில், “ இல்லத்தின் வருகைப் பதிவேட்டில் 315 பேர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 255 பேர் மட்டுமே உள்ளனர். இதில் சுய நினைவுடன் உள்ள 85 பேரை வெளியேற்றி அரசு அனுமதி பெற்ற காப்பகங்களுக்கு அழைத்து செல்லப்படுவர்.
இதன் முதற்கட்டமாக 16 பேர் வேறு காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனநலம் பாதிக்கபட்ட 122 பேரை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தனியார் கருணை இல்லத்திற்கு கட்டட உரிமைச் சான்றிதழும் இல்லை, 2017-க்கு பிறகு அனுமதி புதுப்பிக்கப்படவும் இல்லை. இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கருணை இல்லத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றிய பிறகு சில நாட்களில் விதிமுறைகளை மீறிய இல்லத்திற்கு சீல் வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
அந்த இல்லம் அனுமதி புதுப்பிக்காமல் இயங்கி வந்துள்ளது. முறையான வசதிகள் இன்றி இயங்கியிருக்கிறது. சர்ச்சைக்குரிய வகையில் சுகாதாரத்துறை அனுமதியின்றி பிணவறை அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. எலும்பு திருட்டு, உறுப்புத் திருட்டு போன்றவைகளை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. எல்லாத்துறை ரீதியான அறிக்கை வெளிவந்து முறையான விசாரணை நடந்தால் மட்டுமே அது பற்றிய தெளிவு கிடைக்கும்.