This article is from Jul 23, 2018

எளியோருக்கான மத்திய அரசின் பென்சன் திட்டம்..!

35 வயது சுதர்ஷன் கட்டிட வேலை செய்கிறார், அவரின் மனைவி ஸ்ரீவித்யா இரண்டு வீடுகளில் வேலை செய்து விட்டு ஒரு ஐடி கம்பெனியில் காண்ட்ராக்ட் அடிப்படையில் துப்புரவுப் பணியாளர் வேலையும் பார்க்கிறார். சுதர்ஷனுக்கு சம்பளம் அதிகமாக இருந்தாலும் நிரந்தரமில்லை, மாதத்தில் 20 நாள் வேலை இருந்தால் பெரிய விசயம்.  இருவருமாகச் சேர்ந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பார்கள். பெருசா சொல்லிக்கறா மாதிரி இல்லேன்னாலும் கடனில்லாத வாழ்க்கை. இவர்களைப் போன்று அமைப்பு சாரா தொழிலாளிகளின் மிகப்பெரிய பிரச்சனை உடல் ஒத்துழைக்கும் வரை வேலை செய்ய இயலும் அதற்கு பிறகு என்ன வழி என்று யாருக்கும் தெரியாது ? 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியத் திட்டங்கள் பல உள்ளன, இவர்களைப் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அவற்றில் பங்கு பெரும் வாய்ப்பில்லை, வாய்ப்பு இருக்கும் ஒரு சில திட்டங்கள் குறித்தும் இவர்களுக்கு அறிமுகம் இல்லை. 

இதை உணர்ந்த மத்திய அரசு அறிமுகப்படுத்திய அருமையான திட்டம்தான் “ அடல் பென்சன் யோஜ்னா “. முந்தைய காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய “ Swavalamban Yojna “ திட்டத்தில் இருந்த குறைகளை நீக்கி அதிக அளவில் இது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.

இத்திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள இந்தியர் எவரும் சேரலாம். 60 வயது வரை சேமிக்கணும், மாதாமாதம் சிறு தொகையை செலுத்தி வந்தால் 60 வயது முதல் உயிருள்ள வரை பென்சன் கிடைக்கும்.

உதாரணத்துக்கு 30 வயது ஆகும் ஒருவர் மாதம் 116 ரூபாய் வீதம் 30 ஆண்டுகள் செலுத்தி வந்தால் அதற்கு பிறகு மாதம் 1000 ரூபாய் பென்சன் கிடைக்கும். அவரே மாதம் 577 ரூ செலுத்தி வந்தால் 5000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.

அவர் இறந்த பின் அவரது மனைவி அல்லது கணவனுக்கு அத்தொகை கிடைக்கும், இருவரும் இறந்தபின் வாரிசுக்கு முழுத்தொகையும் கிடைக்கும். 

சுதர்ஷன் மாதத்துக்கு 902 ரூபாய் + ஸ்ரீவித்யா மாதத்துக்கு 577 ரூபாய் மொத்தம் 1479 ரூபாய்கள் செலுத்தி வந்தால், அவர்களுக்கு 60 வயது ஆகும் போது தலா 5000 ரூபாய் வீதம் குடும்ப பென்சன் 10,000 ரூபாய் கிடைக்கும். இது அவர்கள் இறக்கும் வரையில் வழங்கப்படும், அதற்கு பிறகு அவர்களின் மகளுக்கு 17 லட்சம் ரூபாய் கிடைக்கும். அவர்களுக்கு 60 வயது ஆகும் போது மாதம் 10 ஆயிரம் ரூபாய்கள் போதாது, ஆனால் அவர்களுக்குத் தேவைப்படும் தொகையில் ஒரு பங்கையாவது இது கொடுக்கும்.

இதில் யார் சேரலாம்? 

18 முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

திட்டத்தில் சேருவது எப்படி? 

வங்கிகள் மூலம் இத்திட்டம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான அரசுடமை வங்கிகளும் பல தனியார் வங்கிகளும் இத்திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஜுன் மாதம் விஜயா வங்கி இத்திட்டத்தை சிறப்பாக மக்களில் எடுத்து சென்றதற்கான விருதைப் பெற்றுள்ளது.

KYC or Demat அவசியமா ?

இல்லை இத்திட்டத்தில் சேர ரெண்டுமே அவசியமில்லை. ஆதார் எண் அவசியம், இதற்கு ஆதார் எண்ணே KYC போல செயல்படும்.

எவ்வளவு நாள் பணம் செலுத்த வேண்டும்?

60 வயது ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும்

எவ்வளவு செலுத்தினால் எவ்வளவு பென்சன் கிடைக்கும்?

இங்கு இணைக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் அதைக் காணலாம். 

இடையில் பயனர் இறந்தால் என்ன ஆகும்? 

அவரது கணவன் அல்லது மனைவி பென்சன் அல்லது மொத்தப்பணம் இதில், ஏதாவது ஒன்றைப் பெற்றுக் கொள்ளலாம்

இதன் சாதகங்கள் என்ன?

  1. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்தியாவில் பென்சன் தரும் திட்டம் இது ஒன்றே. அவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி ஓய்வு கால பென்சனுக்கு இது வகை செய்கிறது
  2.  மாதாந்திரம் கட்டும் பணத்தையும் மெச்சூரிட்டி பணத்தையும் கணக்கெடுத்தால் 8% கூட்டு வட்டி வருகிறது. அரசின் திட்டமாதலால் 100% பாதுகாப்பு உடையது. 100% பாதுகாப்பும் 8% கூட்டு வட்டியும் என் கருத்தில் நல்ல முதலீடு .
  3. மெச்சூரிட்டி தொகைக்கு 7% ஆண்டு வட்டி அல்லது பென்சன் வழங்கப்படும். உதாரணத்துக்கு 8,50,000 மெச்சூரிட்டி பணத்துக்கு மாதம் 5000 ரூபாய் / ஆண்டுக்கு 60,000 பென்சன் கிடைக்கும். ஆன்னுவிட்டி என்று அழைக்கப்படும் பென்சன் திட்டத்தில் இன்று அமெரிக்காவில் 3% கிடைக்கிறது, இந்தியாவில் மட்டும்தான் ஜீவன் அக்‌ஷய் மற்றும் சில ஆன்னுவிட்டி திட்டங்களில் 6-7% கிடைக்கிறது, இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலும் ஆன்னுவிட்டிகள் 3-4%க்கு வந்துவிடும், அப்போதும் இத்திட்டம் 7% வழங்கும். இவ்விரண்டு காரணங்களால் இது ஒரு நல்ல திட்டமாக எனக்குப் படுகிறது
  4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும் இந்த அளவுக்கு சிறந்த வட்டி இருப்பதால்  மற்றவர்களும் இதில் முதலீடு செய்யலாம். எல்லாரோட போர்ட்ஃபோலியோவிலும் ஈக்விட்டி தவிர்த்து பாண்ட் / Debt / Fixed Income கள் இருக்க வேண்டும், அந்த முதலீடுகளின் ஒரு பகுதியை இதில் முதலீடு செய்யலாம். இந்திய அரசின் திட்டம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு இதற்கு உண்டு. 

குறைகள் :

இன்றைய நிலையில் திட்டத்தின் ஒரே குறையாக கருதுவது பென்சனின் அளவு மட்டுமே. 18 வயதில் சேரும் ஒருவன் பென்சன் பெற இன்னும் 42 ஆண்டுகள் ஆகும் அப்போது தலா 5000 / குடும்பத்துக்கு 10,000 ரூபாய் என்பது மிகக்குறைவு. இதே வட்டியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஏனையோருக்கு கொஞ்சம் குறைந்த வட்டியிலும் மாதம் 10 அல்லது 20 ஆயிரம் பென்சன் வருமளவுக்கு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயவு செய்து இத்திட்டத்தை உங்களுக்குத் தெரிந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள், வீட்டில் வேலை செய்பவர், கார் ட்ரைவர், கட்டிடத் தொழிலாளிகள், உணவகங்களில் வேலை செய்வோர் போன்றோர் ஃபேஸ்புக்கில், Youturn வலைதளத்திலும் இதை படிக்க இயலாது. அவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதை எடுத்துச் சென்றாலும் பெரும் உதவியாக இருக்கும். சந்தேகங்கள் இருப்பின் வங்கிகளை அணுகலாம் அல்லது எனக்கு மின்மடல் அனுப்பினால் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அவற்றைத் தீர்த்து வைக்கவும் முடியும்.

 

– பாஸ்டன் ஸ்ரீராம்

தொடர்புக்கு : bostonsriram@gmail.com

Please complete the required fields.




Back to top button
loader