This article is from Aug 17, 2018

கடலில் நீர் கலப்பது வீண் இல்லை – Weather Man நேர்காணல்..!

கேரளாவில் பெய்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கேரளாவில் முன்பு இல்லாத அளவிற்கு கனமழை பொழிந்ததால் வெள்ளம் அதிகரித்து மக்கள் வசிப்பிடம் பாதிப்புக்குள்ளானது. கேரளா கனமழை பற்றி பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.

கேரளாவின் கனமழை பற்றியும், தமிழகத்தின் வானிலை பற்றியும் Tamilnadu Weather Man உடன் நடைபெற்ற நேர்காணலில் பல்வேறு கேள்விகள் youturn சார்பாக கேட்கப்பட்டுள்ளது. அதை விரிவாக காணலாம்.

கேள்வி : கேரள மாநிலம் கடந்த 100 ஆண்டுகளை விட இந்த வருடத்தில் தான் அதிகளவில் மழைப் பொழிவை கண்டுள்ளதா ?

Weather Man பதில்: 1924-ல் தோராயமாக ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களில் 3100 மி.மீ அளவிற்கு கேரள மாநிலம் மழைப் பொழிவை கண்டுள்ளது. 2018-ல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் 2306 மி.மீ அளவிற்கு மழைப் பொழிவை கேரள மாநிலம் பெற்றுள்ளது. இன்னும் செப்டம்பர் வரை கணக்கிட்டால் 1924-ம் ஆண்டை காட்டிலும் அதிக மழைப் பொழிவை பெற 800 மிமீ தேவைப்படுகிறது. இருப்பினும், செப்டம்பர் மாதம் முடிவில் தான் அதுபற்றி தெரியவரும். ஆனால், அந்த அளவை தாண்டுவது குறைவு தான்.

கேள்வி : கேரளாவில் கனமழை பொழிந்து வெள்ளம் வருவது பற்றி முன்பே தெரிய வந்ததா ? இது பற்றி முன்னெச்சரிக்கை செய்து உள்ளீர்களா ?

Weather Man பதில் : கனமழை வருவது பற்றி கணிக்க முடிந்தது. ஆனால், மிகப்பெரிய அளவில் வெள்ளம் உண்டாகும் என்றெல்லாம் கணிக்க முடியாது. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, பாலக்காடு என அனைத்து இடங்களிலும் கனமழை பொழிந்து உள்ளது. அதனால், நிலப்பரப்பிலும் அதிகளவில் தண்ணீர், அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்ததால் வெள்ளம் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி : கேரள மாநிலம் எப்பொழுது இயல்புநிலை திரும்பும் ?

Weather Man பதில் : இடுக்கியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தற்போது இடைவெளி விட்டு மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 19-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்பின் படிப்படியாக இயல்புநிலை திரும்பும்.

கேள்வி : கேரளாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் தமிழகத்திற்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா ?

Weather Man பதில் : இல்லை, கேரளாவில் இருந்து திறந்து விடப்படும் 75% தண்ணீர் அரபிக்கடலில் கலந்து விடுகிறது. முல்லை பெரியார் அணையில் இருந்து தண்ணீரை திருப்பி தமிழகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.

கேள்வி : வெள்ளம் உருவானதால் அரபிக்கடலில் தேவையில்லாமல் தண்ணீர் வீணாக கலக்கின்றதே.

Weather Man பதில்: அவ்வாறு கூறுவதே தவறு. ஆறுகள் கடலில் முடிவடைய வேண்டும். காரணம் ஆறுகள் முடியும் நிலப்பரப்பில் ஆற்று நீர் கலக்கவில்லை என்றால் கடல்நீர் உட்புகுதல் நடைபெறும். இதனால், அங்குள்ள நிலங்கள் பாதிப்படையும். குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட பகுதிகளில் தேவையான நீரை சேமித்து வைத்து மீதமுள்ள தண்ணீரை கடலில் கலக்க விட வேண்டும். நீர்நிலைகளில் முழுவதுமாக தண்ணீரை சேமிக்காமல் விடுவது தவறு. இயற்கை அளித்த நீரை வீணாக கடலில் கலக்க விடுகிறோம் என்று கூறுபவர்கள் வெள்ளம் வரும் காலங்களில் அணைகளை ஏன் திறக்க வேண்டும். அது எவ்வாறு தவறோ அதேபோல் ஆற்று நீரை கடலில் கலக்காமல் இருக்க நினைப்பதும் தவறு. அப்படி பார்த்தால், அணைகள் கட்டுவது கூட இயற்கைக்கு எதிரானது தானே.

கேள்வி: தமிழகத்திற்கு கனமழை பொழிய வாய்ப்புகள் உள்ளனவா ?

Weather Man பதில்: தென்மேற்கில் அதிக மழை பொழிந்தால் வடகிழக்கில் மழை குறைவாக இருக்கும் என்றெல்லாம் ஒற்றுமைப்படுத்தி பார்க்க இயலாது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொழிவானது ஒவ்வொரு வருடமும் அதிகம், குறைவு என வேறுபட்டு வரும். அக்டோபர் மாதம் வரும் பொழுது தான் தெளிவான படங்கள் கிடைக்கும்.

கேள்வி : ஈரானில் மேகங்கள் திருடப்படுகிறது என்றுக் கூறியது போன்று கேரளாவில் அவ்வாறு நிகழ்ந்துள்ளது என்று செய்திகள் பரவுகின்றது.

Weather Man பதில் : அது எல்லாம் பொய்..! நம்ம ஊரில் கூட அதுமாதிரியாக வதந்திகளை கூற ஆட்கள் உள்ளனர். அவ்வாறான பதிவுகளுக்கு அதிகளவில் லைக் , ஷேர் வருகிறது. வெளிநாடுகளிலும் இவ்வாறான ஆட்கள் உள்ளனர்.

கேள்வி : பொதுமக்கள் வானிலை பற்றி சுயமாக அறிந்து கொள்ள ஏதேனும் வழிமுறைகள்.

Weather Man பதில் : 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்திற்கு பிறகு மக்கள் அனைவரும் வானிலை, வெள்ளம் குறித்து சுயமாகவே தெரிந்து கொள்வது அதிகரித்து வருகிறது. தங்கள் பகுதியின் சராசரி மழை அளவு, எப்பொழுது, எந்த அளவு, எம்மாதிரியான வானிலை நிலவரம் உருவாகும், பகலில் மழை பொழியுமா அல்லது இரவில் மழை பொழியுமா, அங்குள்ள நீர்நிலைகள், அவற்றின் கொள்ளளவு, அவற்றின் வழித்தடம் என பல தகவல்கள் தெரிந்து வைத்து இருந்தால் கனமழை பொழியும் வெள்ளம் உண்டாகி ஏரிகள் உடையும் என பரவுவது வதந்திகள் என எளிதாக அறிய முடியும். இதனால் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது என்ற பிளாஷ் நியூஸ் வந்தால் பயப்படத் தேவையில்லை.

கர்நாடகா, கேரளாவில் கனமழை பொழிந்தால் தமிழகத்திற்கும் கனமழை பொழியும் என ஆதாரமின்றி எதையும் கூற முடியாது. தமிழகத்திற்கான மழைக்காலம் தொடங்கிய பிறகே அது கனமழையா, அதிக கனமழையா என்று தீர்மானிக்க இயலும். Weather Man-ன் பதில்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறோம். வானிலை பற்றி அதிர்ச்சி அடையாமல் உங்கள் பகுதியின் தன்மையை நீங்களே இணையத்தின் மூலம் அறிந்து கொள்வது தேவையற்ற வதந்திகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும்.  

Please complete the required fields.




Back to top button
loader