This article is from Sep 30, 2018

காவிரி நீர் விவகாரம் வரலாறும் இறுதித்தீர்ப்பும்!.

தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நடைபெறும் தண்ணீர் பங்கீடு பிரச்சனைக்கு 1892 மற்றும் 1924  ஆகிய ஆண்டுகளில் மைசூர் மாகாணத்திற்கும் மதராஸ் மாகாணத்திற்கு இடையே செய்யப்பட்ட இரு வேறு முரண்பாடான ஒப்பந்தங்கள் மற்றும் காவிரி நீரை பங்கீட்டுக் கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே நிலவிய ஒத்துழைப்பின்மையே காரணம்.

காவிரி நீரை தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என நான்கு மாநிலங்கள் குடிநீர், விவசாயம் ஆகியவற்றின் தேவைக்களுக்காக பெரிதும் நம்பியுள்ளனர். குறிப்பாக தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமே காவிரி ஆற்றின் நீரை சார்ந்தது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது. தமிழகத்தின் மேட்டுர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான விளைநிலங்களின் பாசன வசதிக்கு பெரிதும் பயன்படுகிறது.

காவிரி ஆற்றின் தண்ணீரால் சேலத்தில் உள்ள 16,443 ஏக்கர் விளைநிலமும், ஈரோட்டில் 17,230 ஏக்கரும், நாமக்கலில் 11,327 ஏக்கரும், கரூரில் 22,500 ஏக்கரும், திருச்சியில் 2,40,000 ஏக்கரும், புதுக்கோட்டையில் 28,000 ஏக்கரும், தஞ்சையில் 4,00,000 ஏக்கரும்,  திருவாரூரில் 4,00,000 ஏக்கரும், அரியலூர் 24,000 ஏக்கரும், நாகப்பட்டினத்தில் 3,50,000 ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 1,10,000 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

kaveri river

ஆனால், கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவைப் பொறுத்தே விவசாயம் செய்யும் நிலைக்கு டெல்டா விவசாயிகள் தள்ளப்பட்டன. இதற்கு காரணம் கர்நாடகாவில் உருவாகும் காவிரி ஆறு எங்களுக்கே சொந்தம் என்று தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கப்படுவதே. பல ஆண்டுகளாக பல்வேறு பேச்சுவார்த்தை, நீதிமன்ற வழக்குகள் என்று அலைந்து இறுதியாக அப்போதைய இந்திய பிரதமர் வி.பி.சிங் உச்ச நீதிமன்ற ஆணையால் மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பங்கீட்டிற்காக ஜூன் 1990-ல் காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தார். 1991-ம் ஆண்டில் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீரை திறக்குமாறு தனது முதல் தீர்ப்பை வழங்கியது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் விளைவாக கர்நாடகாவில் பெரிதாக கலவரம் மூண்டது, அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும் கர்நாடகா தண்ணீரை திறந்து விட மறுத்துள்ளது. இதற்கிடையில் இரு மாநிலங்களின் சார்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. 1998-ல் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்காக காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு :

2007 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கீட்டுக் கொள்வது தொடர்பாக தனது இறுதி தீர்ப்பை வழங்கியது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம். இத்தகைய தீர்ப்பிற்கு முன்பாக கர்நாடகாவில் இருந்து 264 டிஎம்சி தண்ணீரை திறந்து விடக் கோரியது தமிழகம். அதேபோல் கேரளா 99.8 டிஎம்சி, புதுச்சேரி 9.3 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், பிப்ரவரி 5, 2007-ல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பில், தமிழகத்திற்கு 419 டிஎம்சி , கர்நாடகாவிற்கு 270 டிஎம்சி, கேரளாவிற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு 10 டிஎம்சி, கடலில் கலப்பதற்கு 4 டிஎம்சி தண்ணீர் என்று கணக்கிட்டது.

இந்த தீர்ப்பில், தமிழகத்திற்கு 419 டிஎம்சியில் கர்நாடகா 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 327 டிஎம்சி தண்ணீரை தமிழகம் தனது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெற வேண்டும் என்று தீர்மானித்தது. காவிரி ஆற்றின் நீர் பற்றாக்குறை காலங்களில் இருக்கும் மொத்த நீரில் தமிழகம் 57.7 %, கர்நாடகா 37.2%, கேரளா 4%, புதுச்சேரி 1% நீரைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு காவிரி நடுவர் மன்றம் அமைக்க 22 ஆண்டுகளும், இறுதி தீர்ப்பு வழங்க 17 ஆண்டுகளும் ஆகியுள்ளன. இந்த தீர்ப்பை அரசு இதழில் வெளியிடுவதற்கு மத்திய அரசிற்கு 6 ஆண்டுகள் ஆகியது என்பது வேதனையான செயல். எனினும், 2007-ல் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒவ்வொரு வருடமும் தமிழகம் தண்ணீர் கேட்பதும், அதற்கு கர்நாடகா தண்ணீர் தர மறுப்பதும், அதனால் கலவரங்கள் மூழ்வதும் தொடர் கதையாகி வந்தது. இதில் 2016-ல் உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்கு எதிராக கர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்தன. தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் அனைத்தும் அடித்து உடைக்கப்பட்டன. 1991-ல் நடந்தது போன்றே இனக்கலவரம் உண்டாகியது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு :

நான்கு மாநிலங்களால் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் இறுதி தீர்ப்பை 2017-ம் ஆண்டு செப்டம்பர் ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த இறுதி தீர்ப்பு 16.02.2018 இன்று 10.30 மணிக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட அமர்வால் வாசிக்கப்பட்டது. அதில்,

  • காவிரி தங்களுக்கு தான் சொந்தம் என்று கர்நாடகா கூறி வந்ததற்கு, நதிநீர் தேசிய சொத்து என்பதால் காவிரி ஆற்றின் நீரை எந்தவொரு மாநிலமும் சொந்தம் கொண்டாட உரிமை இல்லை என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
  • தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தடையின்றி வழங்க வேண்டும்.
  • நடுவர் மன்றம் தீர்மானித்த 192 டிஎம்சி தண்ணீரை விட 14.75 டிஎம்சி குறைவான தண்ணீரே தமிழகத்திற்கு கிடைக்க உள்ளது.
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கர்நாடகாவிற்கு கூடுதலாக 14.75 டிஎம்சி தண்ணீருடன் மொத்தம் 284.75 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.
  • பெங்களூரின் குடிநீர் தேவை மற்றும் தொழிற்ச்சாலைகளின் தண்ணீர் தேவை அதிகரித்ததாலும், கர்நாடகாவிற்கு 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டிஎம்சியாக இருப்பதால் நடுவர் மன்றம் அறிவித்த 192 டிஎம்சி தண்ணீரில் 14.75 டிஎம்சி நீரை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • கேரளாவிற்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று கூறிய  காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் எத்தகைய மாற்றமும் இல்லை.
  • 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணைகள் கட்டக் கூடாது.
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு.
  • காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் இருந்த ஓரிரு பிழைகள் திருத்தப்பட்டதால் அது இறுதி தீர்ப்பாக செல்லும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று கூறியுள்ளனர்.
  • காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது. எனவே, இறுதித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி வழக்கில் சர்வ தாமதமாய் இறுதி தீர்ப்பு மேல்முறையீடு அற்ற தீர்ப்பு என்று இன்று வழங்கியுள்ளார்கள். இதில் கர்நாடகம் இதுவரை பலமுறை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் இருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது , ஒரு நாட்டின் அதிகபட்ச நீதி வழங்கும் இடம் அதன் தீர்ப்பையே மதிக்காமல் பலமுறை நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளது கர்நாடகா அரசு. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் சொன்ன பின்பும் மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் இத்தனை ஆண்டுகள் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை யார் கருத்தில் கொள்வார்கள் என்பதற்கு விடையில்லை… கர்நாடகத்தில் தமிழர்கள் பலரையும் தாக்கி, சொத்துக்களை சேதப்படுத்தி இன்று வரை தமிழில் பெயர் பலகையையும் அழிக்கும் வேலைகள் நடைபெறுகிறது. சமீபத்தில் KPN வாகனங்கள் பெங்களூரில் வைத்து எரிக்கப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இப்படி பல வகையிலும் பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த இறுதி தீர்ப்பு இனிப்பாக இருந்திருக்குமாக என்றால் இல்லை. 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்து வழங்கி இருக்கிறார்கள். அதற்கு சொல்லப்பட்ட காரணம், தமிழகத்தின் டெல்டா மாவட்டத்தின் நிலத்தடி நீர் 20 டிஎம்சி என்று. நிலத்தில் நீர் இருக்கிறது என்றால் , நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சு வயலுக்கு பாய்ச்ச தேவையான உபகரணங்கள் மோட்டார், அதற்கு தேவையான மின்சாரம் எல்லாம் சுலபமாக கிடைக்கிறதா என்பதையும் யோசித்திருக்க வேண்டும். இங்கு பல விவசாயிகள் வானத்தை பார்த்தும் நதி வரும் பாதையைப் பார்த்தும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மழை வந்தாலோ அல்லது நதி நீர் கிடைத்தாலோ தான் பிழைப்பு.

தொடர்ந்து விவசாயத் தற்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்ற மாநிலம் இது. இதில் நீர் குறைப்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும். கர்நாடகம் இந்த விவகாரத்திற்காக எப்போதும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும். அதில், பெரியளவு மாற்றுக் கருத்துகள் இருக்காது, ஒற்றை வரியில் காவிரி எங்களுக்கு தான் என்பார்கள். எதில் பிரிந்து இருந்தாலும் காவிரி விவகாரம் என்றால் சேர்ந்து கொள்வார்கள். நம்மூரில் பெற்றுத்தந்தாலும் அதற்கு காரணம் நாங்கள் தான் அவர்கள் இல்லை என்றும், இழந்து விட்டால்  அதற்கு காரணம் நாங்கள் இல்லை அவர்கள் என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஒரு நாளும் ஒற்றுமையாக போராடிய வரலாறு இல்லை. அனைவரும் போராடி இருந்தாலும் கூட தனித்தனியே அவரவர் கட்சி சார்பாக போராட்டங்கள் நடந்திருக்குமே தவிர ஒன்றுக்கூடி ஒருமித்தக் குரலாய் ஒலித்தது இல்லை. இன்றும் கூட ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசு சரியான வாதத்தை எடுத்து வைக்கவில்லை, கருணாநிதி பெற்று தந்த உரிமையை இழந்து விட்டது என்று கூறினார். பதிலுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும் இதற்கெல்லாம் திமுக தான் காரணம் என்று கூறியிருந்தார். Blame politics செய்வதில் இருந்து இன்னும் இவர்கள் விடுபட்டதாய் தெரியவில்லை. இன்னொருபுறம் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்கிறார். உண்மையில் அக்கறை இருந்திருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க என்றோ மத்திய அரசை பணித்திருக்கலாம்.

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பால் தமிழகத்திற்கு எத்தகைய நன்மையையும் இல்லை என்று தமிழக விவசாய அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கின்றன. மேலும், உச்ச நீதிமன்றம் அறிவித்த 177.25 டிஎம்சி தண்ணீரையாவது கர்நாடகா தடையில்லாமல் அளிக்குமா என்பதே சந்தேகம் என்கிறார்கள் தமிழக விவசாயிகள்…

பாஜகவின் முரண்பட்ட பேச்சுக்கள் :

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரீனாவில் போராட்டத்தைத் துவங்கியவர்களை காவல்துறை கைது செய்தனர். அதன்பின் மெரீனாவில் அதிகளவில் போலீஸார் குவிந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும்( ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தவிர) மத்திய அரசு எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறியது போன்று மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஆளும் பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை. அதற்கான திட்டத்தை மட்டுமே வகுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிவித்து வந்தது. இதையேதான் கர்நாடகா அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம். தீர்ப்பில் அவ்வாறு ஏதும் கூறவில்லை என்று முட்டுக்கட்டையாக இருந்தனர். ஆக, கர்நாடகா மற்றும் மத்திய அரசின் எண்ணம் ஒரே போக்கில் இருந்துள்ளது.

ஆனால், தற்போது தமிழகத்தின் சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் சார்ப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இறுதி தீர்ப்பில் கூறியிருப்பது காவிரி மேலாண்மை வாரியமா அல்லது அது எந்த மாதிரியான திட்டம் என்று விளக்கம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித்  தீர்ப்பு வந்து 6 வாரங்கள் ஆகிய நிலையில், தற்போதுதான் விளக்கமே கேட்டுள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் இத்தகைய மனு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரண்பட்டதாகும்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டசபைத் தேர்தலை கணக்கில் கொண்டு  நடைபெறுவதாக எண்ணத் தோன்றுகிறது.

Please complete the required fields.




Back to top button
loader