This article is from Sep 16, 2018

செங்கோட்டை விநாயகர் ஊர்வல கலவரம்..!!

இந்து மதக் கடவுளான விநாயகரின் பிறந்தநாள் விழாவாக விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் வெகு பிரமாண்டமாகக்  கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து ஊர்வலமாக கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் கரைப்பர். குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தென்மாநிலங்களிலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு சிலையை வைத்து வழிபடுவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறுவதாக கூறுவதுண்டு.  மராட்டிய மன்னர் வீர சிவாஜி தோற்றுவித்த வழிபாட்டு முறையை அவரின் வழி வந்தவர்கள் தடைப்படாமல் நடந்தி வந்தனர். இருப்பினும், அவை கோவில் அல்லது உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் போன்றவர்களால் நடத்தப்பட்டு வந்தது. முதல் முறையாக சிலரால் மட்டுமே நடத்தப்பட்டு வந்த விழாவை சாதிய பாகுபாடின்றி பொதுமக்கள் ஒன்று கூடி விநாயகர் சிலையை அமைத்து கொண்டாடும் இந்து சமூகத்தின் பொது விழாவாக  மாற்றியவர் சுதந்திரப் போராட்ட வீரர் பாலக்கங்காதரத் திலகர். 

1893 ஆம் ஆண்டில் திலகர் சமூகம் மற்றும் மத நிகழ்ச்சியாக விநாயகர் உத்சவத்தை ஏற்படுத்தினார். இதில், விநாயகரின் பெரிய பெரிய சிலைகள், படங்கள் வைத்து 10 நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. மேலும், பிரிட்டிஷ் ஒடுக்குமுறையில் இருந்த காரணத்தினால் அனைத்து சாதி, மதத்தை சேர்ந்த மக்களும் ஒன்றுக்கூடி சமூகம், அரசியல் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக அமைந்தது.

இன்று விநாயகர் சதுர்த்தி என்றாலே எங்கே எப்பொழுது கலவரம் வெடிக்கும் என்ற அச்சமே மேலோங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு இடத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஹிந்து-முஸ்லீம் சமூகம் இடையே மோதல் உருவாகி விடுகிறது. அவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்வது என்பது ஆச்சரியமானதாகவும், வேதனையானதாகவும் உள்ளது. 

2018 செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்த உடன் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் உண்டாகி கலவரமாக மாறியுள்ளது. 

செங்கோட்டையில் விநாயகர் சதுர்தியை முன்னிட்டு 36 சிலைகள் வைக்கப்பட்டன. அச்சிலைகளை ஒம்காளி திடலில் வைக்க வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஊர்வலமானது முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் பெரிய பள்ளி வாசல் வழியாக செல்லும் பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்தவர்கள் மாற்றுப்பாதையில் செல்லும்படி கூறினர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒரு தரப்பினருக்கும் இடையே மோதல் உண்டாகியது. கல் மற்றும் பாட்டில்கள் கொண்டு தாக்கியதில் விநாயகர் சிலை சேதம் அடைந்தது, அங்கிருந்த கடைகள் மற்றும் வாகனங்களை கும்பல் சேதப்படுத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்த மோதலில் 3 போலீசார் உள்பட மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

திருநெல்வேலி டி.ஐ.ஜி கபில்குமார் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் போலீஸ் படையுடன் சென்று அங்குள்ள ஹிந்து , முஸ்லீம் சமூகத்தினர் இடையே பேச்சுவார்த்தையை நள்ளிரவு 2.30 மணி வரை நடத்தினர். ஆனால், அவர்களால் சமரசம் செய்வதில் தோல்வி ஏற்பட்டால் காலை மாவட்ட ஆட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடந்த திட்டமிடப்பட்டடது.

இதன் விளைவால் செங்கோட்டை மற்றும் தென்காசி தாலுகாவில் 15-ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரன் அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை காலை முஸ்லீம் சமூக மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மறுபுறம் துணைக் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் ஹிந்து சமூகத்தினரை அமைதிப்படுத்தினார். அதன்பின் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊர்வலமானது பாரம்பரிய வழியில் போலீஸ் பாதுகாப்பு உடன் நடத்தப்படும், தேவையற்ற கோஷங்கள் ஊர்வலத்தில் இடம்பெறக் கூடாது என அறிவுறுத்தினர்.

பின்னர், மதியம் 3 மணியளவில் 600 போலீஸ் உடன் ஊர்வலமாக 36 விநாயகர் சிலைகளும் எடுத்து சென்றனர். பெரிய பள்ளிவாசல் பகுதியை கடக்கும் பொழுது தவறான கோசங்கள் எழுந்தது. பின் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் செல்லும் பொழுது கல் வீச்சு நடந்தது. இதில் செய்தியாளர்கள் 3 பேர் காயமடைந்தனர். ஊர்வலம் தடைப்பட்டு மீண்டும் ஊர்வலம் தொடங்கி மாலை குண்டாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 

” கலவரம் நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் ஷில்பா, கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்ட போதும் அமைதி காத்த இஸ்லாமிய மக்களுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்து கொண்டார். மேலும், கலவரம் குறித்து சிசிடிவி காட்சிகள் போன்ற ஆதாரங்கள் இருப்பதால் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து உள்ளார் ” 

 செங்கோட்டை விநாயகர் ஊர்வலக் கலவரம் தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாடு ஊர்வலம் கலவரத்தை தூண்டும் விதத்தில் அமைவதில்லை. அதை முன்னெடுத்து செல்பவர்கள் மற்றும் அதற்கு எதிரானவர்கள் போன்ற சிலரால் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இந்து கோவில்களில் நடைபெறும் பெரு விழாக்கில் நடைபெறாத வன்முறை, மோதல்கள் ஊர்வல நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறுவது ஏன் ? மதம் கடந்த ஒற்றுமை நிறைந்த மாநிலத்தில் மத கலவரம் உருவாவதற்கு காரணம் யார் ?  சில அமைப்பை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே வன்முறையை தூண்டிவிடுகின்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் மத வழிபாட்டைக் கடந்து அரசியல் ஆகி விட்டது. ஹிந்து-முஸ்லீம் மதத்தில் இருக்கும் சில மத அடிப்படைவாதிகளின் தவறான எண்ணத்தில் உதிப்பதே மதக் கலவரங்கள்..!!!

Communal clashes in Shencottai over Vinayaka Chathurthi procession

Lokamanya Bal Gangadhar Tilak, the architect of present day Ganesh Chathurthi celebrations

Please complete the required fields.




Back to top button
loader