This article is from May 07, 2018

விண்ணில் பாய்ந்தது வில்லெட் ஓவியாவின் அனிதா சாட்..!

திருச்சியைச் சேர்ந்த 17 வயதே ஆன வில்லெட் ஓவியா, மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக நாட்டமும் கொண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏழாம் அறிவு என்ற தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் உந்துதலின் பெயரில் அவர் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற வாயுக்களின் அளவைக் கணக்கிடுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  

அதற்கான செயற்கைக்கோளை இக்னயிட் இந்தியா மற்றும் அக்னி பவுன்டேஷன் நிறுவனரும் ஏழாம் அறிவு நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான அக்னிஸ்வர் ஜெயப்ரகாஷின் ஆதரவால் செய்து வந்தார். செயற்கைக்கோள் உருவாக்க தேவையான அனைத்து உதவியையும் அக்னிஸ்வர் ஜெயப்ரகாஷ் கவனித்துக் கொண்டதாக வில்லேட் ஓவியா கூறியுள்ளார். 

செயற்கைக்கோளின் வடிவமைப்பு, கொள்முதல் கூறுகள் மற்றும் வழிமுறைகளை சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸின் தலைவர் விமல் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் வில்லெட் ஓவியா செய்து வந்தார். காற்று மாசுபடுதலின் விளைவுகளைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதே இந்த செயற்கைக்கோளின் நோக்கமாகும். 500 கிராம் எடையில் இந்த லேசான செயற்கைக்கோளை வடிவமைத்து அதற்கு அனிதா சாட் என்ற பெயரையும் வழங்கியுள்ளார் வில்லெட் ஓவியா. கடந்த வருடம் நீட் பரீட்சை தோல்வியால் மனமுடைந்து தன் உயிரை விட்ட அனிதாவின் ஞாபகமாக வில்லெட் ஓவியா கண்டுபிடித்துள்ள செயற்கைக்கோளிற்கு அனிதாவின் பெயரை இட்டுள்ளார்.

வில்லெட் ஓவியா இதற்கு முன்பாக, ஸ்மார்ட் இரிகேஷன் சிஸ்டம் (மண்ணில் உள்ள மாசுகள் தொடர்பான), வேஸ்ட் வாட்டர் மேனஜ்மென்டிற்கு சோப்பு நீரை நல்ல நீராக மாற்றும் திட்டம், வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கு உதவும் ஹேண்ட் கெஸ்ச்சர் வோகலைசேர், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பேருந்து வசதி உள்ள நேரம் குறித்த ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம் போன்ற ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டிருந்தார். இதில், 10-ம் வகுப்பு படிக்கும் போது ஸ்மார்ட் இரிகேஷன் சிஸ்டம் ப்ரொஜெக்ட்டை அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் காண்பித்து 5 நிமிடங்கள் பேசியது தம் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வரும் வில்லேட் ஓவியா எதிர்பாராத விதமாகதான் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார். எனினும், மருத்துவர் ஆக வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் கனவு என்கிறார்.

செயற்கைக்கோள் விவரம் :

கோனிக்கல் கேப்சூளில் பொருத்தப்பட்டுள்ள 500 கிராம் செயற்கைக்கோள் ஹீலியம் பலூனின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. மூன்று மணி நேரத்தில் 15 கிமீ உயரம் செல்லும் இந்தச் செயற்கைகோள் வெப்பநிலை, அழுத்தம், மற்றும் காற்றின் தன்மையை அறியக்கூடிய சென்சார்கள், கைரோமீட்டர், நோக்குநிலை மற்றும் கோணவேகத்தை அறியக்கூடிய அக்ஸ்லேரோமீட்டர், GPS, உயரத்தை அறியக்கூடிய பாரோமீட்டர் மற்றும் செயற்கைக்கோள் பயணம் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய கேமரா உள்ளிட்டவைகளைக் கொண்டுள்ளது. இந்த கருவிகள் மூலம் கைப்பற்றப்படும் செய்திகள் செயற்கைக்கோளின் உதவியுடன் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள Aztra Labs வந்தடையும். 

பூமியின் மேலடுக்கை ஹீலியம் பலூன் நெருங்கும்போது பலூன் வெடித்து பாராச்சூட் இணைக்கப்பட்டுள்ள கேப்சூள் மட்டுமே கீழே இறங்கும்படி இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கேப்சூளை கடலில் விழுகச் செய்து அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளை மீட்டு பதிந்திருக்கும் டேட்டாவை மீட்டுக் கொள்ளலாம். அறியப்படும் வளிமண்டலத்தின் ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் பிற வாயுக்களின் அளவை வைத்து காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கைகளை கவர்ன்மென்ட் மேற்கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வில்லெட் ஓவியாவை சந்தித்து தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார் வில்லெட் ஓவியா. மே 6-ம் தேதி 7.30 மணியளவில் மெக்ஸிகோ சிட்டியில் இருந்து அனிதா சாட் விண்ணில் செலுத்தப்பட்டது. அதே நாளில் நீட் தேர்வை எதிர்கொண்டு உள்ளார் வில்லெட் ஓவியா.

தன்னை போன்று பல்வேறு ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை என்கிறார்.  மேலும், ஆசிரியர்களும், பள்ளியும் மாணவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்கிறார் வில்லெட் ஓவியா.

பாடப் புத்தகத்தில் இருப்பதை மட்டும் படித்து மதிப்பெண் பெற வேண்டும் என்பதே இன்றைய பெற்றோரின் எண்ணம். ஆனால், அறிவியல், மருத்துவம் போன்ற பல்வேறு துறைச் சார்ந்த ஆராய்ச்சியில் இன்றைய தலைமுறை மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டனர். இனி மாணவர்கள் தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறும் காலம் வெகுத் தொலைவில் இல்லை.

கனவு காணுங்கள் ” என்று அப்துல் கலாம் ஐயா கூறியது போன்று மாணவர்கள் அனைவரும் நீங்கள் கொண்ட ஆர்வத்தின் மீது கனவு காணுங்கள், அந்த கனவை மெய்பிக்க ஊன்று கோலாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். 

 

17 Years old tamilnadu girl builds satellite to study air pollution 

Please complete the required fields.




Back to top button
loader