1000 ஆண்டுகள் பழமையானச் சோழப் பேரரசர் சிலையை மீட்ட திரு. பொன்.மாணிக்கவேல்!

சோழப் பேரரசின் தலைநகரான தஞ்சைக்கு அழகே பேரரசர் முதலாம் ராஜராஜச் சோழன் கட்டிய தஞ்சை பெரியக் கோவில். 1000 ஆம் ஆண்டுகளையும் கடந்து அதன் சிறப்பும், தோற்றமும் சிதையாமல் இன்றும் கம்பீரமாக இருப்பது பெருமைப்பட வைக்கிறது. அத்தகைய பெருமை உடைய கோவிலின் 1000-ம் ஆண்டு பழமையான ராஜராஜச் சோழன் மற்றும் அவரின் பட்டத்தரசி உலகமாதேவி ஆகியோரின் 2  அடி உயர ஐம்பொன் சிலைகள் மாயமாகி 60 ஆண்டுகளை கடந்து இப்பொழுது மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டி குடமுழுக்கு நடைபெற்ற தருணத்தில் சோழ தளபதியான மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் ராஜராஜச் சோழன் மற்றும் உலகமாதேவி ஆகியோரின் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோவிலின் மூலவரை வணங்குவது போன்று வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்புடைய ஐம்பொன் சிலைகள் மாயமாகி உள்ளன.

தஞ்சை கோவிலின் ஆயிரமாண்டு விழா நடைபெறுவதற்கு முன்பாகவே இவ்விரு சிலைகள் காணாமல் போனது பற்றி அறிந்து அன்றைய திமுக ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கண்டறிந்த குழு மீட்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சி தோல்விலேயே முடிந்தன. அருங்காட்சியக உரிமையாளர்கள் தமிழக அரசு சார்பாக சென்ற குழுவின் கூற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

Read this article in English (beta)

இந்நிலையில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் குழு நடத்திய விசாரணையில் பல விஷயங்கள் கண்டறியப்பட்டன. 60 ஆண்டுகளுக்கு முன்பாக மாயமாகிய ராஜராஜச் சோழன் மற்றும் உலகமாதேவி ஆகியோரின் சிலைகள் மட்டுமின்றி இன்னும் பல சிலைகள் மாயமாகி உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிலைகள் மாயமாகியது குறித்து கோவில் நிர்வாகமும், அறநிலையத்துறையும் புகார் அளிக்காமல் அமைதியாகவே இருந்துள்ளனர். அதன்பின்னர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விசாரணை அதிகாரியான டி.ஜி.பி ராஜாராமன் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில், 60 ஆண்டுகளுக்கு முன்பாக இரு சிலைகளும் கோவில் நிர்வாகத்தினரால் திருடப்பட்டு சென்னை கெளதம் சாராபாய்க்கு இன்றைய மதிப்பில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றுள்ளனர். அதன்பின் இந்த இரு சிலைகள் குஜராத் சென்றுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கௌதம் சாராபாய் பவுண்டேசன் காலிகோ என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Advertisement

இதையறிந்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் உடனடியாக குஜராத் அருங்காட்சியகத்திற்கு மே 28-ம் தேதி சென்று சிலையை மீட்டுள்ளனர். ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அதிரடிப் படையினரால் மீட்கப்பட்ட ராஜராஜச் சோழன் மற்றும் உலகமாதேவியின் 2 உயர ஐம்பொன் சிலைகள் மே 31-ம் தேதி நவஜீவன் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இரு சிலைகளின் மதிப்பு 150 கோடி ரூபாய் இருக்கும் என்பதால் அதனை உரிய பாதுக்காப்பாக கொண்டு வரப்பட்டன.

சென்னை வந்த சிலைகளுக்கு வாத்தியங்கள் முழுங்க, மலர் தூவி சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தமிழக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், ரயில் பாதுகாப்பு குழு உறுப்பினர் என பலரும் சிலை மீட்கப்பட்டது குறித்து பேட்டி அளித்துள்ளனர்.

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அதிரடியாக சோழர் கால பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இரு சிலைகள் மட்டுமல்லாமல் தஞ்சை பெரிய கோவிலில் பழமையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டு உள்ளதை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டறிந்துள்ளார். மேலும், கைலாசநாதர் கோவிலில் இருந்த 4 பழமையான சிலைகள் திருடப்பட்டு போலியான சிலைகள் வைத்துள்ளனர். அதில் ஒன்றான நடராஜர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள சில சிலைகள் மாற்றப்பட்டுள்ளன என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக கோவில்களில் உள்ள பழமையான சிலைகள் கடத்தப்படுவது,போலியான சிலைகள் வைப்பது போன்ற நிகழ்வுகள் பற்றி அதிகம் பார்க்க முடிகிறது. மீட்கப்பட்ட சிலைகள் பற்றி கேள்விப்படுவது மகிழ்ச்சியை அளித்தாலும், மாயமாகிய சிலைகள் இன்னும் எத்தனை இருக்குமோ என்ற அதிர்ச்சியும் உடன் இருக்கிறது. தமிழகத்தின் பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு வரலாறுகள் அழிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். தொன்மையான சிலைகளை மீட்ட ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் அவர்களுக்கு தமிழக மக்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button