This article is from Sep 07, 2021

நூறு நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகிறதா?

வாட்ஸ் ஆப்பில் புழங்கும் பொய் செய்திகளுக்கு என்றும் பஞ்சம் இருந்ததில்லை. அவற்றுள் குறிப்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றி பல்வேறு வதந்திகளும், பொய்களும் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. நூறு நாள் வேலைத்திட்டத்தினால் மக்கள் சோம்பேறி ஆகிவிட்டார்கள். ‘அந்தத்திட்டத்தினால் விவசாயம் அழிகிறது’ , ‘அரசாங்கப்பணம் வீணாகிறது!’ போன்ற பல்வேறு தவறான, உண்மைக்கு ஒவ்வாத விஷயங்களை வாட்ஸ் ஆப்பில் பரப்புவதன் மூலம் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்தான எதிர்மறை பார்வை ஒன்று தமிழ் மக்களிடையே தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றது.

பல நேரங்களில் முன்னணி அரசியல்வாதிகளும் இந்த பொய் பிரச்சாரத்திற்கு துணை போனதுண்டு. சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் , நூறு நாள் வேலைத்திட்டம் மோசமானது என்றும், அது மக்களை சோம்பேறி ஆக்குவதாகவும், அதில் மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் செலவழித்து விடுகின்றனர் போன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் மேற்சொன்ன பொய்களை ஆதரிக்கும் வகையில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார். “விவசாயத்தொழிலில் இருந்து விவசாயக்கூலிகளை வெளியேற்றி அவர்களை சோம்பேறி ஆக்குவதுதான் நூறு நாள் வேலைத்திட்டம். அதனால் விவசாயம் நாசமாகிறது.” என்று சீமான் அவர்கள் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசியுள்ளார். விவசாயி சின்னத்தை தன் கட்சியின் சின்னமாக வைத்துக்கொண்டு சீமான் அவர்கள் இப்படி பேசுவது ஒரு நகைமுரண். சரி, இப்போது நூறு நாள் வேலைத்திட்டம் என்பது என்ன? அது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? போன்ற கேள்விகளுக்கான விடையை புள்ளிவிவரங்களுடன் இங்கே காண உள்ளோம்.

‘நூறு நாள் வேலைத்திட்டம்’ என்பது அடிப்படையில், விவசாயக்கூலி வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு வேலையை உறுதி செய்யும் ஒரு திட்டம். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும், குடும்பத்திற்கு 100 நாள் மட்டுமே வேலை, யாராவது ஒருவர் மட்டுமே வேளைக்கு செல்ல இயலும். முதன்முதலாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூலி கொடுக்கப்பட்டது. ஆக, 100 நாட்கள் வேலை செய்தபின் அவர்களுக்கு கிடைக்கும் தொகை என்பது ரூபாய் 10,000 மட்டுமே.

ஒரு வருட காலம் முழுமைக்கும் அந்த குடும்பத்துக்கு இத்திட்டத்தின் மூலம் சென்றுசேரும் தொகை என்பது ரூபாய் 10,000 தான். இதுவும் 100 நாள் வேலை கிடைத்தால் தான். எதார்த்தத்தில், 100 நாள் வேலை 100 நாட்களும் வேலை கிடைப்பதில்லை.

ஒரு வருடம் முழுவதையும் ஒரு குடும்பம் சமாளிக்க இது மிக மிக சொற்பமான கூலியாகத்தான் உள்ளது. இன்றைய நிலவரத்துக்கு ஒரு நாள் கூலி என்பது சற்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 – 2020ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின்படி, ஒரு நபருக்கான தினசரி கூலி , சராசரியாக 175 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வருடத்தில் நூறு நாள்களும் வேலை கொடுக்கப்பட்டதா என்றால், இல்லை! 2019 – 2020ஆம் வருடத்தில் சராசரியாக ஒரு நபருக்கு 38 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. வேலை கொடுக்கப்பட்ட நாள்களுக்கு மட்டுமே சம்பள கொடுக்கப்படும். அந்த அடிப்படையில் ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தொகை என்பது வெறும் ரூபாய் 6,650 மட்டுமே.

அடுத்து , 2020 – 2021ஆம் ஆண்டிற்கான நூறுநாள் வேலைத்திட்டத்தில் , ஒரு நபருக்கான சராசரி கூலி என்பது 204 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் சராசரியாக 42 நாள்கள் மட்டுமே வேலைநாள்களாக கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி அந்த ஆண்டில் ஒரு நபருக்கு/ ஒரு குடும்பத்துக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிடைத்த வருமானம் என்பது ரூபாய் 8,568 மட்டுமே. இந்த சொற்ப கூலியில் குடும்பத்தை நடத்துவதே மிகவும் கடினமான வேலையாக இருக்கும்நிலையில், இந்தத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சம்பாதிக்கும் பெரும்பகுதி பணத்தை இவ்விவசாயக்கூலிகள் டாஸ்மாக் சென்று செலவழிக்கிறார்கள் என்று வைக்கப்படும் குற்றச்சாட்டு கேலியான ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் 2019 – 2020ஆம் ஆண்டு 100 நாள் வேலை முழுவதுமாக கொடுக்கப்பட்டது 1.2 % நபர்களுக்கு மட்டும்தான் என்கிறது புள்ளிவிவரம்.

‘இந்தப்பணம் டாஸ்மாக்கில் செலவழிக்கப்படுகிறது’ என்ற பொதுக்கருத்து தவறு என்று நிரூபிக்க, இன்னும் ஒரு புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டோமானால் நமக்கு எளிதில் விளங்கிவிடும். அதாவது, இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் விவசாயக்கூலிகள் 78% பேர் பெண்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் செலவு செய்கிறார்கள் என்று கூறுவது நடைமுறைக்கு பொருந்தும் ஒன்றா?

மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் இத்திட்டம் அதிகளவில் வேலை கொடுக்கிறது. கிட்டத்தட்ட வருடத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் 60,000 முதல் 70,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்கின்றது. பொதுவாக , களத்துமேடுகளில் இவர்களின் மாற்றுத்திறனை காரணம்காட்டி இவர்களுக்கு வேலை மறுக்கப்படும். எந்தவொரு நிலக்கிழாரும் , தன் நிலத்தில் விவசாயக்கூலிகளை வேலையில் ஈடுபடுத்தும் ஒரு முதலாளியும், தங்கள் நிலங்களில் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு பெரும்பாலும் வைப்பதில்லை.

இதுமட்டுமின்றி , 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18% பேருக்கு இந்தத்திட்டம் வேலை வழங்குகிறது. பணியிலிருந்து ஓய்வு வயது என்பது 58 – 60 ஆக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வயோதிகத்தை காரணம்காட்டி பல இடங்களில் வேலை மறுக்கப்படும். இப்படி இந்த வயதுப்பிரிவினருக்கும் வேலைவாய்ப்பை கொடுத்து அவர்களுக்கான குறைந்தபட்ச சுயமரியாதையை இது உறுதி செய்கிறது. 20-30 வயது பிரிவில் உள்ளவர்கள் 2.4% பேர்தான் இந்த வேளைகளில் ஈடுபடுகின்றனர்.

இவற்றைத்தாண்டி இந்தத்திட்டம் செய்த முற்போக்கான ஒரு சமூக மாற்றம் , ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கூலியை உறுதி செய்தது. பல இடங்களில் அதிலும் குறிப்பாக விவசாயக்கூலிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படும்போது ஆணுக்கு அதிக சம்பளம், பெண்களுக்கு அதை விட குறைவான சம்பளம் கொடுக்கப்படுவது சமூக நடைமுறையாக உள்ளது. இதனை மாற்றி சமத்துவத்தை உறுதி செய்தது, இந்த நூறுநாள் வேலைத்திட்டம். இது , ஆணுக்கும் பெண்ணுக்கும் சம கூலி தர வேண்டிய நிர்பந்தத்தை இந்த சமூகத்தில் வாழும் பல்வேறு நிலக்கிழார்களுக்கு ஏற்படுத்தியது.

நூறுநாள் வேலைவாய்ப்புத்திட்டம் கொண்டுவரப்பட்டதற்கு மிகவும் அடிப்படையான முக்கியமான சில காரணங்கள் உள்ளன. விவசாயம் நிச்சயத்தன்மை கொண்ட ஒரு தொழில் கிடையாது. பல்வேறு இயற்கை காரணிகள் மற்றும் பல புறக்காரணிகள் சரியாக அமைந்து வந்தால் மட்டுமே நல்ல விளைச்சல் சாத்தியம் . அப்போதும் முப்போகமும் விளையும் என்பதற்கு எந்த நிச்சயமும் கிடையாது. எனவே விவசாய நிலங்களில் வேலை செய்பவர்களுக்கு 365 நாள்களும் வேலை உறுதி கிடையாது. அதுபோக , மழைவெள்ளம் , புயல் , ஆற்றில் நீர்வரத்து குறைவு என இயற்கை காரணிகளால் நல்ல விளைச்சல் நாசமாகும் வாய்ப்பு அதிகம். அப்படிப்பட்ட காலங்களில் விவசாய நிலம் வைத்திருப்போருக்கு எவ்வளவு இழப்போ அதை விட அங்கே வேலை செய்யும் விவசாயக்கூலிகளுக்கு இழப்பு அதிகம். பேசப்படாத பக்கங்களாகவே இவர்கள் உள்ளனர்.

பிழைப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொள்வது , வேறு ஊருக்கு வேலை தேடி செல்வது என இவ்விவசாயக் கூலிகள் படும் துன்பம் ஏராளம். இதனை பெருமளவு தவிர்க்க வந்த திட்டம்தான் நூறுநாள் வேலைவாய்ப்புத்திட்டம். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, விவசாயிகளின் தற்கொலை சரிந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வருடத்துக்கு இந்த திட்டத்தின்மூலம் விவசாயக் கூலி ஒருவரின் குடும்பத்துக்கு 7000 முதல் 8000 ரூபாய் மட்டுமே இத்திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.

இப்படி வருடத்துக்கு ரூபாய் 8000 வாங்கும் ‘விவசாயக்கூலிகள் சோம்பேறிகளாக உள்ளனர்’, ‘டாஸ்மாக்கில் வருகிற பணத்தை செலவு செய்கிறார்கள்’ என அதிகம் கவலைப்படுபவர்கள், நூறு நாள் வேலைத்திட்டத்தில் நடந்த சமீபத்திய ஊழல் பற்றி பேசத்தவறுகிறார்கள். சென்ற ஆண்டு இராசிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜீ என்பவர் ஆர்.டி.ஐ மூலம் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடந்த முறைகேடுகளை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளார். பலருக்கு வேலை கொடுத்ததாக போலியான பட்டியலைத் தயார் செய்து பொய்யாக கணக்கு காட்டியது, இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலைகளை முடித்துவிட்டு மனித சக்தியைப் பயன்படுத்தி வேலை செய்ததுபோல் ஆவணங்களை தயாரித்தது, குறைவான நபர்களை பயன்படுத்திவிட்டு அதிக நபர்களை ஈடுபடுத்தியதுபோல் போலிக் கணக்கு தயார் செய்தது போன்று பல்வேறு வகைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் மூலம் 4,200 கோடி ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் தெரியவருகிறது.

இது குறித்து சில நாள்களுக்கு முன் பேசிய தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஒரு பேட்டியில் , ” கடந்த ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. அது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் ” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி பேசுவதைத்தவிர்த்துவிட்டு, “விவசாய நிலம் உள்ளவர்களிடம் வேலை செய்ய, அவரகள் கொடுக்கும் கூலி போக கூடுதல் கூலி ஒன்றை அரசு தன் கையிலிருந்து அவ்விவசாயக்கூலிகளுக்கு தரவேண்டும்” என்று சீமான் கூறுகிறார். விவசாயக்கூலி ஒருவருக்கு அதிக கூலி கொடுப்பது அல்ல இந்த திட்டத்தின் நோக்கம். விளைச்சல் அற்று வேலையே இல்லாது வருமானம் துளியும் இல்லாத சமயம் விவசாயக்கூலிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம். மேலும் சீமான் அவர்கள் சொல்வதுபோல பிறர் நிலத்தில் வேலை செய்ய அரசு பணம் கொடுத்தால் அந்த நிலத்தின் முதலாளி தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு கூலி தருவார் என்பது என்ன நிச்சயம்? இப்படி பல்வேறு சிக்கல்கள் இதில் உள்ளன.

விவசாயக்கூலிகளின் வாழ்வை மேம்படுத்தவும், அவர்களை தற்கொலைகளில் இருந்தும் , இடப்பெயர்வுகளில் இருந்தும் காப்பாற்றும் திட்டமாக இது உள்ளது. மேலும் இதன்மூலம் பெரும்பகுதி பலனைப்பெறுபவர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயோதிகர்கள். இப்படி பல்வேறு வகையில் இது நாம் வரவேற்கக்கூடிய திட்டமாக உள்ளது. எனவே இப்படிப்பட்ட உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள நாம் தேடவேண்டியது முறையான சரியான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் தான் வாட்ஸ் ஆப் பார்வேடுகளை அல்ல.

ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கே வெறும்10,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் வருமானம் அவர்களை எப்படி சோம்பேறியாக்கும். 10,000 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்குற பணத்தை வைத்து ஒரு குடும்பம் ஆண்டு முழுவதும் வேறு வேலையே செய்யாமல் அல்லது இந்த 10,000த்தை வைத்து சோம்பேறியாக முடியும் என்று சொல்பவர்கள், சொல்லும் சொல்லில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா ? தங்களுடைய சொகுசு காருக்கு ஒரு நாள் போடுகின்ற பெட்ரோல் விலையையாவது அவர்கள் சிந்தித்து பார்ப்பார்களா ? அதைவிடக் குறைவான ஒரு வருமானத்தை ஒரு குடும்பம் வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொள்கிறது. அதை சோம்பேறித்தனத்தை தரும், டாஸ்மாக்கிற்கு செலவு செய்ய உதவும் என்று சொல்வதில் என்ன புரிதலும், அர்த்தமும் இருக்கிறது. குறைந்தபட்சம் அவர்களுக்கு அரை வயிறு கஞ்சிக்கும், அவர்களுடைய வாழ்வாதாரத்தில் ஒரு சிறு மாற்றத்தை தரக்கூடிய, 18 சதவீதம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய, மாற்றுத்திறனாளிகள் பயன்படக்கூடிய, கிட்டத்தட்ட 80% பெண்களுக்கு திட்டத்தின் மீது இவர்கள் சொல்வதெல்லாம் வெறும் வன்மமே !

links : 

4201-crores-exposed-in-rural-100-day-program

minister-periyakaruppan

Mahatma Gandhi National Rural Employment Gurantee Act

Please complete the required fields.




Back to top button
loader