This article is from Jun 24, 2019

” 10 ரூபாய் நாணயம் ” தீண்டத்தகாத பொருளா ? வாங்க மறுப்பதேன் !

2011-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. 10 ரூபாய் மதிப்பிற்கும் , நாணயத்திற்கு ராசியே இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு கட்டத்தில் ” 10 ரூபாய் நாணயங்கள் ” செல்லாது என்ற புரளி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

2016-ம் ஆண்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பொழுது 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது என்ற புரளி பரவி உண்மை என மக்களை நம்ப வைத்தது. இதனால் பேருந்து, கடைகளில் கூட 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தனர். இன்னும் சில கிராமங்களில் செல்லும் மினி பஸ் உள்ளிட்ட பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் திருப்பூர் போக்குவரத்து பணிமனை வெளியிட்ட சுற்றறிக்கையில், ” நடத்துனர்கள் பேருந்தில் பணிபுரியும் பொழுது பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயத்தை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும்பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும் பொழுது 10 ரூபாய் நாணயத்தை தவிர்க்குமாறு இதன் மூலம் நடத்துனர்களுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது ” என கூறி இருந்தனர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 10 ரூபாய் நாணயங்களை வாங்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க அரசு போக்குவரத்து பணிமனைக்கு அதிகாரம் உள்ளதா ? என கேள்விகள் எழுந்தது. இதனால் சர்ச்சையான சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்து பணிமனை திரும்ப பெற்றுக் கொண்டது.

இதற்கு திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாம் மண்டல மேலாளர் அளித்த விளக்கத்தில், ” வங்கிகளில் வசூல் தொகையை செலுத்தும் பொழுது ஏற்படும் இடையூறுகளை தடுக்கவே சுற்றறிக்கை வெளியானது. ஆனால், அது பொதுமக்களால் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டு உள்ளது. சுற்றறிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்ததால் திரும்ப பெறப்பட்டது ” என கூறியுள்ளனர். 

10 ரூபாய் நாணயங்கள் என்றும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது. சில வங்கிகளில் கூட முறையான காரணங்கள் கூறாமல் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். 2017 டிசம்பரில் புதுச்சேரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் அளித்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்த வீடியோ வைரலாகியது.

10 ரூபாய் நாணயம் தொடர்பாக தனியார் வங்கி ஊழியரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, தற்பொழுது எங்கள் வங்கியில் டெபாசிட் செய்யும் பொழுது 10 ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும், வாங்க மறுப்பது குற்றம் என்று ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது.

ஆனாலும் கூட சில வங்கிகளில் பெரிய தொகையில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுப்பதால் பேருந்து நடத்துனர்கள் பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கின்றனர்.

அதன் விளைவே திருப்பூர் போக்குவரத்து பணிமனை வெளியிட்ட சுற்றறிக்கை. 10 நாணயங்களை தீண்டத்தகாதது போன்று அனைவரும் ஒதுக்கியே வைக்கின்றனர். இதனால் சிரமத்திற்கு உள்ளாவது மக்கள் மட்டுமே !

Proof : 

RBI reiterates legal tender status of ₹ 10 coins of different designs

Please complete the required fields.




Back to top button
loader