This article is from Nov 03, 2020

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்தி திணிப்பு இருப்பதாக சர்ச்சை| தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் அவ்வபோது எழுந்து கொண்டே இருக்கின்றன. தற்போது 10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் இந்தி மொழியை திணிக்கும் வகையில் கேள்வி, பதில் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

10-ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தின் 5-ம் இயல் பிரிவில் திறன் அறிவோம் பகுதியில் இடம்பெற்ற குறுவினா ஒன்றில், தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் 3-வது மொழியைக் குறிப்பிட்டு காரணம் எழுதுக ” எனும் கேள்விக்கு விடையாக ” இந்தி கற்க விரும்பும் காரணம் எனக் கூறி,

இந்தி நமது நாட்டின் தேசிய மொழி, இந்தி இந்திய பாராளுமன்ற மொழி, பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி, அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி, வடநாட்டு மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளவும் உதவும் மொழி இந்தி ” என விடையும் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேள்வி, பதில் இடம்பெற்று இருக்கும் பக்கமே சமூக வலைதளத்தில் சர்ச்சையாகி பகிரப்பட்டு வருகிறது.

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் மூன்றாம் மொழியாக இந்தி மொழியை ஊக்குவிக்கும் வகையில் கேள்வி, பதில் இருப்பதாக சர்ச்சையான விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்கையில், ” பாடப்புத்தகத்தில் இந்தி மொழி பற்றிய எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை எனவும், இந்தி மொழி திணிப்பு என பரவும் தகவல் தவறானது எனக் கூறியுள்ளனர். மேலும், பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு தனியார் பதிப்பங்களின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் உரைகளில் யாரேனும் இந்தி மொழி தொடர்பாக விடைகளை எழுதியிருக்கலாம் எனவும், அதற்கும் அரசிற்கும் தொடர்பில்லை ” என கல்வித்துத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை, இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே என நன்கு அறிந்து இருக்கிறோம். ஆனால், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றேத் தொடர்ந்து குறிப்பிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader