கூலி தொழிலாளி உருவாக்கிய நூலகத்தில் தீ.. 11,000 புத்தகங்கள் எரிந்து நாசம்!

முதியவர் ஒருவர் தான் வாழும் பகுதியில் உள்ள மக்கள் படிப்பதற்காக நடத்தி வந்த பொது நூலகம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பதினோரு ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் தீயில் கருகிய சம்பவம் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது .
62 வயதான சையத் இசாக் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவர் தான் வாழும் பகுதியில் உள்ள மக்கள் அதிகமாக புத்தகங்களைப் படிக்க வேண்டி கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் அப்பகுதியில் பொது நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனிடையில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அவரது நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் நூலகம் அருகே வசிக்கும் ஒருவர் சையதுக்கு தீ விபத்து குறித்து தகவல் கொடுத்துள்ளார். ஆனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சையதால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. நூலகத்த்தில் உள்ள 11,000 புத்தகங்களும் தீயில் கருகின.காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் இந்த நூலகம் தினமும் பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு சையத் தெரிவித்ததாவது, “ இதற்கு முன்பே சிலர் நூலகம் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தி இருந்ததாகவும், இச்சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது.” என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக உதயகிரி போலீசில் சையத் புகார் அளித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“சையத் இஷாக் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எல்லா கோணங்களிலிருந்தும் வழக்கை விசாரித்து வருவதாகவும், நூலகத்திற்கு அருகில் இருக்கும் கடையில் இருந்தோ அல்லது அருகிலுள்ள மின்கம்பத்திலிருந்தோ தற்செயலாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிப்பதாகவும்” உதயகிரி போலீசார் தெரிவித்துள்ளனர்.
“ அனைத்து மதங்களையும் சார்ந்த புத்தகங்கள், குவெம்பு போன்ற கவிஞர்களின் புத்தகங்கள், சுதந்திர போராளிகள் தொடர்பான புத்தகங்கள் என அனைத்து வகையான புத்தகங்களும் தன் நூலகத்தில் இடம்பெற்றிருந்தது” என சையத் தெரிவித்தார். இது தவிர கிட்டத்தட்ட 3000 பகவத் கீதை புத்தகங்கள், குரான், பைபிள் மற்றும் தமிழ் ,கன்னடம், உருது, ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் தினசரி செய்தித்தாள்கள் தன்னுடைய நூலகத்தில் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“நாங்கள் குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள். சிறுவயதில் என்னால் கல்வி கற்க முடியவில்லை. ஆனால் என் மக்கள் படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். எனது நூலகங்களில் கன்னடம் மற்றும் உருது மொழி புத்தகங்கள் இருக்கும். கன்னட மொழி செழித்து வளர வேண்டும் என விரும்புகிறேன். கன்னட மொழியின் வளர்ச்சியை விரும்பாத சிலரே நூலகத்தை எரிக்கச் சதி செய்திருக்கிறார்கள்.” என குற்றம் சாட்டினார்.
மேலும், “இதை முடிவாக கருத நான் விரும்பவில்லை. இந்த நூலகம் எரிந்திருக்கலாம் ஆனால் என் முயற்சியை நான் கைவிடப்போவதில்லை. இந்த இடத்துலயே புதிய நூலகம் ஒன்றை அமைக்க விரும்புவதாக நம்பிக்கையடன் கூறிய சையத் இசாகிற்கு சமூக வலைத்தளங்களில் இருந்து ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது. அவர் புதிய நூலகத்தை அமைக்க பலரும் உதவி அளித்துவருகின்றனர்.
https://twitter.com/ArjunNamboo/status/1380822533235044354?s=19
Help Syed Issaq To Rebuild His Libraryhttps://t.co/yrF4VMr2H2
— Mohammed Zubair (@zoo_bear) April 10, 2021
Links:
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.