ஆண்டுதோறும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய இதுதான் காரணமா?

மிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்புத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் தேர்வு எழுதிய 7,60,606 மாணாக்கர்களில் 7,19,196 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அதாவது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவியர் 3,93,890 (96.44%), மாணவர்கள் 3,25,305 (92.37%), மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த 5 ஆண்டுகளில் தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சில தரவுகளை வெளியிட்டுள்ளது. 

2022-23 கல்வியாண்டில் 94.03 சதவீதமாக இருந்தது 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம், 2023-24ம் கல்வியாண்டில் 94.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.  அதே நேரத்தில் 2020ம் ஆண்டு முதல் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதை அரசு வெளியிட்ட தகவலின் மூலம் அறிய முடிகிறது.

இத்தரவினை அடிப்படையாகக் கொண்டு ’பாலிமர் நியூஸ்’ விளக்கப்படம் (Bar chart) ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி பெற்ற சதவீதமும் ஒரே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. அப்படிக் காண்பிக்கப்பட்டதால் தேர்ச்சி விகிதம் குறைந்ததுபோல் அப்படம் விளக்க முற்படுகிறது. ஆனால், உண்மை என்னவெனில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 

கொரோனா காலத்தில் தேர்வு நடத்த முடியாத சூழல் நிலவியதால் 2021ம் ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது. எனவே அவ்வாண்டு தேர்ச்சி 100 சதவீதமாக உள்ளது. அவ்வாண்டைத் தவிர்த்து மற்ற ஆண்டுகளை ஒப்பிட்டால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

 

12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறதா?

2020 முதல் 2024ம் ஆண்டு வரை பார்க்கையில் 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காண முடிகிறது (2021ம் ஆண்டை தவிர்த்து). இதற்குக் கடந்த ஆண்டுகளில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி அடைந்தவர்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

 

அதன்படி இக்கல்வியாண்டில் (2023-24) 12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் 2022ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பர். 

2022ம் ஆண்டு 8,21,993 மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்துள்ளனர் (G- 4,27,073 ; B- 3,94,920). 

2024ம் ஆண்டு 7,60,606 மாணவர்கள் 12ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர் (G- 4,08,440 ; B- 3,52,165 ; TG- 1).

இதன்படி பார்க்கையில் 2022ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 92.53 சதவீத மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்ததின் மூலம் 2024ம் ஆண்டு 12ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். மீதமுள்ள 7.5 சதவீதத்திலும் தொழிற்கல்வி சென்ற மாணவர்களும் இருக்கக் கூடும்.

மேலும் கடந்த ஆண்டுகளில் இவ்விகிதம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தோம். 2019ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் 91.47 சதவீதத்தினர் 2021ல் 12ம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். இதனைக் கொண்டு பார்க்கையில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு 12ம் வகுப்பு பள்ளிக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் விகிதம் அதிகரித்திருப்பதை அறிய முடியும். 

(2020 மற்றும் 2021ம் கல்வியாண்டில் 100 சதவீதம் 10ம் வகுப்பு தேர்ச்சி என்பதால் அவ்வாண்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விகிதத்தைக் கணக்கிடுவது என்பது சரியான ஒப்பீடாக இருக்காது)

கருவுறுதல் விகிதம் குறைதல்: 

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 2015ம் ஆண்டு 10,60,866 ஆக இருந்துள்ளது. இதுவே 2024ம் ஆண்டு 10ம் வகுப்பு தேர்வுக்காக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கையே  9,10,024 ஆக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

2011ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ் நாட்டினர் உள்ளனர். இந்த நிலை 2036ம் ஆண்டு 5.14 சதவீதமாகக் குறைந்து விடும் என ‘மின்ட்’ இணையதளம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இதற்குக் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவது ஒரு காரணமாக உள்ளது.

‘ரீபிளேஸ்மென்ட் லெவல் பெர்டிலிட்டி’ (Replacement level fertility) என்பது மக்கள் தொகையைக் குறையாமலும் அதிகமாகாமலும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை மாறும் போது அதே நிலையில் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான அளவை குறிப்பிடுவதாகும். 

மொத்த மக்கள் தொகையில், சராசரியாக ஒரு பெண் 2.1 குழந்தைகள் பெற்றெடுத்தால், மக்கள் தொகை Replacement level fertility அடைந்துள்ளதாகக் கருதப்படும். Total Fertility Rate 2.1க்கும் குறைவாக இருந்தால் காலப்போக்கில் மக்கள் தொகை குறையும். 2.1க்கு மேல் இருந்தால் மக்கள் தொகை அதிகரிக்கும். 

தமிழ்நாட்டில் Total Fertility Rate என்பது 2000களின் தொடக்கத்தில் இருந்தே 2.1க்கும் கீழாகவே இருந்து வருகிறது. NFHS-3ல் 1.8 ஆகவும், NFHS-4ல் 1.7 ஆகவும், NFHS-5ல் 1.8 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. (NFHS – National Family Health Survey)

மேலும் , 2022ம் ஆண்டு வெளியான ‘சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம்’  (Sample Registration System) ஆய்வின் படி தமிழ்நாட்டின் Total Fertility Rate 1.4 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2.1 எனக் கருதப்படும் Replacement level பெர்டிலிட்டி-யில் இருந்து மிகவும் குறைவானது. சுமார் 20 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் இந்நிலை நிலவிவருவதைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’, ’நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற பெயரில் அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டது. அத்திட்டங்களை முறையாகப் பின்பற்றி குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணிக்கையைக் குறைத்த சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 

அப்படி மக்கள் தொகை குறைந்ததின் வெளிப்பாடுதான் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம். 2011ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து எதிர் காலத்தில் தமிழ்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை அரசு கணித்து திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader