நீட் தேர்வு பலி..! உண்மைகளும், கொடுமைகளும்.

கடந்த ஆண்டில் நீட் தேர்வு வேண்டாம் என போராடி வந்த தமிழகத்தை இந்த ஆண்டு நீட் தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக முயற்சித்து வரும் பல மாணவர்களின் மருத்துவ கனவு வெறும் கனவாகவே போய்விடுமோ என எண்ணத் தோன்றுகிறது இன்றைய நீட் தேர்வுகளின் செயல்பாடுகள். தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கியது, கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவ மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமைகள் என பல விசயங்களில் உண்மைகள் சிலரால் மறைக்கப்படும் செயல்களும் நடைபெறுகிறது.
ராஜஸ்தானில் நீட் தேர்வு மையங்கள் :
தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படாமல் ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கினர். ஆனால், ராஜஸ்தான் மையங்களில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு எழுத ஒதுக்கப்படவில்லை என அரசை சார்ந்தவர்களும், சில சமூக வலைத்தள வாசிகளும் கூறிக் கொண்டு வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இருந்து பல மாணவர்கள் ராஜஸ்தானில் உள்ள நீட் மையங்களுக்கு தேர்வு எழுத சென்றனர் என்பதே உண்மை.
தமிழ்நாட்டின் தென்காசியைச் சேர்ந்த சுபாஷ் கோபிநாத் என்ற மாணவருக்கு ராஜஸ்தானின் உதய்பூர் மையம் ஒதுக்கியுள்ளது சி.பி.எஸ்.இ. சென்னையில் இருந்து 2311 கி.மீ தொலைவில் உள்ள உதய்பூர் நகருக்கு நீட் தேர்வு எழுத தனது தந்தையுடன் சென்றுள்ளார். தன் நீட் விண்ணப்பத்தின் போது திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய மூன்று மையங்களை மட்டுமே தேர்வு செய்ததாகவும், ராஜஸ்தானில் தேர்வு மையம் வழங்கியது அதிர்ச்சியை அளித்ததாக மாணவன் சுபாஷ் தெரிவித்துள்ளார். மாநிலப் பாடத்தில் ஆங்கிலவழிக் கல்வி பயின்ற சுபாஷ் வட இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே ஆங்கிலம் மொழியில் பேச முடிவதாகவும், தான் பார்த்த ஒரு சில ஹிந்தி படங்களில் இருந்து சில வார்த்தைகள்( உன் பெயர் என்ன) கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அவருடன் சேர்த்து அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 மாணவர்களுக்கு உதய்பூர் மையம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். சுபாஷ் மாணவன் மட்டுமின்றி பல மாணவர்களுக்கு ராஜஸ்தானில் உள்ள ஜெய்பூர், உதய்பூர், கோடா, அஜ்மீர், ஜோத்பூர், பிகானர் உள்ளிட்ட மையங்கள் வழங்கப்பட்டுள்ளது. சுபாஷ் போன்ற மாணவர்கள் நீட் தேர்விற்காக ராஜஸ்தான் வரை சென்றாலும், சில மாணவர்கள் தேர்வு எழுத செல்லவில்லை என்பதே வேதனையான உண்மை.
ராஜஸ்தான் நீட் மையங்களை தமிழக மாணவர்கள் தேர்வு செய்ததால் மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கியதாக சிலர் பொய்யுரைத்து வருகின்றனர் என்பது மாணவர்களின் கூற்றில் தெளிவாகிறது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் :
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று மாணவர்களை நீட் எழுத வைத்ததால் எழுந்த சர்ச்சை தொடர்பாக விளக்கமளித்துள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.
- தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 சதவீதம்.
- நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ, கடந்த 2017 ஆம் ஆண்டில் 149 மையங்களை அமைத்த நிலையில், இந்த ஆண்டு 170 மையங்களாக அதிகரித்துள்ளது.
- 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக 25,206 மாணவர்களுடன் சேர்த்து மொத்தம் 1,07,288 மாணவர்களுக்கு 170 மையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- மதுரை, திருச்சி நெல்லையைச் சேர்ந்த 3,685 மாணவர்களுக்கு சென்னையை விட எர்ணாகுளம் அருகில் என்பதால் அங்குள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற மாநிலத்தின் பல்வேறு மாணவர்களுக்கு அருகில் உள்ள மாநில மையங்கள் ஒதுக்கப்பட்டது போன்றே செயல்படுத்தப்பட்டுள்ளது.
- விருப்பமான மையங்களைத் தேர்வு செய்தவர்களை தவிர மற்ற தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம் மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவில்லை.
- தமிழ் மொழியை தேர்ந்தெடுத்துள்ள 24,720 மாணவர்களுக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் உள்ள நீட் மையங்கள் :
2018 நீட் தேர்வு எழுதும் 1,07,288 தமிழக மாணவர்களுக்கு 170 மையங்கள். சென்ற ஆண்டு 149 மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையைப் பொருத்து மையங்களை அதிகரித்து உள்ளனர். எனினும், மற்ற மாநிலங்களில் இங்குள்ள தேர்வு மையங்களை விட அதிகமாக உள்ளன.
உதாரணமாக, தமிழகத்தை விட குறைவாக 96,377 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுதும் கர்நாடகாவில் 187 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தை விட 17 மையங்கள் அதிகமாகும்.
3 விருப்ப மையங்கள் தேர்வு செய்வது:
நீட் தேர்விற்கு விருப்பமான மையங்களை தேர்வு செய்யும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள 3 நகரங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. தேர்வு எழுத விண்ணப்பம் அளிக்கும் போது தாங்கள் இருக்குமிடத்தையோ அல்லது அருகில் உள்ள நகரத்தையோ தான் கண்டிப்பாக விருப்பத் தேர்வாக கொடுக்க வேண்டும். மிக அதிக தொலைவில் வேறு மாநிலத்தில் இருக்கும் நகரத்தை கொடுக்க கூடாது. இல்லையென்றால் சி.பி.எஸ்.இ விருப்பத் தேர்வு செய்த இடங்களை விட்டு வேறு இடங்களை அளிக்கும் அல்லது விண்ணப்பதாரர் நிராகரிக்கப்படுவார். சி.பி.எஸ் .இ வேறு மாநில மையங்களை தேர்வு செய்யக் கூடாது என்று சொல்லி விட்டு அவர்களே வேறு மாநில மையங்களை மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை தேர்வு செய்யாத மாணவர்களுக்கு அங்குள்ள மையங்களை ஒதுக்கியுள்ளது சி.பி.எஸ்.இ. 2000 கி.மீ தொலைவில் உள்ள மாநிலத்தின் மையங்களை எந்தவொரு மாணவரும் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. கேரளா, கர்நாடகா அண்டை மாநிலமாக இருந்தாலும் அங்கு சென்று தேர்வை சந்திப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்தித்துள்ளனர் தமிழக மாணவர்கள். அதே, ராஜஸ்தான் என்றால் அவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்க இயலாது.
நீட் தேர்வில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் :
மே 6, 2018 நீட் தேர்வின் போது பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.
- திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் தனது தந்தையுடன் நீட் தேர்விற்கு எர்ணாகுளம் சென்றுள்ளார். இந்நிலையில், மாணவன் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போதே அவரின் தந்தை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.
- நீட் தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகளை கட்டுபாடுகள் என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். மாணவிகளின் துப்பட்டாவிற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டதை எப்படி புரிந்து கொள்வது. இங்கு துப்பட்டா போடாத பெண்களை கலாச்சாரம் கெட்டு விட்டது என்று திட்டும் ஆட்கள் வலுக்கட்டாயமாய் துப்பட்டாவை எடுக்க சொன்னதை எப்படி பார்க்கிறார்கள்.
- மதுரையில் நீட் மையத்தில் கேள்வித் தாளில் தமிழ் மொழிக்கு பதிலாக இந்தி மொழி கேள்வித் தாள் வழங்கப்பட்டதால் 2 மணி நேரம் தேர்வு தாமதமாகி உள்ளது.
Care and welfare மற்றும் ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் :
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை care and welfare செய்துள்ளனர். எர்ணாகுளம் உள்ளிட்ட மையங்களுக்கு 25 மாணவர்களுக்கு( பெற்றோர் உள்பட) மேலாக பேருந்து வசதி உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உதவி வேண்டி வந்த 1,500 அழைப்புகளில் ஏழை மாணவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர். மேலும், ராஜஸ்தான் மையத்திற்கு செல்ல உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், அதற்கும் ஏற்பாடு செய்ய தயாராக இருந்தும் மாணவனின் அச்சத்தால் உதவி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர்.
ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொண்டு பேசும் போது, இங்கு தமிழக மாணவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். ராஜஸ்தானில் மாணவர்கள் தேர்வு எழுதவே இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறு. நம்மை தொடர்பு கொண்டவர்களை வரவேற்று தேவையான உதவியை செய்து வருகிறோம் என்றார்கள். செய்தி சேகரிப்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ள ரிப்போர்டரை தொடர்பு கொண்டோம். 6.15 மணிக்கு வர வேண்டிய ரயில் இன்று தாமதமாக 7.30 க்கு தான் வந்தடைந்துள்ளது. இதில், மூன்று மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது தமிழ்நாட்டு மையத்திலேயே எழுத விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், இங்கு வழங்கி விட்டார்கள் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். ஆக, கவனக் குறைவால் இத்தனை மாணவர்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், எதிர்பாராத விதமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்பதையும் ஏற்க இயலாது. ஏனென்றால், பிற மாநிலங்களில் தேர்வு எழுத இடம் ஒதுக்கிய பின் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி தமிழகத்திலேயே தேர்வை நடத்தி இருக்கலாம் . ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது சி.பி.எஸ்.இ. போதுமான மையங்களை அமைக்காமல் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் இவ்வாறான சிக்கல் நடந்திருப்பது ஏன் ?
நீட் தேர்வு பல்வேறு சர்ச்சையை உருவாக்கிய நிலையில், தேர்வை சந்திக்க துணிவுடன் இருக்கும் மாணவர்களுக்கு கூட பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது 2018 நீட்…
TN boy travels 3,100km for NEET
NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (SESSION 2018-19)
HRD ministry issues clarification on NEET centre