This article is from Dec 30, 2020

2020-ல் உயிருடன் இருக்கும் பிரபலங்கள் இறந்ததாகப் பரவிய வதந்திகள் !

2020-ஐ மிக மோசமான ஆண்டாக குறிப்பிட்டு பேசுவதும், மீம் பகிர்வதும் சமூக வலைதளங்களில் இன்றளவும் முடிந்தபாடில்லை. 2020-ல் கொரோனா வைரசால் ஏற்பட்ட உயிரிழப்புகள் உலக அளவில் இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்க அதற்குள் புதிய உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது, வைரஸ் பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுவது, முக்கிய பிரபலங்கள் உயிரிழந்தது உள்ளிட்டவையால் இந்த ஆண்டே மோசமானது எனக் கூற காரணமாகின.

இதற்கிடையில்தான், உயிருடன் இருக்கும் பிரபலங்களை இறந்ததாகவும், உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் பொய் செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்துள்ளது.

1. கபில்தேவ் 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அக்டோபர் 23-ம் தேதி ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சை முடிந்த சில நாட்களில் இதய கோளாறு காரணமாக உயிரிழந்தார் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், நான் நலமுடன் இருப்பதாக கபில்தேவ் பேசும் வீடியோ வதந்திகளுக்கு எதிராக வெளியாகியது.

2. அனுராக் காஷ்யப் 

2020 செப்டம்பரில் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்து விட்டதாக ப்ளூ டிக் வாங்கிய KRK Box Office ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டது.

ஆனால், அந்த பதிவுடன், ” நீங்கள் அதிக படங்களை உருவாக்க வேண்டும் எனக் கூறி எமதர்மன் தன்னை மீண்டும் வீட்டில் விட்டு சென்றதாக ” என அனுராக் காஷ்யப் கிண்டல் செய்து ட்வீட் செய்து இருந்தார்.

3. ஹேமா மாலினி 

பிரபல திரைப்பட நடிகையும், பாஜக கட்சியின் எம்பியுமான ஹேமா மாலினி இதய கோளாறு மற்றும் சுவாசப் பிரச்சனை காரணமாக ஜூலை மாதம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் அவரின் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது. ஆனால், என்னுடைய அம்மா நலமுடன் இருக்கிறார் என வதந்தி குறித்து ஹேமா மாலினி மகள் ட்வீட் செய்து இருந்தார்.

2015-ம் ஆண்டு ஹேமா மாலினி கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி வதந்திகளை பரப்பி உள்ளனர்.

4. முலாயம் சிங் யாதவ் 

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உயிரிழந்து விட்டதாக அக்டோபர் மாதத்தில் வதந்திகள் பரவின. அக்டோபர் 3-ம் தேதி அவ்ரையாவில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 92 வயதான முலாயம் சிங் யாதவ் என்பவர் உயிரிழந்தார். பெயர் ஒற்றுமை காரணமாக தவறான செய்தி பரவியது.

5. ஜெஃப் பெசோஸ் 

கடந்த ஜூலை மாதம் அமேசான் வணிக நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இறந்து விட்டதாக RIPjeffBezos எனும் ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டது. ஜெஃப் பெசோஸ் இறந்து விட்டதாக பரவிய செய்தி வதந்தி என அறிந்த பிறகு கிண்டலுக்காக அந்த ஹாஸ்டேக்கை பகிரத் தொடங்கினர்.

Please complete the required fields.




Back to top button
loader