2020-ல் அரசியல் கட்சிகள் தொடர்பாக யூடர்ன் கண்டறிந்த புரளிகளின் புள்ளி விவரம் !

இந்திய சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசியல் சார்ந்தப் புரளி செய்திகள், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டில் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்த எண்ணற்ற புரளிகள் செய்திகளை நாம் கண்டறிந்து உள்ளோம். இவற்றில், அரசியல் கட்சிகள் தொடர்பாக நாம் கண்டறிந்து மக்களுக்கு தெளிவுபடுத்திய புரளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை இங்கே காண்போம்.
ஆதரவாக பரப்பப்பட்ட பொய்கள் :
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக அதன் ஆதரவு பக்கம்/ சார்பாளர்கள்/ ஆதரவாளர்கள்/ தொண்டர்களால் பரப்பப்பட்ட பொய் செய்திகளை பொய் என நிரூபித்து நாம் வெளியிட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை மொத்தம் 31.
கட்சி | ஆதரவான பொய்கள் |
திமுக | 6 |
அதிமுக | 3 |
பாஜக | 19 |
மக்கள் நீதி மய்யம் | 0 |
ரஜினி | 2 |
பாமக | 0 |
காங்கிரஸ் | 1 |
நாம் தமிழர் கட்சி | 0 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 0 |
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான பொய் செய்திகள் குறித்து வெளியிட்ட கட்டுரைகளில், பாஜக (19), திமுக (6), அதிமுக(3), ரஜினி(2), காங்கிரஸ்(1) எண்ணிக்கை கொண்ட கட்டுரைகளை நாம் வெளியிட்டு உள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் பரப்பிய 19 பொய் செய்திகளை நாம் பொய் என நிரூபித்து உள்ளோம். இதனை சதவீத அடிப்படையில் கீழே காணலாம்.
எதிராக பரப்பப்பட்ட பொய்கள் :
அரசியல் கட்சிகளுக்கு எதிராக எதிர் கட்சியினரின் ஆதரவு பக்கங்கள்/ ஆதரவாளர்கள்/ தொண்டர்களால் மற்றும் பிறரால் பரப்பப்பட்ட பொய் செய்திகளை பொய் என நிரூபித்து நாம் வெளியிட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை மொத்தம் 72.
கட்சி | எதிரான பொய்கள் |
திமுக | 13 |
அதிமுக | 11 |
பாஜக | 27 |
மக்கள் நீதி மய்யம் | 2 |
ரஜினி | 4 |
பாமக | 1 |
காங்கிரஸ் | 7 |
நாம் தமிழர் கட்சி | 3 |
விடுதலை சிறுத்தைகள் கட்சி | 2 |
கம்யூனிஸ்ட் | 2 |
இதில், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான 27 பொய் செய்திகளும், திமுகவிற்கு எதிரான 13 பொய் செய்திகளும், அதிமுகவிற்கு எதிரான 11 பொய் செய்திகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், மக்கள் நீதி மய்யம்(2), ரஜினி(4), பாமக(1), காங்கிரஸ்(7), நாம் தமிழர் கட்சி(3), விடுதலை சிறுத்தைகள் கட்சி(2), கம்யூனிஸ்ட்(2) உள்ளிட்டவையும்அடங்கும். இதனை சதவீத அடிப்படையில் கீழே காணலாம்.
2020-ல் மட்டும் பாஜகவிற்கு ஆதரவாக பரப்பப்பட்ட பொய்கள் தொடர்பாக 19 கட்டுரைகளும் மற்றும் பாஜகவிற்கு எதிராக பரப்பப்பட்ட பொய்கள் தொடர்பாக 27 கட்டுரைகளும் என ஆகிய இரண்டிலும் பாஜக கட்சி தொடர்பான புரளி செய்திகளே அதிகம். அடுத்ததாக, திமுகவிற்கு ஆதரவான 6 பொய் செய்திகளையும், எதிரான 13 பொய் செய்திகளையும் தெரியப்படுத்தி உள்ளோம். அதேபோல், அதிமுக தொடர்பான பொய் செய்திகள் குறித்தும் வெளியிட்டு உள்ளோம்.
இதுதவிர, சிறு மற்றும் புதிய கட்சிகளான கம்யூனிஸ்ட், நாம் தமிழர் , மக்கள் நீதி மய்யம், பாமக போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக மற்றும் எதிராக குறைந்த அளவிலான பொய் செய்திகளே பதிவாகி உள்ளன அல்லது மக்கள் கவனம் பெறாமலும் செய்திகள் மறைந்து விடுகின்றன.
இது தொடர்பான கட்டுரைகளின் விவரங்களைத் தொகுத்த தரவுகள் – எக்ஸ்செல் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவே ஆதரவாக மற்றும் எதிராக பரப்பப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொய் செய்திகளை பொய் என பாரபட்சமின்றி யூடர்ன் ஆதாரத்துடன் நிரூபித்து கட்டுரைகளை வெளியிட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, மறைமுகமாகவோ அல்லது கொள்கை சார்ந்தும் பரப்பிய நூற்றுக்கணக்கான அரசியல் பொய் செய்திகளை நாம் உடைத்து உள்ளோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிவரும் ஆண்டிலும், சமூக வலைதளங்களில் பரவும் அரசியல் சார்ந்த பொய் செய்திகள் மட்டுமின்றி அனைத்து விதமான பொய்களை உடைந்து மக்களுக்கு சரியான செய்தியை கொண்டு சேர்க்கும் பயணத்தை தொடர்கிறோம் !