டெசிபாசிட் இழந்த கட்சிகளில் முதல் இடம் யார் ?| 2021 தமிழகத்தேர்தல் !

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியின் வேட்பாளர்களே வெற்றிகளையும், அதிக அளவிலான வாக்குகளையும் பெற்றனர். எனினும், பிரதான கூட்டணியைத் தவிர்த்து புதிதாக உருவான அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, தனித்து நின்ற நாம் தமிழர் கட்சிகள் ஆகியவை பல இடங்களில் அதிக வாக்குகளை பெற்று வெற்றியில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவே செய்தன.
இருப்பினும், செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியாமல் போன நிலையிலும் அக்கட்சிகள் இருக்கின்றன. தற்போதைய தமிழக தேர்தலில் டெபாசிட் பெறாத கட்சிகளின் தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் நாம் எடுத்து உள்ளோம்.
மூன்றாவது அணியாக 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி 233 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே டெபாசிட் பெற்றார். 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியானது 6.56% வாக்குகளைப் பெற்றது.
டி.டி.தினகரனின் அமமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக மட்டும் 165 தொகுதிகளில் போட்டியிட்டு 2.34% வாக்கு மட்டுமே பெற்றது. போட்டியிட்ட 165 தொகுதிகளில் 158 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட டி.டி.தினகரன் மட்டுமே இரண்டாம் பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக 60 இடங்களில் போட்டியிட்டது. தேமுதிக போட்டியிட்ட 60 இடங்களிலும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலில் தேமுதிக 0.42% வாக்குகளை மட்டும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அக்கட்சியின் வாக்கு வங்கி அதலபாதாளத்திற்கு சென்றது என்பதற்கு இந்தத் தேர்தலும் ஓர் உதாரணம்.
முதல் முறையாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிட்டு 2.62% வாக்குகளை பெற்றது. அக்கட்சி போட்டியிட்ட 180 தொகுதிகளில் 178-ல் டெபாசிட் இழந்தது. அக்கட்சியின் கமல்ஹாசன் மட்டுமே கோவை தெற்கு தொகுதியில் 2-ம் இடம் பிடித்தார்.
ஒவ்வொரு முறையும் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தேர்தலில் போட்டியிடுவதுண்டு. 163 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். அக்கட்சி 0.21% வாக்குகளை பெற்றது.
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் உள்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
ஒரு தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 16.5%க்கும் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கிறார்கள். 37.66% வாக்குகளை பெற்ற திமுக, 33.11% வாக்குகளை பெற்ற அதிமுக கட்சியின் வேட்பாளர்கள் யாரும் டெபாசிட் இழக்கவில்லை. அதேபோல், அவற்றின் கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், பாஜக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் டெபாசிட் இழக்கவில்லை.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.