2022ம் ஆண்டில் YouTurn கண்டறிந்த டாப் 10 வதந்திகள் !

2022ம் ஆண்டில் அரசியல், சமூகம், அறிவியல், வரலாறு உள்ளிட்ட பல பிரிவுகளில் நூற்றுக்கணக்கான போலிச் செய்திகளை உடைத்து உண்மையான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை யூடர்ன் மேற்கொண்டு உள்ளோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த ஓராண்டில் யூடர்ன் கண்டறிந்த சிறந்த 1௦ ஃபேக்ட்செக் கட்டுரைகளின் தொகுப்பை இக்கட்டுரையில் காணலாம்.

1.தமிழ்நாட்டில் வீடுகளில் கிணறு, போர் மூலம் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்த ரூ.10,000 கட்டணம்

வீடுகளில் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வரும் அனைவரும் ரூ.10,000 செலுத்தி (CGWA) மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் NOC பெற்றுக்கொள்ளவும் இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளதாக செய்தித்தாள் பக்கம் ஒன்று வைரலாகியது.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் வீடுகளில் கிணறு, போர் மூலம் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்த ரூ.10,000 கட்டணமா ?

ஆனால், இது CGWA ஆல் ஒழுங்குப்படுத்தப்படாத மாநிலங்களுக்கு இல்லை என்றும், இந்த பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்றும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். நாம் வெளியிட்ட இக்கட்டுரை 2.65 லட்சம் வாசிப்பை கடந்து யூடர்னில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரையாக முதலிடத்தில் உள்ளது. 

2. திமுக ஆட்சியில் இடிக்கப்பட்ட150 கோவில்கள் 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளி வருவதாக ஓர் பிரச்சாரத்தை பாஜக மற்றும் வலதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் 150 கோவில்கள் இடிக்கப்பட்டனவா ? குஜராத்தில் 80 கோவில்கள் ஏன் இடிக்கப்பட்டது தெரியுமா ?

ஆனால், தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவாலும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையாலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய சில கோவில்கள் உள்பட ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. மேலும், அப்படி அகற்றப்பட்ட கோவில்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி இருந்தனர். இந்த நடவடிக்கை கடந்த அதிமுக ஆட்சியிலும் நிகழ்ந்து இருக்கிறது, ஏன் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது குஜராத்தில் மாநிலத்திலும் நிகழ்ந்து இருக்கிறது என விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.

3. ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என்ற அம்பேத்கர் 

1939ம் ஆண்டு புனேவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு சென்ற டாக்டர் அம்பேத்கர், ” ஆர்.எஸ்.எஸ் ஊழியர் முகாமிற்கு நான் வருவதற்கு இதுவே முதல்முறை. ஹரிஜனங்களுடன் மற்ற எல்லா ஜாதியினரும் சரிசமமாக வாழ்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவித வித்யாசத்தையும் இங்கு யாருமே நினைத்துக்கூட பார்க்கவேயில்லை” எனக் கூறியதாக செய்தி ஒன்று பாஜகவினரால் வைரல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க : ஆர்.எஸ்.எஸ்-ல் அனைத்து சாதியினரும் சரிசமம் என அம்பேத்கர் கூறியதாகப் பரப்பப்படும் ஆதாரமில்லா தகவல் !

ஆனால், அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகளில் எங்கும் அவர் 1939ல் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்குச் சென்றதாக இடம்பெறவில்லை. வேறு எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் அவர் ஆர்.எஸ்.எஸ் முகாமிற்கு சென்றதாக குறிப்பிடப்படவில்லை. ஆதாரமற்ற ஒன்றை பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

4. நடிகர் மாதவனின் ட்வீட்: மாட்டுக்கறியை விட கிட்னி பீன்ஸில் சத்துக்கள் அதிகம் 

100 கிராம் மாட்டுக்கறியிலும், 100 கிராம் சிவப்பு நிற கிட்னி பீன்ஸ்சிலும் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, அதன் விலை முதலியவற்றை ஒப்பிட்டு இதில் சிவப்பு நிற கிட்னி பீன்சே விலையிலும், சத்திலும் சிறந்தது என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படத்தை நடிகர் மாதவன் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

மேலும் படிக்க : நடிகர் மாதவனின் ட்வீட்: மாட்டுக்கறியை விட கிட்னி பீன்ஸில் சத்துக்கள் அதிகமா ?

ஆனால், மாட்டுக்கறியை விட சிவப்பு நிற கிட்னி பீன்ஸ் சிறந்தது என ஒப்பிட்ட புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒன்று. அதில் பீன்சிற்கு சாதகமான தரவுகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்னி பீன்சினை ஒப்பிடுகையில் மாட்டுக்கறியில் புரதம், ஜிங்க், விட்டமின் B12, A போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது என விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.
5. வைரலான “பாணி” தண்ணீர் பாட்டில் 
தண்ணீர் பாட்டிலில், ” பாணி ” என எழுதப்பட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சர்ச்சையுடன் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த தண்ணீர் பாட்டில் காசி தமிழ் சங்கத்தில் வழங்கப்பட்டது என்றும், திமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் தயாரிக்கபட்டது என்றும் என பல்வேறு கருத்துகளுடன் பரப்பப்பட்டது.
ஆனால், இந்த தண்ணீர் பாட்டில் ஒன்றிய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் தயரிப்பு என்றும், அதில் உள்ள பாணி என்பது பிராண்ட் பெயரைக் குறிக்கிறது என நாம் விரிவாகக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
6. தமிழர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என வடமாநிலத்தவர்கள் போராட்டம்
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளூர் தமிழ் பணியாளர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்றும், அவர்களால் வடமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி வட மாநிலத்தவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்திகளில் வெளியாகியது.

மேலும் படிக்க : கோபி அருகே தமிழர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என வடமாநிலத்தவர்கள் போராட்டம்.. உண்மை என்ன ?

வைரலான செய்தி தொடர்பாக யூடர்ன் விசாரித்த போது, ” உள்ளூர் பணியாளர்களுக்கு வேலை வழங்க வட மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவில்லை, அங்கு காணாமல் போன வடமாநில தொழிலாளியை கண்டுபிடிக்கக் கூறி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் ” என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அந்த போராட்டத்தை தவறான செய்தியாக வெளியிட்டு இருந்தனர்.

7. அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடல் 

“எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவியது தான்” என ஒரு பொய்யை பெயர் குறிப்பிடாதத் தலைவர் (சீமான்) ஒருவர் கூறினார் என ஊடகவியலாளர் விஷன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலானது.

மேலும் படிக்க : அசுரனின் எள்ளு வய பூக்களையே பாடலின் மெட்டு சீமான் பாடிய நாட்டுப்புற பாடலை தழுவியது உண்மையே !

இதுகுறித்து எள்ளு வய பூக்களையே பாடலின் பாடலாசிரியர் யுகபாரதி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, “இந்தப் பாடலை பொறுத்தவரை நாட்டுப்புற பாடலாக அவர் பாடிய மெட்டின் தழுவல் உண்டு. அவர் பாடியது பிடித்துப்போய் அதிலிருந்து தொடங்கியதே தான் இந்தப் பாடல். இதற்கு முழுமையாகப் பாடல் எழுதியது நான். சீமான் அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தால் அது உண்மையே ” எனத் தெரிவித்து இருந்தார் என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

8. டி-ஷர்ட்டில் காதல் வசனம்: விசிக லோகோ, திருமாவளவன் படம் 

இப்படி ஒரு தலைமுறையை உருவாக்கி வச்சது தான் திருமாவளவன் சாதனை எனக் கூறி இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரின் டி-ஷர்ட்டில் காதல் வசனத்துடன், விசிக லோகோ மற்றும் எம்.பி திருமாவளவன் படம் இடம்பெற்றது சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் படிக்க : டி-ஷர்ட்டில் காதல் வசனம்: விசிக லோகோ, திருமாவளவன் படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பப்படும் புகைப்படம் !

ஆனால், இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞரின் டி-ஷர்ட்டில் இடம்பெற்ற காதல் வாசகத்திற்கு மேலே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முத்திரையையும், வாகனத்தின் நம்பர் பிளேட்டில் திருமாவளவன் படத்தையும் ஃபோட்டோஷாப் செய்து ஒட்டி உள்ளனர் என்றும், அந்த டி-ஷர்ட் அணிந்து சென்ற நபர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

9. இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்தது – அண்ணாமலை 

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது, அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

மேலும் படிக்க : இதுவரை இந்தியா காமன்வெல்த் பதக்கப் பட்டியல்களில் கடைசியில் இருந்ததாக பொய் சொன்ன அண்ணாமலை !

2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 38 தங்கங்கள், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்தனர் என்றும், இதுவரை இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் கடைசியில் மட்டுமே இருந்ததாக அண்ணாமலை கூறியது பொய் என்றும் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

10. தடுப்பில்லா ஜோடி கழிப்பறை 

கோயம்புத்தூர், ராஜீவ் காந்தி நகரில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் கதவுகள் கூட இல்லாமல் கட்டப்பட்டுள்ள கழிவறை எனக் கூறி இப்புகைப்படம் ஊடகங்கள் உள்பட சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் வைரலாகியது.

மேலும் படிக்க : ஜெ ஆட்சியில் இருந்தே தடுப்பில்லா ஜோடி கழிப்பறை.. தமிழ்நாடும், உபியும் சொல்லும் ஒரே காரணம் !

ஆனால், வைரல் செய்யப்பட்ட இருவர் பயன்படுத்தும் வகையில், கதவுகள் கூட இல்லாமல் கட்டப்பட்ட கழிவறையின் புகைப்படம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது அல்ல. கிராமங்களில் கழிவறை பயன்படுத்துவது தொடர்பாகக் குழந்தைகளின் அச்சத்தினை போக்க இம்மாதிரியான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற கழிவறைகள் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்திலும், உத்தரப் பிரதேசத்திலும் கட்டப்பட்டு இருக்கின்றன என நாம் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

2022ம் ஆண்டில் பொய்களுக்கு எதிராக செயல்பட்டது போன்று வருகிற 2023ம் ஆண்டிலும் பொய்களுக்கும், வெறுப்பை விதைக்கும் வதந்திகளுக்கும் எதிராக யூடர்ன் அதிதீவிரமாக இயங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader