2023 Factcheck ஓர் பார்வை: டாப் 10, அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் சொன்ன பொய்களின் தொகுப்பு !

மதம், மருத்துவம், அறிவியல், அரசியல், வரலாறு என அனைத்து வகையிலும் 2023ம் ஆண்டு பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டது. அரசியல் கட்சியினர் கடந்து ஊடகங்களுக்கும் இப்பொய்களில் கணிசமான பங்கு உள்ளது. அதன்படி இவ்வாண்டு யூடர்ன் கண்டறிந்த முக்கிய போலி செய்திகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த ஆண்டு கூடுதலாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கபப்ட்ட போலி செய்திகளும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  

2023-ல் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் : 

1. நீட்டிற்கு எதிராக தெலங்கானா புதிய சட்டம் : 

தெலங்கானா மாநில அரசு நீட் தொடர்பாக புதிய சட்டம் இயற்றியுள்ளது. அச்சட்டப்படி 100 சதவீதம் MBBS சீட்டுகள் அம்மாநில மாணவர்களுக்கே ஒதுக்கப்பட்டும் என நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதே தகவலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்களும் பல இடங்களில் பேசியிருந்தனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலங்கானா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது தெலங்கானாவில் 20 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. அக்கல்லூரிகளில் MBBS சேர்க்கையில் மாநிலங்களுக்காக ஒதுக்கப்படும் 85 சதவீதத்தில் 15 சதவீத இடமானது தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய 2 மாநில மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. (85 சதவீதம் மாநிலத்திற்கான இடங்கள், 15 சதவீதம் ஒன்றியத்துக்கான இடங்கள்).

மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு தெலங்கானாவில் புதிதாக 36 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டது. இப்புதிய கல்லூரிகளில் மாநிலத்திற்காக ஒதுக்கப்படும் 85 சதவீத இடங்களுக்கு தெலங்கானா மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க ஏதுவாக அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கும் நீட் தேர்வுக்கும் அந்த தொடர்பும் இல்லை. 

மேலும் படிக்க : நீட்-க்கு எதிராக 100% எம்பிபிஎஸ் சீட்களும் தெலங்கானாவிற்கே என சட்டம் இயற்றியதாகப் பரவும் தவறான செய்தி !

2. எளிய மக்களோடு அண்ணாமலை : 

தற்போது தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை, இதற்கு முன்னர் இந்திய காவல் பணியில் (IPS) இருந்தபோது எளிய மக்களோடு இருப்பதாக புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. 

உண்மையில் அந்த படத்தில் இருப்பது அண்ணாமலை கிடையாது. அண்ணாமலை சாயலில் உள்ள யாரோ ஒரு காவல்துறை அதிகாரி. 

மேலும் படிக்க : அண்ணாமலை பணியில் இருந்த போது ஏழைகளுடன் இருப்பதாகப் பரப்பப்படும் தவறான புகைப்படம் !

3. சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை : 

தனக்கு மாதம் 7 முதல் 8 லட்ச ரூபாய் செலவாவதாகவும், அதனை நண்பர்களை வைத்துச் சமாளித்து வருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். அவர் அப்படி கூறியதன் விளைவாக சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லையென அவரது மனைவி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று பரவியது.

அது போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு. அண்ணாமலையின் மனைவி அப்படி எந்தவித கருத்தையும் கூறவில்லை. தந்தி டிவியும் அந்த நியூஸ் கார்டை வெளியிடவில்லை. 

மேலும் படிக்க : ‘சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை’ என அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

4. தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் சனாதனத்திற்கு ஆதரவான பகுதி : 

மிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ எனப் பேசியதை தொடர்ந்து பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் எழத்தொடங்கியது. 

புத்தகம் : 12ம் வகுப்பு அறவியலும் இந்தியப் பண்பாடும், பக்.58 (2022ம் ஆண்டு பதிப்பு)

ஆனால், தமிழ்நாடு அரசின் 12ம் வகுப்பு ‘அறவியலும் இந்தியப் பண்பாடும்’ என்னும் பாடப்புத்தகத்தில் ‘சனாதன தருமம்‘ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ என்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக இப்பகுதிகள் பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ளது. 

மேலும் படிக்க : தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் 20 ஆண்டுகளாக இருக்கும் ‘சனாதன தர்மம்’.. நீக்கப்படுமா ?

5. அண்ணாமலை யாத்திரை வாகனம் : 

அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்கிற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். அதற்கான பிரச்சார வாகனத்தில் படுக்கை வசதிகள் இருப்பதாக திமுகவினர் புகைப்படம் ஒன்றை பரப்பினர். 

அது அண்ணாமலையின் யாத்திரை வாகனம் கிடையாது. அப்படம் 2018ம் ஆண்டு முதலே இணையத்தில் உள்ளது. 

மேலும் படிக்க : அண்ணாமலையின் பாத யாத்திரை வாகனத்தின் படுக்கை வசதி எனப் பரவும் தவறான புகைப்படம் !

6. தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை கடனுடன் பிறக்கிறதா?

தமிழகத்தில் பிறக்கும் குழந்தை ரூ.3.5 லட்சம் கடனுடன் பிறக்கிறது, குஜராத்தில் ரூ.17 ஆயிரம் லாபத்தில் பிறக்கிறது என்று அண்ணாமலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். 

2023ம் ஆண்டு மதிப்பீட்டின் படி, தமிழ்நாட்டின் கடன் ரூ7.53 லட்சம் கோடி மற்றும் குஜராத் மாநிலத்தின் கடன் ரூ4.23 லட்சம் கோடியாக உள்ளது. குடும்ப அட்டைத்தாரர்களின் அடிப்படையில் பிரித்தால், தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ரூ3.36 லட்சமும், குஜராத் மாநிலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ3.08 லட்சம் கடனும் வருகிறது.  குஜராத் லாபத்தில் இருப்பதாக அண்ணாமலை கூறியது பொய். 

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை தலையில் ரூ3.5 லட்சம் கடன், இதுவே குஜராத்தில் ரூ.17,000 வருமானம் என அண்ணாமலை சொன்ன பொய் !

7. லுலு மாலில் இந்தியா – பாகிஸ்தான் கொடி : 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் 10 நாடுகளில் கொடிகள் கேரளாவில் உள்ள லுலு மாலில் தொங்கவிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் கொடி இந்தியக் கொடியை விட உயரத்திலும், பெரியதாகவும் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. 

அனைத்து கொடிகளும் ஒரே உயரத்திலும், ஒரே அளவில்தான் வைக்கப்பட்டு உள்ளது. வேறுபட்ட கோணம் மற்றும் எந்த மாடியில் (உயரத்தில்) இருந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதை பொறுத்து ஒரு நாட்டின் கொடி பெரியதாகவும் உயரத்திலும் இருப்பது போன்று தோற்றமளிக்கும். அப்படி பாகிஸ்தான் நாட்டுக் கொடி பெரியதாகவும் உயரமாகவும் இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தவறாகப் பரப்பினர்.

மேலும் படிக்க : லுலு மாலில் இந்தியக் கொடியைவிடப் பாகிஸ்தான் கொடி பெரியதாகவும் உயரமாகவும் வைக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

8. அடையார் ஆனந்த பவனில் சங்கிகளுக்கு இடமில்லையா?

அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா நேர்காணல் ஒன்றில் பெரியார் குறித்து பெருமையாக பேசியது வலதுசாரிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்களது கடைகளில் ‘சங்கிகளுக்கு அனுமதி இல்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று பரவியது. 

இந்த அறிவிப்பு பலகை போலியாக எடிட் செய்யப்பட்டது. ‘வியாபாரம், அரசியல் மற்றும் ரியல் எஸ்டேட் பேச அனுமதி இல்லை. – இப்படிக்கு நிர்வாகம்’ என்றுதான் அவர்களது கடைகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சங்கிகளுக்கு அனுமதி இல்லை என A2B உணவகத்தில் அறிவிப்புப் பலகை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

9. பழைய பேருந்தா ? புதிய பேருந்தா ?

திமுக அரசு புதிய பேருந்துகளை வாங்க பேருந்து ஒன்றுக்கு 50 லட்ச ரூபாய் வீதம் 1000 பேருந்துகளுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதேபோல் பழைய பேருந்துகளை புதுப்பிக்க பேருந்து ஒன்றுக்கு 42 லட்ச ரூபாயை செலவிட்டுள்ளது என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

ஆனால், தமிழ்நாடு அரசு 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிப்பதற்கும் சேர்த்து தான் மொத்தமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அரசு அறிவிப்பின்படி அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள ஒரு பேருந்தை புதுப்பிக்க ஆன செலவு 14 லட்சத்து 90 ஆயிரம் மட்டுமே.

மேலும் படிக்க : திமுக அரசு புதிய பேருந்து வாங்க ரூ50 லட்சம், பழைய பேருந்தை புதுப்பிக்க ரூ 42 லட்சம் செலவிட்டதாகப் பரவும் பொய்

10. ஷர்மிக்காவின் உருட்டுகள் : 

சித்த மருத்துவர் ஷர்மிக்கா யூடியூப் சேனல்களில் ஒரு குலாப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், மாடு நம்மை விடப் பெரிய மிருகம் எனவே அதன் கறியைச் சாப்பிடக் கூடாது, அயோடின் உப்பிற்கு கர்ப்பிணிப் பெண்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவியலுக்குப் புறம்பாக தகவல்களில் தொடர்ந்து பேசி வந்தார். 

இது மட்டுமின்றி மாட்டுக்கறி, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தியதால் ஏற்பட்ட நச்சுத் தன்மை நீக்குதல் (Detoxic), குழந்தை பிறப்பு, பெண்களின் மார்பகம் பற்றிய விஷயங்களில் முன்னுக்கு பின் முரணான கருத்துகளையும் அவர் பேசியுள்ளார். 

மேலும் படிக்க : ஷர்மிக்கா முன்னுக்குப் பின் முரணாக பேசிய தகவல்களின் தொகுப்பு !

Top Factcheck : 

1. மோடியால் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் :  

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நினைத்தால் உக்ரைன் – ரஷ்யா போரினை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாக பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.

ஆனால், ஜான் கிர்பி செய்தியாளர்களைச் சந்திப்பில் மோடியால் மட்டுமே ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முடியும் என எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.

மேலும் படிக்க : ‘மோடி நினைத்தால் உக்ரைன் போரை நிறுத்த முடியும்’ என அமெரிக்கா கூறியதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் !

2. மல்யுத்த வீரர்களின் போலி புகைப்படம் : 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்கிற குற்றச்சாட்டினை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடந்த போரட்டத்தின்போது டெல்லி காவல் துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் சிரித்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டதாக படம் ஒன்று வலதுசாரிகளால் பரப்பப்பட்டது. 

அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்ட படத்தினை Face App மூலம் சிரிப்பது போல் எடிட் செய்து தவறாக பரப்பினர். 

மேலும் படிக்க : மல்யுத்த வீரர்கள் கைதுக்கு பின் சிரித்து செல்ஃபி எடுத்ததாக பாஜகவினர் பரப்பிய எடிட் படம்.. வீடியோவில் என்ன பேசினார் ?

3. இராணுவ வீரரின் பொய் : 

திருவண்ணாமலை படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள இராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியைச் சிலர் தாக்கியதாகச் சொல்லப்பட்ட சம்பவத்தில் இராணுவ வீரர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியது. 

அந்த சம்பவத்தில் இராணுவவீரர் சிலருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி பொய்யான வழக்கினை பதிவு செய்ய முயற்சித்தது அந்த ஆடியோவின் மூலம் தெரியவந்தது. 

மேலும் படிக்க : மனைவியை மானபங்கம் செய்ததாக பரபரப்பை ஏற்படுத்திய இராணுவ வீரரின் சதித்திட்டம் அம்பலம் !

4. இந்து அமைப்பினர் பணம் பறிக்க திட்டம் : 

கடந்த 2022ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் 12ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை மதம் தொடர்பான பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கப்பட்டது.  இது தொடர்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டச் செயலாளர் முத்துவேல் என்பவரது செல்போன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் மாணவியின் மரணத்திற்கும் மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், முத்துவேல் வேறொரு கிறிஸ்தவ பாதிரியாரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்ட ஆடியோ வெளியாகியது.

மேலும் படிக்க : கிருத்தவப் பள்ளிகளை மிரட்ட பொய் பாலியல் குற்றச்சாட்டு.. பணம் பறிக்க சதி, சிக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி

5. பிள்ளையார் தயாரிப்பு குடோனுக்கு சீல் : 

கரூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் சிலை தயாரிப்பாளர்களின் குடோனுக்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனும் ரசாயனப் பொருள் கொண்டு செய்யப்படும் பிள்ளையார் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க தடையுள்ளது. இச்சிலைகள் அப்பொருட்களை கொண்டு செய்யப்பட்டதால் அந்த குடோனுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் சதுர்த்தி முடிந்ததும் சாதாரணமான வழிபாட்டிற்கு அந்த சிலைகளை விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால், பிள்ளையார் சிலை செய்யவே தடை விதிக்கப்பட்டது போல் ஒரு தவறான செய்தியை பரப்பினர்.

மேலும் படிக்க : கரூரில் ரசாயனம் கலந்ததால் சீல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை கிடங்கு.. மதரீதியாக பரப்பும் அண்ணாமலை !

6. ஆவின் ஆரஞ்சு பால் கொழுப்பு சர்ச்சை : 

ஆவின் ஆரஞ்சி நிற பால் பாக்கெட்டில் (நிலைப்படுத்தப்பட்ட பால்) 6 சதவீதம் கொழுப்பு சத்து இருக்க வேண்டும். ஆனால், 4.79 சதவீதம் தான் உள்ளது என அண்ணாமலை ஒரு ஆய்வறிக்கையை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். 

இது குறித்த உண்மை கண்டறியும் முயற்சியில் 3 ஆய்வகங்களில் யூடர்ன் சோதனை மேற்கொண்டது. மூன்று முடிவிலும் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் 6 சதவீதம் கொழுப்பு இருப்பது உறுதிசெய்ய முடிந்தது. 

மேலும் படிக்க : ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் எத்தனை சதவீதம் கொழுப்புச் சத்து உள்ளது – யூடர்ன் முன்னெடுத்த ஆய்வறிக்கை முடிவு !

7. 2015 vs 2023 மழை : 

2023, டிசம்பரில் ஆண்டு பெய்த மழையின் காரணமாக சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த மழை தொடர்பாக ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் ஜெரால்டு பேசுகையில் டிசம்பர் 01ம் தேதி ஒரு நாளில் மட்டும் 48 செ.மீ. மழை பெய்தது என்றும் 2023ல் குறைவான அளவே மழை பெய்தது என்றும் கூறினார். 

ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை IMD-வின் தரவின் படி இரண்டு நாட்களாக (டிசம்பர் 3-4, 4-5 தேதிகளில்) கணக்கிடப்பட்டுள்ளது என ஆதாரத்துடன் கட்டுரை வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க : சென்னையில் 2015-ல் தான் அதிக மழை பெய்தது என தவறான தகவலைப் பரப்பும் ரெட்பிக்ஸ் பெலிக்ஸ் !

8. GDP-ல் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் பின்னுக்கு தள்ளியதா?

தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய உ.பி, நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது உத்தர பிரதேசம் என ‘சாணக்யா’ ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டது. 

soic.in என்னும் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான தரவுகள் கொண்ட படம் பதிவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கான சதவீதத்தை கூட்டினால் 108.6 உள்ளது. மேலும்  ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் தரவுகளின் அடிப்படையில் பார்க்கையில் உத்தர பிரதேசத்தை காட்டிலும் தமிழ்நாடு GDP-யில் அதிகமாகவே உள்ளது. 

மேலும் படிக்க : GDP-ல் தமிழ்நாட்டை பின்னுக்குத் தள்ளிய உ.பி என சாணக்யா வெளியிட்ட பொய் செய்தி !

9. தவசி பட வசனம் எழுதியது யார்? 

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் காலமானதை தொடர்ந்து அவருடனான நினைவுகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.  அப்போது தவசி படத்திற்கு தான் வசனம் எழுதியதாக கூறினார். அவர் பொய் சொல்கிறார், வசனம் என்கிற இடத்தில் இயக்குநர் உதயசங்கர் பெயர் உள்ளது என திமுகவினர் பரப்பினர். 

இது குறித்து உதயசங்கரை தொடர்பு கொண்டு பேசுகையில், சீமான் எழுதி கொடுத்த First Version வசனங்களை கொண்டுதான் ஷூட்டிங் போனோம். ஷூட்டிங்கின் போது வசனத்தில் ஏற்பட்ட பல திருத்தங்களை நான் செய்தேன். ஆனால், வசனம் என்பதில் தனது பெயரை போடா வேண்டாமென சீமான் கூறிவிட்டதாக தெரிவித்தார். 

மேலும் படிக்க : கேப்டன் விஜயகாந்தின் தவசி படத்துக்கு வசனம் எழுதினேன் – சீமான்.. இயக்குநர் உதயசங்கரின் பதில் இதோ !

2023ல் Youturn கண்டறிந்த அரசியல் கட்சியினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் பரப்பிய பொய்களின் எண்ணிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு எதிராகப் பரப்பப்பட்ட பொய்களின் எண்ணிக்கையும் கீழே உள்ள படத்தில் காணலாம்.

ஊடகங்களில் பொய் செய்தி: 

1. சாக்கடை நீரில் பிரியாணி : 

இஸ்லாமியர் ஒருவர் சாக்கடை நீரில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை விற்பனை செய்வதாக ‘மாலை மலர்’ ஒரு செய்தி வெளியிட்டது.

அந்த கடையின் கழிவு நீரை மோட்டார் பம்ப் மூலம் சாலையில் வெளியேற்றியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இப்படி செய்ய மாட்டேன் என கடை உரிமையாளர் எழுத்துபூர்வமாக மனிப்பு கேட்ட செய்தியை தவறாக பரப்பியுள்ளனர். 

மேலும் படிக்க : ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாக வதந்தி பரப்பிய மாலைமலர் !

2. செலவே இல்லாமல் 5 லட்சம் இன்சூரன்ஸ் : 

‘செலவே இல்லாமல் 5 லட்சம் இன்சூரன்ஸ்  பெரும் வழி… Ayushman Bharath Health Account’ என ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ வீடியோ ஒன்றினை வெளியிட்டது. 

Ayushman Bharath Health Account என்பது ஒருவரது உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும் ஒரு தளமாகும். இதில் பதிவு செய்வதால் எவ்வித இன்சூரன்ஸ் தொகையும் வழங்கப்படாது. 

மேலும் படிக்க : ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீடு குறித்து தவறான தகவல் வெளியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு !

3. மாடு விற்று ரூ.500 கோடி வருமானம் : 

ஆன்லைனில் மாடுகளை விற்று இரண்டு ஐ.ஐ.டி.பட்டதாரி பெண்கள் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக ‘பசுமை விகடன் ஒரு கட்டுரை வெளியிட்டது. 

‘Animall’ என்ற அந்நிறுவனம் ஆன்லைன் மூலம் மாடுகளை விற்பதன் மூலம் 2022ம் நிதியாண்டில் ரூ.7.4 கோடி சம்பாதிக்க ரூ.55 கோடி செலவிட்டுள்ளது. மேலும் ரூ.44.2 கோடி நட்டத்தில் உள்ளது. அதன் மொத்த மதிப்பீடு (valued at around) ரூ.565 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு என்பது அதன் வருவாய் ஆகாது. இந்த மொத்த மதிப்பீட்டினை வருவாய் என தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஆன்லைனில் மாடு விற்று ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானம் ஈட்டுவதாகப் பசுமை விகடன் வெளியிட்ட தவறான தகவல் !

4. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயம் :

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 57,918 பேர் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் என ‘தந்தி டிவி’ நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டது. 

இது தொடர்பான தரவுகளை ஆய்வு செய்ததில், ஒவ்வொரு ஆண்டும் காணாமல் போனவர்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல் வெளியிடப்பட்ட செய்தி என்பதை அறிய முடிந்தது. அப்படி பார்க்கையில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போக சுமார் 7 ஆயிரம் வழக்குகளே நிலுவையில் உள்ளன. 

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயம்.. திரித்து வெளியிட்ட தந்தி டிவி.. உண்மையான எண்ணிக்கை இதோ !

5. திருச்செந்தூர் கோயில் திடீர் கட்டண உயர்வு : 

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா நடக்கும் 7 நாட்களுக்கு தரிசனக் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக ‘பாலிமர்’ ஒரு நியூஸ் கார்டினை வெளியிட்டது. 

அது தற்போது உயர்த்தப்பட்டது கிடையாது. 2018, ஜூலை மாதம் செய்யப்பட்டது. அப்போதே இது தொடர்பான செய்திக்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க : திருச்செந்தூர் கோயிலில் திடீர் கட்டண உயர்வு எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் !

6. ஆப் தயாரிக்கும் பள்ளி மாணவர் : 

9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அமேசானுக்கு ஆப் தயாரித்து கொடுப்பதன் மூலம் மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார் என பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. 

அம்மாணவனிடம் பேசியதில் அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடிந்து. அமேசான் நிறுவனத்தை சேர்ந்த  யாரும் அவரை தொடர்பு கொள்ளவில்லை. அதே போல் ஆப் தயாரித்ததற்காக ஒரு ரூபாயும் இதுவரை பெறவில்லை என அம்மாணவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க : அமேசானில் ரூ.2 லட்சம் சம்பளம், ஏமாற்றப்பட்ட மாணவர்.. தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!

7. முதல் ‘செக்ஸ்’ சாம்பியன்ஷிப் போட்டி : 

ஸ்வீடன் நாடு முதல் ‘செக்ஸ்’ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தயுள்ளதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. 

ஸ்வீடன் நாட்டிலுள்ள செக்ஸ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள டிராகன் பிராக்டிக் செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி அந்நாட்டு விளையாட்டு கூட்டமைப்பிற்குக் விண்ணப்பித்துள்ளார்.  ஆனால், அந்த  விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஊடகங்கள் இது குறித்து  தவறான செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஸ்வீடன் நாடு செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரித்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !

8. சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல!

பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு என்ற செய்தியை ஊடகங்கள் வெளியிட்டது. 

இது தொடர்பான தீர்ப்பில், இந்தியத் தண்டனைச் சட்டம் 375 மற்றும் 377 ஆகிய பிரிவுகளைக் கவனமாக வாசிக்கும் போது, இறந்த உடலை மனிதராகவோ அல்லது நபராகவோ கருத முடியாது என்றுள்ளது. இதனை கொண்டு பார்க்கையில் சடலத்துடன் உடலுறவு கொள்பவரை தண்டிக்க முடியாது. எனவே இது தொடர்பாக ஒரு சட்டத்தை திருத்தவோ அல்லது இயற்றவோ அரசு பரீசிலிக்க வேண்டுமென நீதிபதிகள் கூறியதை ஊடகங்கள் தவறாக செய்தியாக்கியுள்ளது. 

மேலும் படிக்க : சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல என கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறியதாக வெளியான தவறான செய்திகள் !

AI Fake News : 

மேற்கண்ட பொய் செய்திகளை தவிர்த்து செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட பொய் செய்திகளும் இந்த ஆண்டு அதிக அளவில் பரப்பப்பட்டது. 

வரவிருக்கும் 2024ம் ஆண்டும் பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக யூடர்ன் தொடர்ந்து தனது பணியினை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader