5 அரசு மருத்துவமனைகளில் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவை, மதுரை, சேலம் , திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவமனைகளில் இனி ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கான முக்கியமான மருந்தாக ரெம்டெசிவர் உள்ளதால் அதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மா.சுப்பிரமணியன் அவர்கள் கோவை, திருச்சி உட்பட ஐந்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் 12,500 ஆக்சிஜன் உதவி பொருத்தப்பட்ட படுக்கைகள் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவனைகளில் ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை கோவை அரசு மருத்துவமனை மாணவர்களின் “மீம்” பக்கம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேவையான ஆவணங்கள் பின்வருமாறு;
1. நோயாளியின் RT PCR (கொரோனா ரிப்போர்ட் )
2. சிடி ஸ்கேன் ரிப்போர்ட்
3. மருத்துவரின் மருந்து பரிந்துரை ரிப்போர்ட் (அசல்)
4. நோயாளியின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல் )
5. மருந்து வாங்க வருவோரின் ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)
ரெம்டெசிவிர் மருந்து என்பது அனைத்து கொரோனா நோயாளிகளும் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கும், மிதமான அறிகுறிகள் உள்ளவர்களும் மருத்துவர் பரிந்துரைக்காவிடின் ரெம்டெசிவிர் மருந்து அவசியமற்றது என மருத்துவர் ஒருவர் ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதும் இங்கு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
links :
https://www.thehindu.com/news/cities/Hyderabad/remdesivir-not-for-all-patients/article34353099.ece
https://www.bbc.com/tamil/india-57035444.amp
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.