இந்து மதம் பற்றி ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சு.. ஆதாரங்கள் இங்கே !

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசிய பேச்சு மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் பேச்சுக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வட இந்திய ஊடகங்கள் பெரும் பேசு பொருளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாட்டில் அரசியல் ஒரு மதத்திற்கு எதிராக உள்ளது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆ.ராசா இந்து மதத்தை பற்றி கூறிய அவதூறுகள் உண்மையா ? அல்லது அவர் வெறுப்பு பிரச்சாரத்தை செய்தாரா ? என்னும் பார்வையிலிருந்து வேதங்கள் மற்றும் இந்து மரபு நூல்களின் வாயிலாக அறிய எண்ணினோம்.

இந்து மதத்தில் மிகவும் போற்றப்படும் அறிஞராக திகழும் விவேகானந்தரின் ” The Complete works of Vivekananda” நூலின் 520 பக்கத்தில் “இந்தியாவில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. ஒன்று ஆரியர். மற்றொன்று ஆரியர் அல்லாதவர். ஆரிய இனத்தில் மூன்று சாதிகள் இருக்கின்றன. மீதமுள்ள அனைவரும் சூத்திரர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆரியர்களே அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் கருத்தில் இருந்து ஆரியர்கள் அல்லாத அனைவரும் சூத்திரர்கள் என பொருள்படுகிறது.

இவர் கருத்தை அங்கீகரிப்பது போலவே புகழ்பெற்ற இஸ்கான் மடத்தின் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் நியூ மாயாப்பூர் உரையில் “திராவிடமும், திராவிட கலாச்சாரமும் ஆரியம் அல்லாதது, இவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கர்களுடன் கலப்பினத்தில் உள்ளனர்.

இந்தியாவில் பிராமணர், சத்திரியர், வைசியர் போன்ற உயர் பிரிவை சேர்ந்தவர்கள் நிறம் தூய்மை பெற்றவர்கள், சூத்திரர்கள் கருப்பானவர்கள், ஒரு பிராமணர் கருப்பாக இருந்தாலோ, மாறினாலோ அவர் பிராமணராக ஏற்றுக் கொள்ளப்படமாட்டார். சூத்திரர் அழகாகவே   இருந்தாலும், அவர் புனிதமான சூத்திரர் அல்ல” எனக் கூறும் பிரபுபாதா, மற்றொரு கூட்டத்தில் “ சூத்திரர்கள் நாயை போன்றவர்கள். நான்காம் தர மனிதர்கள். அவர்களுக்கு நல்ல எசமானர் வேண்டும். எசமானர் இல்லாத சூத்திரர்கள் தெருநாயை போன்றவர்கள். கலியுகத்தில் சூத்திரர்கள் தான் பெரும்பான்மையாக இருப்பார்கள்” என மனிதர்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டுள்ளார்.

இவரின் புகழைப் போற்றும் வகையில் ஒன்றிய அரசு பிரபுபாதாவின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக 125 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு அவரை கௌரவித்தது.

ஒன்றிய அரசால் மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகமான சக்கர சமிதாவில் (Charaka Samhita: Handbook on Ayurveda Indriyasthana chapter 5) ஒரு மனிதனின் உடனடி மரணத்தை குறித்து அவருக்கு வரும் கனவுகள் மூலம் அறியலாம் என எழுதப்பட்டுள்ளது. அதில், “ஆரியர்கள் கனவில் “ கழுகுகள், ஆந்தைகள், நாய்கள் சூழப்பட்டாலோ அல்லது தாக்கப்பட்டாலோ, அதுபோல இறந்த ஆன்மாக்கள், தீய ஆவிகள், பெண்கள், சண்டாலாக்கள், திராவிடர்கள், ஆந்திரர்களால் சூழப்பட்டால், உடனடி மரணத்திற்கான அறிகுறி ”என புத்தகத்தில் கூறியுள்ளது.

புனித நூல் எனக் கூறப்படும் மனுதர்ம்ம சாஸ்திரத்தில் “ ஒடுக்கப்பட்ட மக்களை சூத்திரர்கள் எனவும், அவர்களின் தொழிலை ஏழு வகைப்படுத்துகின்றனர், அந்த ஏழு வகை சூத்திரர்களிடமிருந்து பிராமணர்கள் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பொருள்கள் அவர்களுக்கு சொந்தம் ஆனது அல்ல” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதங்களின் அடிப்படையில் உருவான மதம் என போற்றப்படும் இந்து மதத்தில், ரிக் வேதத்தின் ஹயத்ரிய பிராமணன் புத்தகத்தில் (Source: Aitareya Brahmana of the Rigveda, Published 1922, The Panini Office, Allahabad. Page No: 333) ” சூத்திரர்கள் மற்ற மூன்று உயர் ஜாதிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் மற்றும் தனது எஜமானர்களிடம் அடிமையாக இருக்க வேண்டும்”  மனிதர்களை அடிமைபடுத்த வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், 1977 ஆம் ஆண்டு பிரபுபாதா அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையில் இந்து மதத்தில் இருப்பதாக அமெரிக்காவில் பேசியவை, ” சூத்திரனை கட்டுப்படுத்த வேண்டும் அவர்களுக்கு ஒருபோதும் சுதந்திரம் வழங்கக் கூடாது. அமெரிக்காவில் கருப்பர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல் அவர்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் சம உரிமை வழங்கியதால் உங்களுக்கு அவர்கள் மிகவும் தலைவலியாக உள்ளனர். குடிகாரர்களாக இருக்கிறார்கள். அதுபோல சூத்திரர்களை அடிமைப்படுத்தி கட்டுக்குள் இருப்பது அவசியம், அவர்களுக்கு போதுமான உணவும் உடையும் அளித்தால் அவர்கள் திருப்தி அடைவார்கள். இதற்கு மேல் அவர்களுக்கு என்ன வேண்டும் ?” என பேசியுள்ளார்.

இந்து மத சொற்பொழிவாளர்கள் இந்து மத புனித நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியதை பார்த்துள்ள நாம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த இருவர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், சுதந்திரத்திற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து கூறப்பட்டுள்ள ஆகம விதிகளை மேற்கோள் காட்டிய வரிகள் வருமாறு ” சிவ பிராமணர்கள் கருவறையிலிருந்து தரிசிக்கலாம், பிற பிராமணர்கள் கருவறைக்கு அருகில் நின்றும், சத்திரியர்கள் வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் தூரத்தில் நின்றும், இசைக் கலைஞர்கள் நடன கலைஞர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலும், பஞ்சமர்கள் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரங்கள் : 

Vivekananda book

Aitareya Brahmana of the Rigveda, Published 1922, The Panini Office, Allahabad. Page No: 333

www.easyayurveda.com/2022/06/21/poorvaroopiyam-indriyam

https://vanisource.org/wiki/770214_-_Conversation_B_-_Mayapur

https://main.sci.gov.in/jonew/judis/43190.pdf (Page No: 40)

Please complete the required fields.




Back to top button
loader