அடையார் ஆனந்த பவன் ஸ்ரீனிவாச ராஜா இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக அவதூறு பரப்பும் வலதுசாரிகள் !

டையார் ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் கடையைப் புறக்கணிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி , பாஜகவினர் உட்பட வலதுசாரிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா இந்துக்களின் ஒரு சமுதாயத்தின் மீது வன்மமாகப் பேசியதே இதற்குக் காரணம் என வலதுசாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. உண்மையில் அவர் பேசியது என்ன? 

ஸ்ரீனிவாச ராஜா பேசியது : 

அடையார் ஆனந்த பவன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா Social Talkies’ என்னும் யூடியூப் பக்கத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் நெறியாளராக இருந்து ஸ்ரீனிவாசனிடம் ‘ஒரு காலக்கட்டத்தில் உணவகங்களில் பெரும்பாலும், குறிப்பாகச் சைவ உணவகங்கள் ஐயர்கள் வசம்தான் இருந்தது. அதன் பிறகுதான் இது மெல்ல மெல்ல மாறுதல் அடைந்தது. எப்படி அந்த மாற்றம் வந்தது’ என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அதற்கு ஸ்ரீனிவாசன் அளித்த பதில், “யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாறியதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியாரைச் சொல்ல வேண்டும். குலத்தொழில் என்பதை மாற்றிக் காண்பித்தது அவரும் ஒருவர். யார் வேண்டுமானால் எந்த தொழிலையும் செய்யலாம். காலம் மாறுகிறது. அரசின் ஆதரவுகள் கிடைக்கின்றன. வங்கிகள் கடன் உதவி அளிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் செய்து கொண்டிருந்த தொழில், இன்று யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்பது மாதிரி மாற்றங்கள் வந்து அனைவரும் செய்கிறார்கள்” எனக் கூறுகிறார்.. 

இந்த பகுதியை வைத்துக் கொண்டுதான் அவர் இந்துக்களின் ஒரு சமூகத்திற்கு எதிராகப் பேசிவிட்டார் என வலதுசாரிகள் பரப்புகின்றனர். ஸ்ரீனிவாசன் நேர்காணல் 4 பகுதிகளாக அந்த யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதன் முதல் பகுதியில் ‘1988ல் சுவாமி கிருபானந்தாவாரியர் கைராசியில் தனது தந்தை (திருப்பதி ராஜா) முதல் கடையினை திறந்தார்’ எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி அவரது நெற்றியில் இந்து மத அடையாளமாகப் பொட்டு வைத்துள்ளார். கையில் கயிறு கட்டியுள்ளார். இவற்றில் இருந்தே அவர் இந்து மத பற்றாளர் என்பதை அறிய முடிகிறது. 

அவர் எந்த இடத்திலும் பிராமணர் குறித்தும் இந்து மதம் குறித்தும் தவறான கருத்துக்களைக் கூறவில்லை. நெறியாளர் கேட்ட கேள்விக்கு, இன்று அனைவரும் அனைத்து தொழிலும் செய்யலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. அதற்குத் தந்தை பெரியாரும் ஒரு காரணம் என்றுதான் கூறியுள்ளார். அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தொழிலைத்தான் செய்ய வேண்டும் எனச் சொல்ல வருகிறார்களா?

பிறப்பின் அடிப்படையில் தொழில் : 

இந்தியாவில் வர்ணமாகவும் சாதியாகவும் பிரிக்கப்பட்டு இன்னார் இந்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்பது சனாதன விதியாக உள்ளது. 

உதாரணமாக, இந்துமத புராணம் ‘பகவத்கீதையில்’ அத்தியாயம் 3 (வசனம் 35) மற்றும் 18ல் (வசனம் 47), ‘நான்கில் ஏதேனும் ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர், தான் இருக்கும் வர்ணத்திற்கு ஒதுக்கப்பட்ட வேலையைக் காட்டிலும், வேறொரு வர்ணத்தினரின் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்னும் போதிலும் அதனைச் செய்யக் கூடாது’ என்றுள்ளது. அதாவது ஒருவரின் பிறப்பின் அடிப்படையிலேயே அவரது தொழில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் பொருள். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்த நிலையிலும், பிறப்பின் அடிப்படையில் உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை மட்டும் செய் என மறைமுகமாக நிர்ப்பந்திக்கும் திட்டங்கள் ஒன்றிய அரசின் மூலம் வந்த வண்ணம் உள்ளது. 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் சலவைத்தொழிலாளர், முடி திருத்துபவர், காலணி தைப்பவர் என 18 தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் தங்களின் பாரம்பரிய தொழிலில்தான் ஈடுபட்டுள்ளோம் என்பதை 3 கட்டங்களில் அரசிடம் நிரூபிக்க வேண்டும். இது அப்பட்டமாகக் குலத்தொழிலை ஊக்குவிப்பது தான். 

மேலும் படிக்க : EWS எனும் சமூக அநீதி: 79 சாதிகள் பட்டியலின் உண்மை குறித்த வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

எந்தெந்த துறையில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ளது என்பதைத் தரவுகளுடன் இதற்கு முன்னரே யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க : ‘பார்ப்பனர் ஆதிக்கம்’ இன்றும் உண்மையா? தரவுகள் கூறுவதென்ன ?

ஸ்ரீனிவாசன் நேர்காணல் 4 பகுதிகளாக உள்ளது. அதில், 3வது வீடியோவின் கடைசியில் அடுத்து வரும் பகுதியின் முன்னோட்டம் உள்ளது. அதில் நெறியாளர் ஐயர் குறித்துக் கேட்கும் கேள்விப் பகுதி மட்டும் உள்ளது. 4வது வீடியோவில் ஐயர் குறித்த கேள்வியோ ஸ்ரீனிவாசன் அளித்த பதிலோ இல்லை. 

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ராஜா, பெரியார் என்கிற பெயரைக் குறிப்பிட்டதன் காழ்ப்புணர்ச்சியிலேயே அவரது கடையைப் புறக்கணிக்க வேண்டும் என வலதுசாரிகள் கூச்சலிட்டு வருகின்றனர்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader