பசு அக்கறை காட்டும் தமிழ்நாடு அரசு! என்ன திட்டம் ?

சென்னை ஆவடியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் பசு மடம் (கோசாலை) தொடர்பாக  இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ததாக செய்திகள் வெளியாகியது. இதையடுத்து, பசுக்கள் மீது தமிழ்நாடு அரசு அக்கறை காட்டுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகிறது.

இந்துசமய அறநிலையத்துறையின் திட்டம் : 

2022-23 தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் அமைச்சர் சேகர் பாபு, ” 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். திருக்கோயில்களுக்கு தானமாக வழங்கப்படுகின்ற கால்நடைகளைப் பராமரிக்க நவீன வசதிகளுடன் கூடிய கோசாலை திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், கோயில்பதாகை அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி செலவிடப்படும்” என வெளியிட்ட அறிவிப்பின் படி ஆவடியில் கோசாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்துள்ளார்.

கோசாலைகள் :

“திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெறும் கால்நடைகளைப் பராமரிக்க ஒருங்கிணைந்த கோசாலைகள் பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில் உள்ளன. திருக்கோயில்களுக்கு உபயமாக பெறப்படும் உபரி கால்நடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் விலையின்றி வழங்கப்படுகிறது ” என இந்துசமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன் அவசியம் என்ன ? 

கோயில்களில் மாடுகளை தானமாக வழங்கும் நடைமுறை உள்ளது. பழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய நான்கு இடங்களில் ஒருங்கிணைந்த கோசாலைகள் உள்ளன. பிற கோயில்களில் தானமாக வழங்கப்படும் பசுக்களுக்கு இடமில்லை எனும் பட்சத்தில் அங்கு அனுப்பப்பட்டு பராமரிக்கப்படும்.

கடந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான பசுக்களில் உபரியாக இருக்கும் பசுக்களை அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு கொடையாக வழங்கி உள்ளனர்.

இப்படி கொடையாக வழங்கப்படும் பசுக்கள் அடிமாட்டுக்கு விற்கப்படுவதாக பிப்ரவர் 2022ல் தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை அக்குற்றச்சாட்டை மறுத்து இருந்தது. எனினும், பூசாரிகளுக்கு பசுக்களை மறுதானம் வழங்குவதை நிறுத்தி விட்டு , அவற்றை கோசாலைகளுக்கு அனுப்பலாம், தானமாக மற்றும் மறுதானம் செய்யப்பட்ட பசுக்களின் விவரங்களை தெரிவிக்கும்படி கோவில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவுவிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் பக்தர்கள் கோயில்களுக்கு தானமாக அளிக்கும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவை முறையாக பராமரிக்க முடியாமல் சாலைகளில் சென்று விபத்துக்குள்ளாகி இறப்பதும், சில நேரங்களில் வாகன ஓட்டுனர்களும் இறக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

உதாரணமாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக கொடுக்கும் மாடுகளை கோசாலை அமைத்தும் கட்டுப்படுத்த முடியாமல் விளைநிலங்களில் நாசம் செய்வதாகவும், சாலையில் விபத்துக்குள்ளாகி வருவதாகவும் 2021 டிசம்பரில் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

2020-ல் துறையூர் கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் பராமரிப்பு சரியாக இல்லை என்பதாலும், கோசாலைக்குள் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்த போது வெறிநாய்கள் உள்ளே புகுந்து இளங்கன்றை கடித்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களை குறிப்பிட்டு மே 4-ம் தேதி சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ” கோயில்களில் தானமாக கொடுக்கின்ற பசுக்களை ஆங்காங்கே விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதற்கு உரிய பாதுகாப்போடு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நம்முடைய திருவள்ளூர் மாவட்டத்தில் கோயில்பதாகை இடத்தில் திருக்கோயிலுக்கு சொந்தமாக இருக்கின்ற சுமார் 25 ஏக்கரில் 22.50 கோடி செலவில் கோயில்பதாகையிலும், திருச்சி ஸ்ரீரங்கத்திலும் ஒரு பசுக்கள் மடத்தைக் கட்ட உள்ளதாக ” பேசியுள்ளார்.

ஏற்கனவே தமிழக கோயில்களில் கோசாலைகள் இருந்து வருகின்றன. கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பராமரிக்கவே ஆவடி மற்றும் ஸ்ரீரங்கத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலத்தில் புதிய கோசாலை அமைப்பதாகவும், தமிழ்நாட்டில் உள்ள 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோசாலைகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் கோவில்களின் கோசாலைகள் பிரிவில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்தது.

link : 

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ah_t_ann_2022_23.pdf

https://cms.tn.gov.in/sites/default/files/announcement/hrce_t_ann_2022_23.pdf

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை – நிகழ்வுகள் | 04 – 05 – 2022

Please complete the required fields.
Back to top button