பாலின் கொழுப்புச்சத்து 3.5% ஆக குறைப்பு, அதே விலை.. எழும் குற்றச்சாட்டு.. கோவை ஆவினில் நடப்பது என்ன ?

ஆவின் நிறுவனத்தின் தரப்பில் சமன்படுத்திய பால்(நீலம்), நிலைப்படுத்திய பால்(பச்சை), நிறை கொழுப்பு(ஆரஞ்சு) என வெவ்வேறு வகையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நீல நிற பாக்கெட் பால் அரை லிட்டர் ரூ20க்கும், பச்சை நிற பால் அரை லிட்டர் ரூ.22க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2023 பிப்ரவரி 1ம் தேதி விநியோகம் செய்யப்பட்ட பச்சை நிற ஆவின் பாக்கெட்களில் ” Cow milk “ மற்றும் FAT 3.5% என இடம்பெற்று இருக்கிறது. பாலின் கொழுப்புச்சத்தின் அடர்த்தியை குறைத்து 3.5% ஆக மாற்றி உள்ளதாகவும், அதேநேரத்தில் விலையை குறைக்காமல் அதே விலையில் விற்பனை செய்வதாகவும் கூறி சமூக வலைதளங்களில் கண்டனங்களுடன் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த பால் பாக்கெட் புகைப்படங்கள் கோவை பகுதியில் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஆவின் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, ” பச்சை நிற பாக்கெட் பாலில் கொழுப்புச்சத்து 4.5 கிராம் ” இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாக்கெட்டிலும் இது குறிப்பிடப்பட்டு இருக்கும். நீல நிற பாக்கெட் பாலில் கொழுப்புச்சத்து 3% உள்ளது. முன்பு, பச்சை மற்றும் நீல நிறம் ஆகிய இரண்டிற்கும் 1.5% கொழுப்புச்சத்து வித்தியாசம் இருந்தது, தற்போது 0.5% மட்டுமே உள்ளது.
இதுகுறித்து சென்னை ஆவின் தரப்பை தொடர்பு கொண்டு பேசுகையில், ” சென்னை மாநகராட்சி பகுதியில் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பாக்கெட் பால்களில் கொழுப்புச்சத்து 4.5% உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்ப அளவு மற்றும் விற்பனைகள் மாறுபடும். அது அந்த மண்டல நிர்வாகத்தின் முடிவுகள் ” என பதில் அளித்து இருந்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது, “ஆவினில் 27 யூனியன்கள் உள்ளன (சென்னையை தவிர்த்து). அந்தந்த யூனியனின் லாப நட்டத்தை பொறுத்து சில விசயங்களை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் யூனியனில் 1ம் தேதி முதல் நிலைப்படுத்தப்பட்ட பாலினை ‘Cow Milk’ என மாற்றி 3.5 கொழுப்பு எனப் பதிவிட்டு, அதே கவரில் அதே விலைக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளனர்.
ஒரு சதவீதம் கொழுப்புச்சத்து குறைத்தால், ஒரு லிட்டர் பாலுக்கு 6 ரூபாய் வரை குறைக்க வேண்டும். கொழுப்பின் விலை என்பது நெய்க்கு இணையான விலை. அப்படிப் பார்க்கையில் சுமார் 600 ரூபாய் வருகிறது. ஒரு சதவீதம் என்னும் போதே 6 ரூபாய் குறைக்க வேண்டும். ஆனால் விலையை குறைக்கவில்லை. எனவே இதனை மக்கள் மீது திணிக்கப்படும் மறைமுக விலை உயர்வாகவே கணக்கில் கொள்ள வேண்டும்” என கூறினார்.
இதையடுத்து, கோயம்புத்தூர் ஆவின் பிரிவின் பொது மேலாளர் இராமநாதனை தொடர்புகொண்டு பேசிய போது, ” இங்கு FAT தட்டுப்பாடாக உள்ளதால் அமுல் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்குகிறோம். ஒரு லிட்டர் பால் விற்கிறோம் என்றால் 4 ரூபாய் நட்டமாகிறது. இன்றைய தேதியில் லாபத்தில் நாங்கள் செயல்படவில்லை.
விலையில் மாற்றம் செய்வதை ஏஜெண்டுகள் ஏற்கவில்லை. ஒரு ஏஜெண்டுக்கு மாதத்திற்கு 5,000 முதல் 6,000 வரை மட்டுமே கமிஷன் கிடைக்கிறது. விலை குறைக்கும் போது அவர்களுக்கு கட்டுபடி ஆகாது. மேலும் இது தற்காலிகமானது. தற்போது பாலின் வரத்து குறைவாக உள்ளது. மார்ச் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுவோம்.
ஆவின் பொது மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது அல்ல. நாங்கள் லாப நோக்கம் இல்லாமல் செயல்படுகிறோம். முறையாக அறிவிப்பு கொடுத்துதான் இதனை செய்துள்ளோம். மறைமுகமாக எதுவும் செய்யவில்லை. பால் பாக்கெட்டிலேயே கொழுப்பு சத்து எவ்வளவு உள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்துளோம் ” எனத் தெரிவித்து இருந்தார்.
இதுபோல் வேறு எங்கேனும் மாற்றப்பட்டுள்ளதா எனக் கேட்டதற்கு, காரைக்குடி, மதுரை பகுதிகளில் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், “நிறைய மாடுகளுக்கு கழலை நோய் வந்துள்ளது. சுமார் 2 லட்ச மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தனியார் நிறுவனங்கள் மாடுகளுக்கு எவ்வித பராமரிப்பு பணிகளும் செய்வதில்லை. பலனை மட்டும் அனுபவிக்கின்றனர். 10, 20 நாட்களில் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம்” எனத் தெரிவித்தார்.
சென்னையில் விநியோகிக்கப்படும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்களில் ” COW milk “ என்றோ, கொழுப்புச்சத்து 3.5% என்றோ குறிப்பிடவில்லை. கோவை உள்ளிட்ட மண்டலங்களில் மட்டும் கொழுப்புச்சத்து குறைக்கப்பட்டு, அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வருகிறது. அதையும் மாற்றிக் கொள்வதாக தெரிவித்து உள்ளனர். எனினும், கொழுப்புச்சத்தை குறைத்து விட்டு அதற்கான விலையை குறைக்காமல் இருப்பது சரியல்ல !