ஆவின் Vs அமுல் சர்ச்சை.. ஒன்றிய அரசு மற்றும் அமுலின் திட்டம் இதுதான் !

சமீபத்தில் கர்நாடகாவின் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி‘-க்கு போட்டியாக பெங்களூருவின் பால் மற்றும் தயிர் சந்தையில் குஜராத் அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான ‘அமுல்‘ நுழைவது, பால் உற்பத்தி பகுதியை மீறும் ஒரு செயல் எனக் கூறி, அமுலுக்கு எதிராக கன்னட ஆதரவு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இது கர்நாடகா அரசியலிலும் எதிரொலித்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே இதுநாள்வரையில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இருந்தும் பால் கொள்முதல் செய்வது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடந்த மே 25 அன்று கடிதம் எழுதி இருந்தார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் செழிக்க பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மை புரட்சி‘ என்ற கொள்கைக்கு எதிராக உள்ளது.” என்று தெரிவித்துள்ளது மிக முக்கியமானது.
ஆவின் வாயிலாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், அமுல் நிறுவனம், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில், மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அமுல் நுழைந்தது எப்படி?
அமுல் (Anand Milk producers Union Limited), 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குஜராத் அரசின் பொதுத்துறை பால் நிறுவனம். இது ஆரம்பத்திலிருந்தே தென்னிந்தியாவில் தனது பால் கொள்முதலை ஆரம்பிக்க பல முயற்சிகளை செய்து வந்தாலும், கடந்த 2020-ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் தனது அதிகபட்ச விற்பனை இலக்கு குறித்த தனது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இதுகுறித்து அமுல் பிராண்டின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனரான ஆர்.எஸ்.சோதி கூறுகையில், மேற்கிலிருந்து தொடங்கி பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி சென்றோம். இப்போதும் நாங்கள் தெற்கில் நுழையவில்லை என்றால் தோல்வியடைந்து விடுவோம் என்று கூறி, இரண்டு ஆண்டுகளில் நிறுவனம் சுமார் ₹200-300 கோடி முதலீடு செய்யும் என்று தெரிவித்தார்.
அதன்படி அமுல் நிறுவனம் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்தது. இவ்வாறு புதிய பால் சந்தையில் அமுல் நுழைந்ததன் மூலம் அங்கு உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டு வந்த அம்மாநில அரசுகளின் பால் விநியோகத்தில் பெரும் சிக்கலையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளரும், எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ், “இதனால் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவதாக கூறியதோடு, பாஜகவின் இந்த ‘ஒரே நாடு, ஒரே பால்‘ என்ற முழக்கத்தை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2021 ஜூலை 6 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, கூட்டுறவு அமைச்சகம் என்ற துறையை புதிதாக அறிமுகப்படுத்தியது. இதன்படி 7 ஜூலை, 2021 அன்று முதல் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு, கூட்டுறவு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. பதவியேற்றதுமே உள்துறை அமைச்சரான அமித்ஷா, அமுல் நிறுவனம் மற்ற ஐந்து கூட்டுறவு சங்கங்களுடன் ஒன்றிணைந்து பல மாநில கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் என்று குவஹாத்தியில் தனது அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும் கடந்த 2022 அக்டோபர் 7 அன்று ஒன்றிய அரசு, தனது கூட்டுறவு அமைச்சகத்தின் மூலம் பாலை இந்திய பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனது அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஏற்றுமதிக்கான ஒப்புதலையும் கடந்த 2023 ஜனவரி 11 அன்று ஒன்றிய அமைச்சரவை அளித்தது. ஏற்றுமதியை அதிகரிக்க, இரண்டு லட்சம் கிராமப்புற கூட்டுறவு சங்கங்களை மாநில கூட்டுறவு ஏற்றுமதி சங்கத்துடன் இணைக்கும் முடிவையும் 2023 மார்ச் 18 அன்று முன்மொழிந்தது.
இவ்வாறு ஒன்றிய கூட்டுறவு அமைச்சகத்தின் மூலம், பால் ஏற்றுமதி பல மாநில அரசின் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் இந்திய உள்ளூர் மக்களின் பால் நுகர்வானது அரசு நடத்தும் பால் நிறுவனங்களிடமிருந்து, தனியாரின் பால் நிறுவனங்களுக்கு மாற்றப்படுவதற்கான நிர்பந்தத்தையே இது காட்டுகிறது. இதன் மூலம் இனி வரும்காலங்களில் மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து பால் வாங்குவதற்கான நிலைக்கு தள்ளப்படலாம் என்பதையும் அறிய முடிகிறது.
இதற்கிடையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் தயிர் பாக்கெட்டுகளில் “தாஹி” என்ற ஹிந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கோரி FSSAI தனது அறிவிப்பை 2023 மார்ச் 10 அன்று வெளியிட்டது. ஹிந்தி திணிப்பை வலியுறுத்திய மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டனங்களை தெரிவித்த நிலையில், FSSAI தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நுழைந்த அமுல், தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தனது பால் கொள்முதலை ஆரம்பிக்க முயற்சி எடுத்தது. அவை தோல்வியில் முடிவடையவே தற்போது மீண்டும் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் தனது பால் கொள்முதலை ஆரம்பித்துள்ளது.
ஆவின் vs அமுல், மக்களுக்கான பால் எது?
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனமான ஆவின் 1981 பிப்ரவரி 1 முதல் பதிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகின்றது. மேலும் இது மொத்தம் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களையும், 9673 பால் கூட்டுறவு சங்கங்களையும் தற்போது கொண்டுள்ளது.
மேலும் கடந்த 2021-இல் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3ரூ விலை குறைக்கும் அரசாணையில் கையெழுத்திட்டது, அதன்படி இந்த விலை குறைப்பு கடந்த 2021 மே 16 முதல் அமலுக்கு வந்தது. இதே போன்று குஜராத் அரசின் பொதுத்துறை பால் நிறுவனமான அமுல் 2023 பிப்ரவரி 02 முதல் பால் லிட்டருக்கு ரூ 3 உயர்த்தி தனது அறிவிப்பை வெளியிட்டது.
ஆவின் மற்றும் அமுலின் தற்போதைய விலை நிலவரங்களை கீழே உள்ள படத்தில் காணலாம். இதன் மூலம் ஆவினின் பால் விலை நிலவரங்கள், அமுல் நிறுவனத்தை விட குறைவாக உள்ளதை தெளிவாக அறிய முடிகிறது.
அமுல் வருவதால் ஆவினுக்கு என்ன இழப்பு ?
அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் வருவதால் ஆவினுக்கு என்ன இழப்பு என்பது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அவர்களிடம் பேசிய போது, “தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் பால் உற்பத்தி இரண்டே கால் கோடி லிட்டராக உள்ளது. இதில் ஆவின் கொள்முதல் செய்யும் பால் வெறும் 16 சதவீதம் மட்டுமே. மீதி 84% பாலை தனியார் நிறுவனங்கள் தான் கொள்முதல் செய்து வருகிறார்கள். கர்நாடக கூட்டுறவு பாலான நந்தினி, ஆந்திரா பாலான சங்கம் டைரி கூட்டுறவு நிறுவனம், கேரளாவின் மில்ம்மா, பாண்டிச்சேரியின் பான்லே இவர்களும் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்கிறார்கள்.
மேலும் ஆவின், பால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வது ஒரு லிட்டருக்கு 35/- ரூ, ஆனால் அமுல் 38.50 ரூ வரை கொடுத்து பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கிறார்கள். மேலும் ஆவின், பாலின் திடச்சத்துகள் ஒன்றிற்கு 2ரூ 91 காசு மட்டுமே கொடுக்கிறது. ஆனால் அமுல் திடச்சத்துகளுக்கு ரூ 19 காசு வரை கொடுக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள பால் விவசாயிகள் அமுலுக்கு பாலை கொள்முதல் செய்ய அதிக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்று குற்றச்சாட்டை வைத்த அவர், ஆவினை காப்பதற்காகவே இதற்கான தகுந்த ஆதாரங்களை திரட்டி, நாங்கள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம் என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர் தனியார் நிறுவனங்கள் பால் விவசாயிகளுக்கு கொடுக்கும் பால் கொள்முதல் விலையை கொரோனா போன்ற இக்காட்டான காலங்களில் அதிக விலைக்கும், மற்ற காலங்களில் திடீரென பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்தும் கொடுத்து வந்தன. ஆனால் ஆவின் நிறுவனம் எப்போதும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையையே கொடுத்து வருவதன் மூலம் பால் விவசாயிகளின் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது. மேலும் இது நுகர்வோருக்கும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையையே கொடுத்து வருகிறது என்று கருத்து தெரிவித்தார்.
ஆதாரங்கள்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1908343
https://cms.tn.gov.in/sites/default/files/go/ahf_t_32_2022_0.pdf