பாகிஸ்தான் ராணுவத்தை புகழ அபிநந்தன் கட்டாயப்படுத்தப்பட்டாரா ?

பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட விங் கம்மாண்டர் அபிநந்தனை உரிய பாதுகாப்புடன் மார்ச் 1-ம் தேதி இந்திய எல்லையில் ஒப்படைத்தது பாகிஸ்தான். இந்த நிகழ்வுக்கு முன்பு அபிநந்தன் பேசிய வீடியோ ஒன்று அந்நாட்டின் ஊடகங்கள் முதல் சமூக வலைதளங்களில் பரவி தற்போது இந்தியாவிலும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் பற்றி பெருமையாக பேச கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கலாம் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. காரணம், அபிநந்தனை மாலை ஒப்படைப்பதாகக் கூறி இரவு 9 மணிக்கு தான் ஒப்படைத்தனர். தாமதத்திற்கு காரணம் கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்ததே எனவும், அவர் பேசிய வீடியோவில் 10-15 இடங்களில் கட் செய்யப்பட்டு வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டு உள்ளது எனவும் இந்திய ஊடங்களில் வெளியாகி வருகிறது.
அபிநந்தன் பேசியவை தமிழில்,
என்னுடைய பெயர் விங் கம்மாண்டர் அபிநந்தன். நான் இந்திய விமானப்படையின் விமானி. நான் இலக்கை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தேன். அப்பொழுது பாகிஸ்தான் தாக்கி கீழே வீழ்த்தியது. நான் என்னுடைய உடைந்த விமானத்தில் இருந்து வெளியேறியாக வேண்டியிருந்தது. வெளியேறிய பிறகு பாராசூட்டில் பறந்து கீழே தரையில் விழுந்தேன். என்னிடம் ஒரு பிஸ்டல் இருந்தது.
அங்கு மிக அதிகமான மக்கள் இருந்தனர். அந்த நேரத்தில் பிஸ்டலை தூக்கி போட வேண்டும் என்ற ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது. மக்கள் என்னை துரத்தி பிடித்தனர், அவர்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தனர். அப்பொழுது பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து இரு வீரர்கள் வந்து என்னை காப்பாற்றினர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் கேப்டன்கள். மக்களிடம் இருந்து எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் என்னை காப்பாற்றினார்கள்.
அதன்பிறகு, அவர்களுடைய பகுதிக்கு என்னை அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். அதன் பிறகு நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு நான் பரிசோதிக்கப்பட்டு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
“ பாகிஸ்தான் ராணுவம் மிகவும் ஃப்ரோபெஸ்னல் சேவை. நான் அதில் ஒரு அமைதியைக் கண்டேன். பாகிஸ்தான் இராணுவத்துடன் நேரத்தை கழித்தேன். மிகவும் ஈர்க்கப்பட்டேன் “.
” இந்திய ஊடகங்கள் அதிகமாக மிகைப்படுத்துகிறது . ஒரு சின்ன விசயத்திற்கு கூட முக்கியத்துவம் கொடுத்து அதில் மசாலாவை கலந்து சொல்கிறது. அதனால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள் ” . இவையே அவர் பேசியதாக வெளியானவை.
அபிநந்தன் பேசிய வீடியோவில் 10-15 இடங்களில் கட் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. பல வார்த்தைகள் கட் செய்யப்பட்டு வீடியோவை பாகிஸ்தான் உருவாக்கி உள்ளது. அபிநந்தன் வீடியோவில் இந்திய ஊடகங்களின் செயலை வெளிப்படுத்தி உள்ளார்.
எனினும், பாகிஸ்தானை புகழ்ந்து பேசுமாறு அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கட்டாயப்படுத்தி இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் பேசி வருகின்றன. இதற்கான பதிலையும், அங்கு நிகழ்ந்தவை பற்றியும் அபிநந்தன் கூறினால் மட்டுமே உண்மை தெரிய வரும்.
ஊடகங்கள் சொல்வது இப்படி இருக்காலம் என்ற அடிப்படையில் தான். அதற்கான காரணம் பல முறை வீடியோவில் செய்யப்பட்டுள்ள எடிட். அபிநந்தன் பேசினால் முழு விவரம் வெளி வரும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.