“நமோ டிவி” வழக்கமான டிவியே இல்லை!| உரிமையாளர் யாரென தெரியாது ?

2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கையில் ” நமோ டிவி ” என்கிற தொலைக்காட்சி ஒரு வாரமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில், பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டங்கள், உரைகள் என மோடி சமந்தப்பட்டவையே 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பல தொலைக்காட்சி சேனல்கள் உரிமம் பெற காத்து இருக்கும் பொழுது ” நமோ டிவி ” எப்படி இவ்வளவு எளிதாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்கிற கேள்வி எழுந்தது. நமோ டிவி குறித்து சமூக வலைதளங்களிலும் பேச்சுகள் எழுந்தன. நமோ டிவி பற்றி தேர்தல் ஆணையம், அமைச்சகம் கூறியது உள்ளிட்ட கூடுதல் தகவல்களையும் காண்போம்.
- மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி “ நமோ டிவி ” பற்றி கூறுகையில், ” இதற்கு பொருத்தமான அதிகாரிகள் பதில் அளிப்பார்கள், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையம் அதைப் பற்றி விளக்கம் அளிப்பார்கள் ” என தெரிவித்து இருந்தார்.
- தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் பதில் அளிக்கையில், ” நமோ டிவி வழக்கமான சேனல் இல்லை மற்றும் அமைச்சகத்தின் சேனல்களின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடமும் பெறவில்லை. அமைச்சகத்தின் இணையதளத்தில் அனுமதிக்கப்பட்ட தனியார் செயற்கைக்கோள் சேனல்களின் பட்டியலிலும் இது இல்லை ” என்றுள்ளனர்.
- தற்போது DTH தளங்களில் இயங்கும் இந்த சேனல், சேவை வழங்குபவர்களால் தொடங்கப்பட்ட ஒரு வகை விளம்பர தளம். அத்தகைய தளங்களை இயக்குவதற்கு தேவையான அனுமதி பெறவில்லை என்ற கிடைத்த ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
- இதற்கு நடுவில் ஆளும் பிஜேபி கட்சி நமோ டிவியை பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருவதாக தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு மார்ச் 31-ம் தேதி எழுதியது.
- 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ” நமோ டிவி ” பிரதமர் மோடியின் பெயரையும், உருவத்தையும் லோகோவாக வைத்து உள்ளது. இதனை பிஜேபி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் கட்சியுடன் இணைந்தவர்கள் நமோ டிவியை பிரபலப்படுத்துகின்றனர். கட்சி சார்ந்தவர்கள் ” நமோ டிவி ” மற்றும் ” நமோ செயலி” பயன்படுத்த ட்விட் செய்து வருகின்றனர்.
- நமோ டிவிக்கு நிதி அளித்தது யார் ? உரிமையாளர் யார் ? என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், முக்கிய DTH தளங்களில் ” நமோ டிவி ” ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இந்த சேனலுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளன.
- காங்கிரஸ் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. மேலும், முன்பாக கன்டென்ட் டிவி என அழைக்கப்பட்ட நமோ டிவி, ” முற்றிலும் பிரதமர் மோடி மற்றும் பிஜேபி கட்சியை விளம்பரப்படுத்தவும், அரசு மற்றும் நரேந்திர மோடியின் தனிப்பட்ட சாதனைகள், பிரதமரின் பேரணிகள் மற்றும் பிஜேபி தலைவர்களின் பேட்டிகளை ஒளிபரப்பு செய்கிறது ” என்றுள்ளனர்.
- ஏப்ரல் 11 -ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரையில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகே நடத்தைக்கான மாதிரி குறியீடுகள் நடைமுறைக்கு அமல்ப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே நமோ டிவி தன் தேர்தல் பிரச்சார ஒளிபரப்பை துவங்கி உள்ளது.
- நமோ டிவி ஒருவகையான விளம்பரத் தளம் எனக் கூறுகின்றனர். தேர்தல் சமயத்தில் பிஜேபி கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரங்களை DTH மூலம் மக்களிடம் கொண்டு செல்ல நினைப்பது சமூக வலைதளங்களில் விமர்சனங்குள்ளாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களின் தொலைக்காட்சி மூலம், சமூக வலைதள ஆதரவாளர்கள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொள்ளவே அதிகம் முயற்சிக்கின்றனர். மக்களிடம் நேரடியாக தங்களின் விளம்பரத்தை கொண்டு சேர்க்க அதிக அளவில் தொகையும் செலவிடப்படுகிறது.