மியான்மர் இராணுவ நிறுவனத்தில் அதானி முதலீடு என எழும் சர்ச்சை !

மியான்மர் இராணுவம் மக்களின் அரசாங்கத்தை கைப்பற்றி இராணுவ ஆட்சியை முன்னிறுத்தி ஒரு வருட “தேசிய அவசர நிலையை” அறிவித்தது. கடந்த பிப்ரவரி 1-ம் தேதி இதை எதிர்த்து போராடிய மியான்மர் மக்கள் மீது தொடர் தாக்குதல்கள், கொடுமையான மனித உரிமை மீறல் என உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மியான்மர் ராணுவம். இச்சம்பவத்தில் 350க்கும் அதிகமான மக்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் மியான்மர் இராணுவத்தின் அதிகாரத்தில் உள்ள மியான்மர் எகனாமிக் கார்ப்பரேஷன் (MEC) எனப்படும் இராணுவ நிறுவனத்திடம் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை ‘நில குத்தகை கட்டணமாக’ அதானி குழுமம் செலுத்தி இருப்பதாக தரவுகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
[1/4] BREAKING: Leaked documents reveal @Adaniports paid tens of million of dollars to a #Myanmar military company complicit in shocking human rights abuses. #StopAdani @SPDJIndices @SPGlobal @blackrock @TIAA @jpmorgan @mufgbk_official @HSBC @NorgesBank https://t.co/OszBtcx6qL
— Stop Adani (@stopadani) March 29, 2021
2019 ஜூலையில், அதானி குழுமம் மியான்மரில் உள்ள யங்கோன் நகரில் துறைமுகத்தை உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அப்போது, அதானி குழுமத்தின் தலைமை நிர்வாகியான கரண் அதானி, மியான்மர் இராணுவத் தலைவர், சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங்கை சந்தித்தற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏபிசி நியூஸ் வெளியிட்டது.
இந்த இராணுவ தலைவர் ஜெனரல் மின் ஆங் ஹ்லேங் தான் மியான்மர் மக்கள் மீது சர்வாதிகார தாக்குதலில் ஈடுபட்ட இராணுவ அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, மியான்மர் இராணுவத் தலைமைகளுடன் எந்த விதமான தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை என அதானி நிறுவனம் கடந்த மாதம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாங்கோன் ரிஜியன் இன்வெஸ்ட்மென்ட் கமிஷன் எனும் அமைப்பின் ஆவணங்கள் கசிந்தது, அதனை ஏபிசி நியூஸ் வெளியிட்டது. அந்த ஆவணத்தின் படி, மியான்மர் எகனாமிக் கார்ப்பரேஷனிடம் (MEC) 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை ‘நில குத்தகை கட்டணமாக’ அதானி குழுமம் செலுத்தி இருப்பதாக குறிப்பிடுகிறது.
இதுபோக மேலும் 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதானி குழுமம் மியான்மர் எகனாமிக் கார்ப்பரேஷனிடம் “ நில அனுமதி” கட்டணமாக செலுத்த இருக்கிறது என சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய மையம் (ACIJ) மற்றும் தன்னார்வல செயல்பாட்டுக் குழுவான ஜஸ்டிஸ் பார் மியான்மரின் (JFM) கூட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.
மியான்மர் ராணுவத்தின் முக்கிய நிதி ஆதாரமாக மியான்மர் எகனாமிக் கார்ப்பரேஷன் (MEA) உள்ளது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி அமெரிக்கா, மியான்மர் ராணுவம் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டதிற்காக MEA உட்பட ராணுவ அதிகாரத்தில் உள்ள நிறுவனங்கள் மேல் பொருளாதார தடை விதித்தது.
மேலும், ஜெனரல் ஹீலிங் உட்பட ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக, அமெரிக்க அரசாங்கம் பொருளாதார தடைகள் விதித்த சில மியான்மர் அதிகாரிகளிடம் அதானி குழுமம் தொடர்பில் உள்ளதாக வெளியாகி உள்ளது.
ஒரு ராணுவ ஆட்சியின் பொருளாதாரம் என்பது அந்த ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு வணிக அமைப்புகளின் வருமானம் மற்றும் கார்ப்பரேட் முதலீடுகளை நம்பியே உள்ளது.
இந்நிலையில் “மனித உரிமை மீறல்கள், குடிமக்கள் மீதான தாக்குதல்கள், போர்க்குற்றங்கள், முக்கியமாக ரோஹிங்கியா மக்களுக்கு எதிரான போர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களை செய்த இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துடன் வணிக முதலீடுகளில் ஈடுபடுவது மியான்மர் இராணுவத்திற்கு நேரடியாக நிதி உதவி அளிப்பது போன்றது” என்றும் பல முறை பகிரங்கமான அறிவித்த பின்னும் அவர்கள் MEC உடனான மியான்மர் ஒப்பந்தத்திலிருந்து விலக மறுத்துவிட்டார்கள்.” என ACIJவின் மனித உரிமை வழக்கறிஞர் ராவன் அராஃப் ABC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Here’s our official response to the recent media reports misrepresenting the Adani Group's investments in Myanmar. pic.twitter.com/WsUWFxJ5TY
— Adani Group (@AdaniOnline) March 31, 2021
இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வரும்’ நிலையில் மியான்மர் இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அதானி குழுமம்.
மேலும், “இந்திய அரசாங்கம் நடத்திய ஒரு சந்திப்பில் அதானி குழுமத்தின் நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தவறான சித்தரிப்புகளோடு செய்தியாக பரவி வருவதாகவும்” மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
- அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)
Links :
queensland-adani-ports-myanmar-military-deal
us-sanctions-companies-that-back-myanmar-military-following-coup
adani-group-is-paying-30-million-to-myanmar-military-controlled-company-for-port-deal-report