IPC 497 இல் என்ன சிக்கல்?

இந்திய சட்டப்பிரிவு 497, ஒரு நபர் வேறு ஒருவருடைய மனைவியோடு பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது அந்த கணவனுடைய ஒப்புதல் இல்லாமல் நிகழ்ந்தால் அது பாலியல் வன்புணர்வு குற்றமாக கருதப்படாது. எனினும், அது குற்றமாகக் கருதி அந்த ஆணுக்கு 5 வருடம் வரை சிறை வழங்க அல்லது அபராதம் விதிக்க அல்லது இவை இரண்டும் தர முடியும். இதில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு குற்றத்திற்கு துணை புரிந்தவர் என தண்டனை வழங்க முடியாது.
இதில் கொதிக்கும் கலாச்சார காவலர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, கணவனின் ஒப்புதல் இன்றி நடந்தால் தான் குற்றம் என்கிறது. ஆக, கணவனின் ஒப்புதலோடு நடந்தால் தவறில்லை. இதில், இன்னும் கொஞ்சம் உங்கள் கலாச்சாரத்தை சிதைக்குற விசயமாக தோன்றக்கூடுமே. இத்தனை நாட்கள் இதை யோசித்தீர்களா ?
திருமணமான ஆண் தன் மனைவியின் அனுமதி இல்லாமல் வேறு ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்தால் பெண்ணின் ஒப்புதல் வேண்டும் என்று சட்டம் இல்லாமல் இருந்து இருக்கிறதே, அதை கேள்வி கேட்டீர்களா ? பெண்ணுக்கு தண்டனை இல்லை என்பது ஒரு பிரச்சனை எனில் கணவனுக்கு மட்டும் பெண் மீது அதிகாரம் உள்ளதாக காட்டிக் கொண்டு இருந்த பிரிவு 497 அதுவும் தவறு தானே.
இத்தகைய சட்டத்தில் ஆண்-பெண் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று(27-ம் தேதி) தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
கடந்த 150 வருட வரலாற்றில் திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு தொடர்பாக பல வழக்குகளை சந்தித்துள்ளது. திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமணம் எனும் புனிதத்தை சீர்குலைக்கும் என்பது மத்திய அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதமாகும்.
திருமணமான ஆண் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடனோ அல்லது திருமணமான பெண் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பான வழக்கில் ஆணிற்கு மட்டுமே தண்டனை விதிப்பது மற்றும் பெண்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது போன்ற தோற்றமளித்தாலும் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வேறு ஆணுடனான பாலியல் உறவு தொடர்பான தீர்ப்பில் நீதிபதிகள் கூறியவை :
- திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு கணவன்-மனைவி விவாகரத்திற்கு காரணமாகிறது. அது குற்றமில்லை.
- திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவில் கணவன்-மனைவி இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டாத நிலையில் அது குற்றமில்லை. ஒருவேளை தற்கொலைக்கு அது காரணம் எனில் ஆதாரங்கள் சமர்பிக்கலாம்.
- ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது என்பது சட்ட விதிமீறல் ஆகும்.
- கணவர்கள் என்பவர் திருமணமான பெண்களின் எஜமானர்கள் அல்ல. ஆணும் பெண்ணும் சமம்.
- திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு மகிழ்ச்சி இல்லாத வாழ்விற்கு காரணமில்லை, ஆனால் மகிழ்ச்சி இல்லாத வாழ்வின் விளைவே திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவிற்கு காரணம்.
- திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை என்பதால் அதனால் ஆணிற்கு தண்டனை வழங்கும் 497 சட்டபிரிவு ரத்து செய்யப்படுகிறது.
- 497 சட்டப் பிரிவு ரத்து செய்வதன் விளைவால் திருமணமான பெண்கள் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவை வைத்துக் கொண்டால் ஆணிற்கு மட்டும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படாது.
Supreme Court strikes down adultery as an offence: Highlights