சபரிமலையில் மீண்டும் தீவிரமாய் பரவும் வதந்திகள் !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற விவகாரம் அடித்து ஓய்ந்த பிறகு மீண்டும் சபரிமலை விவகாரத்தை அரசியல் நோக்கத்தில் கையில் எடுத்துள்ளனர். இதற்கு துணையாக சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்பவும் ஆதரவாளர்கள் அதிகரிக்கின்றனர்.
தற்போது சபரிமலை பற்றி பரவி வரும் வதந்திகள் பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
குப்பைத் தொட்டி அருகில் பெண் குழந்தை :
சபரிமலை கோவிலுக்கு பெண் குழந்தையுடன் சென்ற பக்தரை கேரள போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்து விட்டனர். அவரின் குழந்தை கோவில் அருகே குப்பைத் தொட்டி அருகில் உறங்கும் காட்சிகள் என மீம் ஒன்று வைரலாகி வருகிறது.
முதலில் அதுபோன்ற சம்பவம் தற்போது நடக்கவில்லை, தாக்கப்பட்டவருக்கும் அந்த குழந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை.
மேலே உள்ள படம் 2018 ஜூன் மாதத்தில் “ KSU Secretariat march “ -ல் மாநிலத் தலைவர் உள்ளிட்ட 20 பேர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதில் மாநிலத் தலைவர் கே.எம்.அபிஜித் படுகாயமடைந்தார். இதை “ National students union of india “ தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தந்தை எனக் கூறப்படுபவரின் புகைபடம் இங்கிருந்து எடுக்கப்பட்டவை.
அடுத்ததாக, குப்பைத் தொட்டி அருகில் குழந்தை. சில நாட்களுக்கு முன்பு மல்லிகாபுரத்தில் இருந்து சபரிமலை கோவிலுக்கு சென்ற 10-க்கு உட்பட்ட பெண் குழந்தை 5 கி.மீ தொலைவிற்கு மலையில் கடுமையான பயணத்தை மேற்கொண்டதால் அப்பகுதியில் இருந்த ஓர் இடத்தில் உறங்கி உள்ளார். கேரளாவில் வெள்ளம், ஐயப்பன் கோவில் விவகாரம் என கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளது. இந்த செய்தி நவம்பர் 17-ம் தேதி வெளியாகி உள்ளது.
பெண் குழந்தை பக்தியில் கோவிலுக்கு சென்ற இடத்தில் இவ்வாறு நடந்தது ஏற்க முடியாத ஒன்று. ஆனால், இதனை தவறாக பயன்படுத்தி போலீசாரால் தந்தை தாக்கி கைது செய்யப்பட்டால் குழந்தைக்கு இவ்வாறு நடந்தது எனக் கூறுவது இழிவானச் செயலாகும்.
கேரளா எஸ்.பி யாதீஷ் சந்திரா :
சபரிமலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுடன் பாதுகாப்பு காரணங்கள் குறித்து பேசும் வீடியோவில் இருப்பவரே கேரள எஸ்.பி யாதீஷ் சந்திரா.
சிலர் அவருக்கு தற்போது விக்டர் யாதீஷ் சந்திரா என்ற பெயரை வழங்கி உள்ளனர். காரணம், தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கிறிஸ்துவ பட்டம் கொடுப்பது புதிதல்லவே.
இதன் விளைவாக எஸ்.பி யாதீஷ் சந்திரா ஐயப்பன் பக்தர்களை சிறுவர், பெண்கள் வித்தியாசம் என்று பார்க்காமல் லத்தியால் அடித்து விரட்டுவதாக வதந்தியை பரப்பியுள்ளனர்.
எஸ்.பி யாதீஷ் சந்திரா மற்றும் அவருடன் காவலர்கள் மக்களை விரட்டி, இழுத்து செல்லும் காட்சிகள் 2017 ஆம் ஆண்டு ஜூனில் கொச்சினில் நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்தவை. அதனை தற்போது நிகழ்ந்தது போன்று சித்தரித்து உள்ளனர். அதில் பக்தர்கள் போன்று யாருமே இல்லை.
அவருக்கு விக்டர் என பட்டம் அளித்தவர்கள் கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு ஆதரவாக எஸ்.பி. யாதீஷ் சந்திரா செயல்படுவதாக கூறுகின்றனர். இதே யாதீஷ் சந்திரா தான் 2015-ல் சி.பி.எம் போராட்டக்காரர்கள் மீது தடியடியை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல உதாரணங்கள் கூறலாம்.
கேரள ஐயப்பன் விவகாரத்தில் இவர்களுக்கு பக்தர்கள் மீது அன்பு இல்லை, மதிப்பு எல்லாம் இல்லை இவ்விவகாரத்தை வைத்து வதந்திகள் பரப்பி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார்கள என்பதே உண்மை.
National students union of india
Picture of neglect – Pinarayi and his minions out to destroy Sabarimala, say devotees
Here is how DCP Yatheesh Chandra attacked the protesters in Kochi │Reporter Live
SP yathishchandra brutality against CPM protesters Kerala