வீரமரணம் அடைந்த அக்னிவீரருக்கு ஒரு கோடி இழப்பீடா ? அக்னிவீரர் vs பிற இராணுவத்தினர்.. ஒரு பார்வை..!!

க்னிப்பாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உலகின் மிக உயர்ந்த இராணுவ எல்லைப்பகுதி என்று சொல்லப்படுகின்ற சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள Fire and Fury Corps என்ற ராணுவப் படைப்பிரிவில் பணியாற்றி வந்த அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமன் கடந்த அக்டோபர் 22 அன்று உயிரிழந்தார். இதன்மூலம் வீரமரணம் அடைந்த முதல் அக்னிவீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் “ஒரு வீரர் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அவருக்கு கருணைத் தொகை இல்லை, வேறு எந்த இராணுவ வசதிகளும் இல்லை, தியாகம் செய்த அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியமும் இல்லை. இந்தியாவின் மாவீரர்களை அவமதிக்கும் திட்டமே அக்னிவீரர் திட்டம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.

வீரமரணம் அடைந்த அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமனுக்கு வழங்கப்படவுள்ள ஒன்றிய அரசின் நிவாரணம்:

அக்னிவீரர் அக்‌ஷய் லட்சுமன் வீரமரணம் அடைந்துள்ள நிலையில் அவருக்கு பங்களிப்பற்ற காப்பீடு, கருணைத்தொகை, அக்னிவீர் திட்டம் மூலம் அரசாங்கத்தின் பங்களிப்புகள், மீதமுள்ள பதவிக்காலத்திற்கான ஊதியம் மற்றும் ஆயுதப் படைகளின் போர் விபத்து நிதியிலிருந்து பங்களிப்புகள் ஆகியவை சேர்த்து ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.

இவை எந்தெந்த நிதி பங்களிப்புகளிருந்து வழங்கப்படுகின்றன என்பதை LARRDIS எனப்படுகின்ற லோக்சபா தொடர்பான இணையதளத்தின் மூலம் அறிய முடிந்தது. அதில் பங்களிப்பற்ற காப்பீடாக ரூ. 48 லட்சமும், கருணைத் தொகையாக ரூ. 44 லட்சமும், மீதித்தொகை சேவை நிதி மற்றும் அக்னிவீரர் நிதித் தொகுப்பிலிருந்தும் வழங்கப்படவுள்ளது.

அக்னிபாத் திட்டம் Vs பிற இராணுவத்தினர் – நிவாரணங்களும், சலுகைகளும்:

அக்னிபாத் திட்டம்:

இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை மற்றும் குறுகிய கால சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டும் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், ராணுவத்தில் தேவையில்லாத செலவுகளை குறைப்பதாக அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த 2022 ஜூன் 14 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் ராணுவப்படை, கப்பல்படை மற்றும் விமானப்படைகளில் சேர முடியும்.

அவ்வாறு பணியில் சேரும் இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக முதலாம் ஆண்டு ரூ.30ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ.33 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நான்கு ஆண்டு பணிக்காலம் முடிவடைந்தபிறகு இவர்களில் 25% பேர் நிரந்தரமாக ராணுவப் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

ஊதியத்தில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாக பிடித்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 70 சதவீத தொகை மட்டும் வழங்கப்படும். வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அதே அளவிலான தொகையை ஒன்றிய அரசு தனது பங்களிப்பாக மீண்டும் செலுத்தும். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வருமானவரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

மேலும் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ஒருவேளை வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் பங்களிப்பற்ற காப்பீடான ரூ. 48 லட்சத்துடன், கருணைத் தொகை ரூ.44 லட்சம், சேவை நிதி மற்றும் அக்னிவீரர் நிதி வழங்கப்படும். மேலும் பணியின்போது காயமடைந்து நூறு சதவீதம் மாற்றுத்திறனாளி ஆகிவிட்டால் ரூ.44 லட்சமும், 75 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.

பிற இராணுவத்தினர் :

முன்னாள் வீரர்கள் மற்றும் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மூலம் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வசதிகளில் சலுகை அளிக்க அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ஆகியவற்றோடு சேர்த்து புத்தகங்களுக்காக ஆண்டுக்கு 2000 ரூபாயும், சீருடைகளுக்கு விலையாக ஆண்டுக்கு 2000 ரூபாயும், மற்ற ஆடைகளுக்கு விலையாக ஆண்டுக்கு 700 ரூபாயும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் அக்னிபாத் திட்டத்தில் கொடுக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் வீரமரணம் அடைந்தவர்களுக்கான ஒன்றிய அரசின் கருணைத் தொகையானது ஆயுதப்படை, விமானப்படை, கப்பற்படையில் உள்ள ராணுவ வீரர்களின் பதவிகளுக்கு ஏற்ப 25 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகின்றன. மாநில அரசின் தரப்பிலும் கருணைத் தொகையானது(விருப்பத்திற்கேற்ப) வழங்கப்படுகிறது.

DIAV என்று சொல்லப்படுகின்ற DTE OF INDIAN ARMY VETERANS என்ற ஆணையம் மூலமும் இவர்களுக்கு 8,00,000 ரூ வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இவை போக நலத்திட்ட உதவிகளாக மகளின் திருமணம்/விதவையின் மறுமணத்திற்காக ரூ1,00,000-ம், இளநிலை கல்விகளுக்கு முழுச் செலவும், முதுநிலை கல்விக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ 25,000-ம், தொழில்முறை படிப்புகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ 50,000-ம் வழங்கப்படுகின்றன. 

மேலும் வீரமரணம் அடைந்த நிரந்தர ராணுவ வீரர்களுக்கு, ரக்ஷா மந்திரி முன்னாள் படைவீரர் நல நிதியத்தின் (RMEWF) கீழ் ஆயுதப்படைகளின் கொடி நாள் (AFFDF) நிதிகளிலிருந்தும், கேந்திரியா சானிக் வாரியத்தின் (KSB) மூலமும் கூட நிதிகள் வழங்கப்படுகின்றன. இவை போக PF வசதிகளும், வீட்டுக்கு தேவையான பொருட்களை கேண்டீன்களில் வாங்குவதற்கான சிறப்பு வசதிகளும் கூட நிரந்தர ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை அக்னிபாத் வீரர்களுக்கு கிடையாது.

வீரமரணம் அடைந்த நிரந்தர ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 100% ஓய்வூதியம் வழங்கப்படும். அதே சமயம் அக்னிபாத் வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் மட்டும் பணிபுரிவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படமாட்டாது.

 

ஆதாரங்கள்:

FINANCIAL ASSISTANCE TO THE DEPENDENTS OF MARTYRED SOLDIERS

In a transformative reform, Cabinet clears ‘AGNIPATH’ scheme for recruitment of youth in the Armed Forces

https://loksabhadocs.nic.in/Refinput/New_Reference_Notes/English/15072022_141146_102120411.pdf

https://timesofindia.indiatimes.com/india/kins-of-agniveers-losing-lives-in-line-of-duty-to-get-over-rs-1-crore-govt-sources/articleshow/104632407.cms?from=mdr

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader