ஸ்டெர்லைட் ஆலை மூடியப் பிறகு காற்றின் தரம் உயர்ந்துள்ளது : த.மா.வாரியம்

தூத்துக்குடியில் வேந்தாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என போராடி பலரின் உயிர் தியாகத்தால் பொது மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் ஆலைக்கு தடை விதித்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை விளைவிப்பதால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் காற்று தரம் பற்றி தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் புதிய தகவலை வெளியிட்டது. அதில், ஆலை மூடப்பட்ட பிறகு அதன் சுற்றுப்புறத்தில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாகவும், காற்றில் உள்ள SO2 உள்ளிட்டவையும் அளவீடு குறைந்து உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வல்லுநர் குழுவின் ஆய்வு அறிக்கைக்கு முன்பு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தரப்பில் ஆய்வு தரவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.

“ மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து அக்டோபர் 2018-ல் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வு குழுவால் காற்று மாதிரிகள் எடுக்கப்பட்டன. பல்வேறு பாராமீட்டர்களை ஆய்வு செய்ததில் காற்றின் தரம் உயர்ந்து உள்ளதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர் “.

ஆய்வின்படி, செப்டம்பர் 22, 2017-ல் எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் காற்றில் கலந்துள்ள சல்பர் டைஆக்சைட் அளவு(SO2) 20 மைக்ரோகிராம்/கன மீட்டர்(MGCM) ஆக இருந்துள்ளது என தரவுகள் உள்ளன. இதன் அளவுகள் 2018 அக்டோபர் 12,13-ல் 5 MGCM குறைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அளவானது தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் அக்டோபர் 12,13-ல் பதிவு செய்யப்பட்டவை.

அதே நாளில் நைட்ரஜன் டைஆக்சைட் அளவு 15 மைக்ரோ கிராமில் இருந்து 7-க்கு கீழாக சென்றுள்ளது. ஆனால், PM10(Particulate matter) அளவு 56  மைக்ரோகிராமில் இருந்து 64.9 ஆக உயர்ந்துள்ளது. PM10 அளவு உயர்ந்ததற்கு ஜிப்சம் மற்றும் பயன்படாத பொருட்கள் திறந்தவெளியில் குவிந்து இருப்பதால் அதன் மூலம் காற்றில் கலந்த தூசுக்களே காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட இத்தகவலானது மேகாலயா மாநிலத்தின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் கொண்ட குழுவால் திரட்டப்பட்டது.

தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை மூடியப் பிறகு அப்பகுதியில் காற்றின் தரம் உயர்ந்து உள்ளதாக தெரிவிப்பதற்கு 2 நாட்கள் முன்பு டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஸ்டெர்லைட் ஆலை மூடிய பிறகும் அப்பகுதியில் காற்றின் மாசு குறையவில்லை என செய்தி வெளியிட்டு இருந்தனர். இதற்கான தகவல் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் ஆர்.டி.ஐ தகவலின் படி பெறப்பட்டதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளனர்.

இவ்வாறு ஆங்கில செய்தி நிறுவனத்தில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து ஸ்டெர்லைட் ஆலை மூடியும் காற்று மாசு குறைவில்லை, ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்பானது என சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் செய்தியில் இணைக்கப்படவில்லை என்பதை அறிய வேண்டும்.

இரு நாட்களில் தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் தவறான தகவலை அளிக்க போவதில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றியுள்ள பகுதியில் காற்றின் தரம் உயர்ந்து உள்ளது என ஆய்வு குழு அளித்த தரவுகளையும் உண்மையில்லை என ஒதுக்க முடியாது.

இரு செய்திக்கும் இரு நாட்கள் இடைவெளி உள்ளதையும், மாசுக்கட்டுப்பாடு வாரியம் அளித்த தகவல் சமீபத்தியவை என்பதை உணர வேண்டும். எனினும், ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆலை திறக்கப்படுமா , இழந்த உயிர்களுக்கு மதிப்பற்று போகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SO2 levels have reduced significantly after closure of Sterlite plant: TNPCB

Air cleaner after closure of Sterlite’

Air quality improved following Sterlite’s closure: TNPCB

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close