யார் என்றே தெரியாத தளம் வெளியிட்ட விமானப்படை தரவரிசை : கொண்டாடும் ஊடகங்கள் !

உலக அளவில் இந்திய விமானப்படை 3 வது இடத்தில் உள்ளது என இந்திய அளவில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை சோதித்து பார்க்கையில், தரப்பட்டியல் வழங்கிய நிறுவனம் World Directory of modern military aircraft(WDMMA) என்று இருந்தது. அது நிறுவனமல்ல , வெறும் இணையதளம். விமானப்படை பற்றிய ஆராய்ச்சி நிறுவனமோ அல்லது நிபுணர் குழுவோ கொண்டவர்களால் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க : விமானப் படையில் சீனாவை முந்திய இந்தியா.. தரவரிசையை வெளியிட்ட தளத்தின் பின்னணி தெரியுமா ?

இந்த இணையதளம் தொடங்கப்பட்டதே 2019-ல் தான். 2022 ஆண்டிற்கான தரவரிசை மட்டுமே இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தளத்தில் அமெரிக்க இராணுவம் பற்றிய குறிப்புகளே முதன்மையாக இருக்கின்றன. மேலும், அவர்கள் பற்றிய விவரக்குறிப்பு தளத்தில் இல்லை, அவர்களை தொடர்பு கொள்ள எந்த குறிப்பும் இல்லை.

ஆள், முகவரி யார் என்றே தெரியாத நிறுவனத்தை மேற்கொள்காட்டி, சீனாவை முந்திய இந்திய, சீனாவை அலறவிட்ட இந்தியா என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதுகுறித்த செய்தி, தந்தி டிவி, புதியதலைமுறை, சன் நியூஸ் , பாலிமர் உள்ளிட்ட முன்னணி தமிழ் செய்தி சேனல்கள் பலவற்றில் வெளியானது போன்று இந்திய டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் முன்னணி ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது. இந்த செய்தி லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் பெற்று வருகிறது.

ஊடகங்கள் வெளியிட்டு வருவது அதிர்ச்சியில் இருந்தால், அதை விமானப்படை தலைவரும் பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய விமானப்படை தலைவர் விவேக் ராம் சவுத்ரி புனேவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உலகின் சக்திவாய்ந்த விமானப்படை குறியீட்டில் ஐஏஎப் தரவரிசைக் குறித்து கேட்ட போது, ” தரவரிசையில் நாம் மூன்றாவது இடத்தில் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. எங்கள் செயல்பாடுகள், மேலாண்மை மற்றும் பராமரிப்பைத் திட்டமிட உதவும் வகையில் வலுவான நெட்வொர்க் அமைப்பைக் கொண்டுள்ளோம். ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணுவ விமானங்கள் மற்றும் நிறைய உள்நாட்டுத் தயாரிப்புகளை வைத்திருக்கிறோம்.

இந்த காரணிகள் அனைத்தும் எங்களை 3-ம் இடத்திற்கு உயர்த்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன், நாங்கள் அதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம் ” எனப் பேசியுள்ளார்.

உலகின் சக்தி வாய்ந்த விமானப்படை என்கிற தரவரிசையை வெளியிட்டதாக கூறப்படும் அந்த தளம் தாங்கள் பொது மக்கள் பார்க்கக் கூடிய வகையில் உள்ள தரவுகள் அடிப்படையில் இந்தத் தரப்பட்டியலை வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. அப்படியெனில் விமானப்படை பற்றி அனைத்தையும் ஒரு நாடு வெளியிடுமா என்ன ?

யாரென்றே தெரியாத தளம் சொன்னதை அங்கீகாரம் என சொல்வது சரிதானா ? இந்த தளம் இல்லாமல் தரச்சான்று தரக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் சரியான தகவலை விமானப்படை வெளியிடுமா? வதந்திகள் உறுதியான செய்திகளாக மாற்றப்படுவது அதிர்ச்சியாக உள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader