2050-க்குள் குடியால் ஏற்படும் உயிரிழப்புகள் 25.8 கோடியாக உயரும் : அதிர்ச்சி தகவல்

குடி குடியை கெடுக்கும் , குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் ” என்னும் வாசகம் அச்சிட்ட மது பாட்டில்களை தான் மக்களும் நாள்தோறும் வாங்கிச் செல்கின்றனர். மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற பாகுபாடின்றி நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisement

குறிப்பாக, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும், வருமானமும் ஆண்டுதோறும் அதிகரிப்பதில் இருந்தே குடிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரிக்கிறது என்பதை நீங்கள் தோராயமாக கணிக்க முடியும்.

இப்படி குடித்து குடித்து உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் தேசிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், 2011-ல் இருந்து 2050-ம் ஆண்டிற்குள் மதுவால் எந்த மாதிரியான இழப்புகள் ஏற்படும் என்பது தொடர்பான ஆய்வின் கட்டுரை ” Health Impact and Economic Burden of Alcohol Consumption in india ” என்ற தலைப்பில் ” Drug Policy ” என்ற சர்வதேச பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஆய்வை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, தேசிய போதை மருந்து தடுப்பு சிகிச்சை மையம், சண்டிகர் உயர் மருத்துவ கல்வி மையம், சமுதாய மருத்துவ துறை, பொது சுகாதார கல்வி மையம் ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வில், 2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய அளவில் மது குடிப்பதால் இறப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 25 கோடியே 80 லட்சமாக உயரும். இதனால் ஒவ்வொரு ஆண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 % இழப்பு உண்டாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தற்பொழுது உள்ள சூழலில் மதுவால் 5 கோடியே 70 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு முறையான சிகிச்சை தேவைப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. மது பழக்கம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் மது ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டால் 2050-ம் ஆண்டு வரையில் 55 கோடி பேரை பாதுகாக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை.

நாட்டில் மது தொடர்பான சிகிச்சைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,12,700 கோடி செலவிட வேண்டி இருக்கிறது. ஈரல் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு, போதையில் விபத்து உள்ளிட்ட மூன்று வழிகளில் மது குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்ந்தால் ஒவ்வொருவரின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.

Advertisement

இதையெல்லாம் தவிர, 2050-ம் ஆண்டிற்குள் ஒரு தனிமனிதனின் சராசரி வாழ்நாளில் ஆண்டிற்கு 75 நாட்கள் குறைவதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மது ஒழிப்பு நடவடிக்கையை அரசு கொண்டு வந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை நல்வழிப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் மக்களின் ஆயுள் பாதுகாக்கப்படும்.

Link : 

Alcohol deaths to cost 1.5% GDP/year: Study

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button