பாஜகவின் அலிஷா சொல்வது போல் வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா ? அதிர்ச்சி ரிப்போர்ட்

ஒரு பெண்ணிடம் ஆண்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கும் போது, அப்பெண்ணுக்கு இந்தி தெரிந்தால் கெட்ட வார்த்தைகள் பேசியோ, சத்தம் போட்டோ அங்கிருந்து தப்பிக்கலாம் என தமிழக பாஜக-வின் விளையாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா அப்துல்லா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

அலிஷா 2022, அக்டோபர் 1ம் தேதி ‘அவள் க்ளிட்ஸ்’ யூடியூப் சேனல் நேர்காணல் அளித்துள்ளார். 38 நிமிடம் கொண்ட அந்த நேர்காணலில் 12 நிமிடத்திற்கு மேல் இந்தி குறித்து நிகழ்ச்சியின் நெறியாளர் கேள்வி கேட்கிறார். 

அதற்கு அலிஷா பின்வருமாறு பதில் அளிக்கிறார். இந்தி மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும். ஏன் தெரியுமா? பெண்களின் பாதுகாப்பிற்காக.  நம் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், மேலே செல்லும் போது (வட மாநிலங்கள்) பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? என நமக்குத் தெரியாது. இந்தி தெரிந்தால் நீங்கள் தைரியமாகப் பேசி அங்கிருந்து தப்பிக்க முடியும். தமிழ் வைத்துக் கொண்டு அப்படிச் செய்ய முடியாது.

Advertisement

மேலும், இந்தி படிப்பது பற்றியும் வேண்டாம் என்பது பற்றியும், தமிழ் படிப்பது அல்லது வேண்டாம் என்பது அவரவர் விருப்பம்.  9 மணிக்கு நீங்கள் ஒரு சாலையில் நடக்கிறீர்கள். ஹைதராபாத் அல்லது டெல்லி… டெல்லி என்றே வைப்போம். உங்கள் அருகில் 4 ஆண்கள் வந்து டார்ச்சல் செய்கிறார்கள் எனில் உங்களுக்கு இந்தி தெரிந்தால் “கெட்ட வார்த்தை பேசலாம், சத்தம் போட்டுப் பேசலாம், அங்கிருந்து தப்பிக்கலாம்” எனப் பேசுகிறார். 

அப்போது நெறியாளர் குறுக்கிட்டு, “இந்த இடத்தில் நான் முரண்படுகிறேன். நிர்பயாவிற்கு இந்தி தெரியும். இந்தி தெரிந்த  நபர்களினால் தான் அந்த பெண்ணுக்குப் பாதுகாப்பு போச்சு, உயிரே போச்சு” எனக் குறிப்பிடுகிறார். அதற்கு அலிஷா “ஓகே… ஓகே… புரிகிறது” என ஏற்றுக் கொள்கிறார்.

வட மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா ?

வட மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்குமா ? இருக்காதா ? எனத் தெரியாது. அப்படிப்பட்ட சூழலில், இந்தி தெரிந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என அலிஷா குறிப்பிடுகிறார்.

2021ம் ஆண்டு புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. அத்தரவினை கொண்டு மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் முதல் மூன்று இடங்களில் ராஜஸ்தானில் 6,337 வழக்குகளும், மத்தியப் பிரதேசத்தில் 2,947 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 2,845 வழக்குகளும் பதிவாகியுள்ளது. 

இதில் ராஜஸ்தானைக் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தினை பாஜக ஆட்சி செய்கிறது.

மேலும் அதிகப்படியான பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்ட முதல் பத்து மாநிலத்தில், நான்கு மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்கிறது (மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் – 1,733,  ஹரியானா – 1,716) . மகாராஷ்டிராவில் (2,496) பாஜகவின் கூட்டணிக் கட்சி ஆட்சி செய்கிறது. 

இதில் தென்னிந்தியா மாநிலங்களான ஆந்திரா – 1,188, தெலுங்கானா – 823, கேரளா – 771, கர்நாடகா – 555 மற்றும் தமிழ்நாடு – 422 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாநிலச் செயலாளர் அலிஷா கூறியதை போல வட மாநிலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக உள்ளதை அறிய முடிகிறது. 

Link :

Total number of rape cases reported in India from 2005 to 2021

Reported cases of rape across India in 2021, by state

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button