‘பார்ப்பனர் ஆதிக்கம்’ இன்றும் உண்மையா? தரவுகள் கூறுவதென்ன ?

இந்தியாவில் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, ஏன் அறிவியல் சார்ந்த துறைகளில் கூட SC, ST மற்றும் OBC பிரிவினர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

மீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “இங்கு உள்ள பத்திரிகையாளர்களில் எத்தனை பேர் பட்டியலிடப்பட்ட (SC) வகுப்பை சேர்ந்தவர்கள், எத்தனைபேர் பழங்குடியின (ST) வகுப்பை சேர்ந்தவர்கள், எத்தனை பேர் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பை சேர்ந்தவர்கள்” என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அந்த அறையில் உள்ள பத்திரிகையாளர்களில் ஒருவர் கூட கைகளை உயர்த்தாதது நாடு முழுவதும் பேசு பொருளாகி உள்ளது

இந்தியா முழுவதும் அரசியல் துறை, நீதித்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை, ஏன் அறிவியல் சார்ந்த துறைகளில் கூட பட்டியல் சாதி பிரிவினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்கள் (OBC) புறக்கணிக்கப்படுவதற்கும், அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கும் சாதிபடிநிலைகளே முக்கிய காரணமாக உள்ளன என்பதை பின்வரும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

‘பார்ப்பனர் ஆதிக்கம்’ – இன்றும் உண்மையா?

இந்தியா தற்போது அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 169 பெரும் பணக்காரர்களைக் (Billionaires) கொண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.

இவர்களில் பத்தில் ஒன்பது பேர் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த  பனியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் குறித்து ஆய்வு செய்ததில் அவர்களில் பெரும்பாலானோர்களும் முற்பட்ட வகுப்பினரே என்பதை கண்டறிய முடிந்தது.

மேலும் 2011-இல் வெளியிடப்பட்ட SECC அறிக்கையின் படி, இந்தியாவில் உள்ள 24.49 கோடி குடும்பங்களில் 17.97 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். 17.97 கோடி குடும்பங்கள் கொண்ட கிராமப்புறங்களில், சுமார் 56.41% குடும்பங்கள் நிலமற்றவர்களாக உள்ளனர்.

இவர்களில் 10.74 கோடி குடும்பங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முக்கியமாக தங்கள் உடல் உழைப்பில் இருந்து மட்டுமே வருமானத்தைப் பெறுகின்றனர்.

இதன் மூலம் SC, ST வகுப்பைச் சேர்ந்த பெரும்பாலானோர்கள் நிலமற்றவர்களாக இருப்பதை அறிய முடிகிறது.

ஊடகத்துறையில் ஆதிக்கம்:

ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஊடகத்துறையின் 121 தலைமைப் பொறுப்புகள் ( Leadership positions) அதாவது தலைமை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர் போன்ற பதவிகளும், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், செய்தி இணையதளங்கள் போன்ற பிரிவுகளின் 106 தலைமைப்பதவிகளும் பெருவாரியாக முற்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நபர்களால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று CNN-News18, India Today, Mirror Now, NDTV 24×7, ராஜ்யசபா டிவி, ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் போன்ற இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி செய்தி சேனல்களின் தலைமைப் பதவிகளில் 89 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும் இங்கு பணிபுரியும் முன்னணி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களில் 76 சதவீதம் பேரும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றே அறிக்கை கூறுகிறது.

நீதித்துறையில் ஆதிக்கம்:

சமீபத்தில் நடந்த மக்களவைக் கூட்டத்தில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசாதுதீன் ஓவைசியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், “2018ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டுள்ள 604 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 454 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்” என்று பதிலளித்தார்

மேலும் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124, 217 மற்றும் 224 ஆகிய பிரிவுகளின் கீழ் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர். அவை எந்த சாதி அல்லது வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதில்லை” என்றும் தெரிவித்தார். இதன்மூலம் நீதித்துறைகளில் இடஒதுக்கீடு வழங்கப்படாததால் பெரும்பான்மையான உயர்பதவிகள் பொதுபிரிவினரால் ஆதிக்கம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த முடிகிறது.

அரசியலில் ஆதிக்கம்:

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய அரசு தகவல்களின் படி, ஒன்றியத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் பணிபுரியும் 89 செயலாளர்களில் ஒருவர் மட்டுமே பட்டியலிடப்பட்ட சாதிகளை (SC) சேர்ந்தவர்,  மூன்று பேர் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் (ST) சேர்ந்தவர்கள்.

மேலும் பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, செயலர்களில் ஒருவர் கூட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைச் (OBCs) சேர்ந்தவர் இல்லை என்பதையும் அறிய முடிந்தது.

மேலும் ஒன்றிய அமைச்சகங்களின் செயலாளர் மற்றும் இணை செயலாளர்களின் சமூக பின்புல விவரங்களை (2022-ன் தரவுகளின் படி) சதவீதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் பின்வரும் தகவல்கள் கிடைத்தன. இதில் பொதுப்பிரிவினர் 79% இடங்களில் உள்ளனர். ஆனால் SC பிரிவினர் வெறும் 5%, ST பிரிவினர் வெறும் 4%, OBC பிரிவினர் வெறும் 12% மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

கல்வித்துறையில் ஆதிக்கம்:

நமது யூடர்ன் தரப்பு, கடந்த 2022-இல் ஒன்றிய அரசிடமிருந்து RTI மூலம் பெற்ற தகவல்களின் படி, சென்னை ஐஐடி ஆசிரியர்களின் சமூக பின்னணி விவரங்கள் பின்வருமாறு உள்ளன. 

இதில் சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 619 ஆசிரியர் பணியிடங்களில் 514 ஆசிரியர்கள் (83%) பொதுப்பிரிவினர் வகுப்பை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும் UR பிரிவைத் தவிர, மற்ற பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதையும் இந்த தரவுகளின் மூலம் அறிய முடிகிறது. 

இதே போன்று 2022-இல் ஐ.ஐ.எம்களில் (IIM) உள்ள பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள் சமூக பின்னணி விவரங்கள் பின்வருமாறு உள்ளன.

இந்த தரவுகளின் படி, 18 IIM களில் மொத்தமுள்ள 784 இடங்களில் 590 நபர்கள் (75.2%) பொதுப் பிரிவினரே. இந்த தரவுகளிலும் இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் நிரப்பப்படவில்லை. 

இதேபோன்று கடந்த 2022-இல் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர்களின் சமூக பின்னணி நிலவரங்கள் பின்வருமாறு உள்ளன.

இதில் மொத்தமுள்ள 45 மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்களில் 36 பேர் பொதுப் பிரிவினர். இதிலும் இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமே. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் பெரும்பான்மையான பதவிகள் பொதுப்பிரிவினரின் ஆளுகைக்குக் கீழேயே உள்ளன என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

எப்போது மாறும் இந்த நிலை?

இந்தியாவில் சமூக படிநிலைகளில் பின்தங்கியுள்ள மக்களும் முன்னேற, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது அவசியமான ஒன்று. ஆனால், அரசு மற்றும் அரசு சாரா துறைகளை ஆய்வு செய்து பார்த்ததில், அந்தப்பதவிகள் அனைத்தும் இடஒதுக்கீட்டின் படி நிரப்பப்படாமல் இருக்கிறது. இதன் மூலம் இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் அவ்வாறு அரசு துறைகளில் நிரப்பப்பட்டு வரும் இடஒதுக்கீடு விகிதங்களும், 1931-இல் கணக்கிடப்பட்ட ‘சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பின்‘ படியே, தற்போது வரை வழங்கப்பட்டு வருகின்றன. 1931-லிருந்து (92 ஆண்டுகளுக்கு முன்) தற்போது வரை நாட்டின் மக்கள்தொகையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் படிக்க : 1931க்கு பிறகு எடுக்கப்பட்ட சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஏன் அவசியமாகிறது ?

மேலும் ஆக்ஸ்பம் வெளியிட்டுள்ள அறிக்கை, பொருளாதாரத்தில் கீழ் படிநிலைகளில் உள்ள ஒருவன், மேல் படிநிலைகளில் உள்ள ஒருவனைப் போல சம்பாதித்து சமுதாயத்தில் சமநிலையைப் பெற இன்னும் 941 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் கீழ்படிநிலைகளில் உள்ளவர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டியது எவ்வளவு அவசியமானது என்பதை இது உணர்த்துகிறது..!!

இடஒதுக்கீடே சமூகநீதியின் ஆன்மா..!!

 

ஆதாரங்கள்:

https://secc.gov.in/

https://www.oxfam.org/en/india-extreme-inequality-numbers

https://drive.google.com/file/d/1BsyiTPDIBh9mFArtvPnNSKMoZ-Kjlcp6/view?pli=1

https://www.thehindu.com/news/national/law-minister-shares-data-on-social-background-of-high-court-judges-in-the-lok-sabha/article67107032.ece

SC, ST, OBC positons in parliament – The Print

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader