This article is from Aug 23, 2019

காட்டுத் தீயால் அழிந்து வரும் அமேசான் காடுகள் | மனித பிழையும் காரணமா ?

பூமியின் நுரையீரல் ஆக கருதப்படும் அமேசான் காடுகள் தொடர்ச்சியாக அழிவை சந்தித்து வருவது மக்களை வருத்தமடையச் செய்துள்ளது. மலைக்காடுகளில் 16 நாட்களாக தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் பல வகையான உயிரினங்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு காடுகள் தீக்கிரையாகி உள்ளது. தீயினை அணைக்க போராடி வருகின்றனர்.

பிரேசில் நாட்டின் அங்கமாக இருக்கும் அமேசான் காட்டில் உருவான காட்டுத் தீயால் அந்நாட்டின் 2,700 கிமீ அளவிற்கு புகை மண்டலம் சூழ்ந்தது போன்று காட்சியளிக்கிறது. பிரேசிலின் வடக்கு மாநிலமான Roraima கரும்புகையால் சூழப்பட்டது. அமேசான் காடுகளில் அடிக்கடி தீ பற்றிக் கொள்ளுவது நிகழ்கிறது.

அமேசான் காட்டில் நிகழ்வும் பெரும்பாலான தீ சம்பவங்களுக்கு மனிதர்களே முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக வறண்ட காலங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்வது இயல்பு என்றாலும், இத்தனை பெரிய அளவிற்கு சேதத்தை ஏற்படுத்துவது கடினம்.

தற்பொழுது மழைக்காடுகளை விவசாயம் மற்றும் கால்நடை பண்ணை பகுதியாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகளும், விவசாயிகள் தங்களின் பயன்பாட்டிற்காக தீ மூட்டியதும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அமேசானில் பரவும் தீயிற்கு தனியார் தொண்டு நிறுவனங்களே காரணம், அவர்கள் தான் காட்டிற்கு தீ வைத்து உள்ளதாக பிரேசில் நாட்டின் அதிபர் ஜேய்ர் போல்சனோரோ தெரிவித்து இருந்தார்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அதிபரின் சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையே இதற்கு காரணம் என குற்றம்சாற்றியுள்ளனர். அதிபர் தேர்தலின் பொழுது, அமேசான் காடுகளில் உள்ள வளத்தை வைத்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற போவதாக போல்சனோரோ கூறியிருந்தார். இந்த கொள்கையால் தான் அமேசான் காடுகள் பாதிப்படைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

காடு அழிப்பு :

பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தரவுகளின் படி, பிரேசில் நாட்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் 74,000 தீ சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த 68,000 தீ சம்பவங்களே அதிகபட்சமாக இருந்தது.

கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 9,500 தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் அமேசான் பகுதியில் நிகழ்ந்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் பொழுது 84 சதவீதம் அதிகமாக காட்டுத் தீ சம்பவங்கள் தற்பொழுது நிகழ்ந்து உள்ளதாக செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தை ஒப்பிடும் பொழுது ஜூன் மாதத்தில் மட்டும் 88 சதவீதத்திற்கும் அதிகமாக அமேசான் காடுகளின் பகுதிகள் அழிக்கப்பட்டு உள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டு இருந்தது. தற்பொழுதும் அமேசான் காடுகளில் உருவான காட்டுத் தீ முழுமையாக அணைந்தபாடில்லை. ஆகையால், உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அமேசான் காடுகளில் பற்றி வரும் காட்டுத் தீ விபத்து குறித்து ஹாலிவுட் நடிகரும், சுற்றுச்குழல் ஆர்வலருமான டிக்காப்ரிரோ அமேசான் காடுகள் தீயிற்கு இரையாகும் புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். எனினும், அவ்வாறு பதிவிட்ட புகைப்படங்கள் எப்பொழுதும் பதிவிடப்படும் புகைப்படங்களாகும். மேலும், இதுபோன்ற சமயங்களில் அமேசான் காடுகள் தொடர்பாக போலியான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன.

காட்டுத் தீயால் காடுகள் தீக்கிரையாவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், மனித தவறுகள் இன்றி இத்தனை பெரிய தீ விபத்துக்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. உலகிற்கே நுரையீரலாக விளங்கும் அமேசான் காடுகள் உலகின் 20% ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. அதற்கு மாறாக அமேசான் காடு அழிக்கப்பட்டு வந்தால் பூமியில் கார்பன் வாயு அதிகம் வெளியாக நேரிடக்கூடும். இதனால் பருவநிலை மாற்றங்கள் உருவாகி எதிர்கால பாதிப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

Link : 

Amazon fires: Record number burning in Brazil rainforest – space agency

Amazon rainforest fires: Macron calls for G7 talks to focus on ‘international crisis’

Please complete the required fields.
Back to top button
loader