This article is from Apr 15, 2021

அம்பேத்கர் பிறந்தநாளுக்கு நாம் தமிழர் கட்சி மரியாதை செலுத்தவில்லையா ?

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்தநாள் ஏப்ரல் 14-ம் தேதி அன்று நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் அம்பேத்கரின் உருவ சிலைக்கு, புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, சமூக வலைதளங்களில் பிறந்தநாள் தொடர்பாக பதிவிடவும் செய்தனர்.

Twitter link | Archive link

இந்நிலையில், ” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளுக்கு எந்த ஒரு மரியாதையும் செய்யாத ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே ” என சாமானியனின் சவுக்கு எனும் ட்விட்டரில் பதிவிடப்பட்டது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், இப்பதிவின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு முகநூல் போன்றவற்றில் யூடர்னை டக் செய்து பதிவிட்டு வருகிறார்கள். இதைப்பற்றி இன்பாக்ஸ் மூலமும் கேட்கப்பட்டு வருகிறது.

Facebook link | Archive link 

அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் அன்று தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டது உள்ளிட்டவைகள் செய்திகளில் வெளியாகின. ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தியதாக அல்லது அறிக்கையோ, பதிவோ வெளியிட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஏப்ரல் 14-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மற்றும் சீமான் அவர்களின் ட்விட்டர் பக்கத்திலும் அம்பேத்கர் பிறந்தநாள் தொடர்பான எந்த பதிவுகளும் இல்லை. அன்றைய தினத்தில் இரு பதிவுகள் மட்டுமே பதிவாகி இருக்கின்றன.

எனினும், பல ஊர்களில் நாம் தமிழர் கட்சியின் அந்தந்த பகுதி நிர்வாகிகள் பலரும் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு போஸ்டர், பேனர் வைப்பது, உருவச்சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செயலாளர்கள் சிலரிடம்(மூன்று பேர்) பேசிய போது,  “பொதுவாக தலைவர்கள் பிறந்தநாள் மற்றும் இதர நிகழ்வுகளுக்கு கட்சியின் அந்தந்த பொறுப்பு நிர்வாகிகள் தான் பொறுப்பெடுத்து போஸ்டர் அல்லது பேனர் போன்றவற்றை வைப்பார்கள். இது அவர்களின் கடமையும் கூட. தலைமையில் மற்றும் இத்தகைய நிர்வாக விசயத்திற்கு இங்கு ஆட்கள் குறைவு. எனவே நாங்களாகவே தான் இதை முன்னெடுத்து செயல்படுத்துவோம். தலைமை வாழ்த்து கூறாததற்கு வேலை பளு போன்ற காரணங்கள் இருக்கலாம், அதற்காக அம்பேத்கர் ஜெயந்தியை மறுக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. இங்கு அனைவருமே அம்பேத்கரின் பாதையை தான் முன்னெடுத்து செல்கிறோம் ” என்று கூறினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது, உரையாற்றுவது போன்றவை நிகழ்ந்து இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் அம்பேத்கர் சிலைக்கு சீமான் மாலை அணிவிக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன. அதை ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், இந்த ஆண்டு நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மற்றும் சீமான் தரப்பில் அம்பேத்கர் பிறந்தநாள் தொடர்பாக பதிவுகள் ஏதும் வெளியாகவில்லை. அது ஏனென்றும் தெரியவில்லை. எனினும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

Please complete the required fields.




Back to top button
loader