உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை | மீண்டும் புதிய சிலை வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் இரு சமூக மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக பேருந்து நிலையத்தில் இருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டு கலவரம் மூண்டது.
வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் முக்குலத்து புலிகள் அமைப்பில் மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வருகிறார். இவருக்கும் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையே மோதல் இருந்துள்ளது.
இந்நிலையில், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் காலை பாண்டியன் தரப்பினர் வெட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே மேலும் வன்மம் உருவாகியது.
இதையடுத்து, பாண்டியன் தன் காரில் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு சென்ற போது ராமச்சந்திரன் தரப்பினர் காவல் நிலையத்தில் நின்ற பாண்டியனின் காரை அடித்து நொறுக்கினர்.. மேலும், காவல் நிலையத்தின் மீது கற்களை வீசினர்.
இதற்கு எதிராக பாண்டியனின் ஆதரவாளர்கள் வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையின் தலையை வெட்டி உள்ளனர். இந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதனால், வேதாரண்யம் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இரு சமூகத்தை சேர்ந்த கும்பலுக்கு இடையேயான மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பதட்டத்தை தணிக்க அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் புதிய சிலையை அரசு நிறுவி உள்ளது.
மக்களுக்கான தலைவர்களை சாதி தலைவராக மாற்றி சாதி வன்மம் தலை தூக்கும் பொழுது தலைவர்கள் சிலை உடைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது.
Link :