இந்து, புத்த, சீக் மதத்தினர் தவிர அனைத்து ஊடுருவிகளும் விரட்டப்படுவர்-அமித்ஷா

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வலதுசாரி சிந்தனைக் கொண்டவர்கள், பிற மதத்தினரை எதிர்க்கிறார்கள் என ஓர் கருத்து எப்பொழுதும் ஒலிக்கும். இல்லையென, அக்கட்சிச் சார்ந்தவர்களிடம் இருந்து மறுப்புகள் வெளியானாலும் அதன் ஆதரவாளர்கள் செயல்கள் உண்மை என நிரூபிக்கும் வகையில் அமைந்து விடும்.
இதற்கிடையில், இந்தியாவில் ஊடுருவிய பிற மதத்தினரை அகற்றுவோம் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா கூறியதாக பிஜேபியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. வெளியான பதிவில்,
” நாடு முழுவதிலும் என்.ஆர்.சி-யை நிச்சயமாக நாங்கள் செயல்படுத்துவோம். சீக்கியர்கள், பெளத்தர்கள், இந்துக்களை தவிர்த்து நாட்டில் ஊடுருவிய ஒவ்வொருவரையும் அகற்றுவோம் – அமித்ஷா ” கூறியதாக பிஜேபியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4India -வில் ஏப்ரல் 11-ம் தேதி பதிவிட்டுள்ளனர்.
அமித்ஷா கூறியது என்ன ?
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் NRC (National Register of Citizen) குறித்து மம்தா பனேர்ஜி தவறான செய்திகளை கூறிவருவதாக பேசியுள்ளார்.
அதில், ” எங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் நாங்கள் என்.ஆர்.சி-ஐ (குடியுரிமை பெறுவதற்கான பதிவு) நாடு முழுவதிலும் அமல்படுத்துவோம். நாட்டில் ஊடுருவிய ஒவ்வொருவரையும் நாங்கள் வெளிக் கொண்டு வருவோம் மற்றும் அனைத்து ஹிந்து, பெளத்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கி, அவர்களை இங்கு வசிப்பவராக மாற்றுவோம் ” என அமித்ஷா கூறியிருந்தார்.
மேலும், ” என்.ஆர்.சி கொண்டு நாட்டில் ஊடுருவிய ஒவ்வொரு வரையும் வெளிக்கொண்டு வருவோம். மம்தா பனேர்ஜி போன்று ஓட்டு வங்கிக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. நம் தேச பாதுகாப்பு உயர்வாக இருக்கவே. ஒவ்வொரு ஹிந்து மற்றும் புத்த அகதிகள் இந்த நாட்டின் குடியுரிமையை பெறுவார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறோம் ” எனவும் அமித்ஷா கூறியிருந்தார்.
என்.ஆர்.சி எப்பொழுதும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. 1951 ஆம் ஆண்டுகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த NRC , தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மேம்படுத்தி நடைமுறையில் உள்ளது. மேலும், அஸ்ஸாமில் பத்தாண்டுகளாக வாழ்ந்து வந்த 40 லட்சம் மக்கள் கடந்த ஆண்டில் வெளியான முழுமையான வரைவில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பிறகு NRC மிகப்பெரிய சர்ச்சையாகி உள்ளது.
அமித்ஷாவின் NRC குறித்த பேச்சு, இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் ஊடுருவி வாழும் அகதிகளின் குடியுரிமை சார்ந்தது. தேச பாதுகாப்பு கருதி அவர்களை கண்டறிந்து குடியுரிமை அளிப்பதாக கூறியுள்ளார். எனினும், அவர்களில் ஹிந்து, பெளத்த மதத்தை சேர்ந்த அகதிகளுக்கே குடியுரிமை வழங்கப்படும் என அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும், அமித்ஷாவின் பேச்சு இந்தியாவில் வாழும் பிற மதத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதாரம் :
Will Introduce Citizen’s Register Across India After Elections: Amit Shah
amit shah should apologies for NRC remark : kerala christian forum