பீகார், உ.பி, டெல்லியில் ட்ரெண்ட் செய்யப்படும் GoBackAmitShah & TNwelcomesAmitshah ஹாஸ்டேக்கள்!

இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் Gobackmodi எனும் ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படும். தற்போது தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக GoBackAmitShah எனும் ஹாஸ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
GoBackAmitShah ஹாஸ்டேக் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையும் GoBackAmitShah முதலிடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் GoBackAmitShah ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதற்கு எதிராக 1 மணி நேரத்தில் TNwelcomesAmitshah ஹாஸ்டேக்கும் பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் TNwelcomesAmitshah இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இவ்விரு ஹாஸ்டேக்களும் போட்டி போட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் TNwelcomesAmitshah ஹாஸ்டேக் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை. GoBackAmitShah மட்டுமே ட்ரெண்டிங்கில் உள்ளது.
டெல்லி, பாட்னா, லக்னோ, ஹைதராபாத், பெங்களுர் உள்ளிட்ட நகரங்களின் ட்ரெண்டிங் பட்டியலில் TNwelcomesAmitshah இடம்பெற்று இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள் TNwelcomesAmitshah எனும் ஹாஸ்டேக் பயன்படுத்தி பதிவிட்டு வந்தாலும் ட்ரெண்டிங் அளவிற்கு இடம்பிடிக்கவில்லை.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவான மற்றும் எதிரான ட்ரெண்டிங்கை அரசியல் கட்சியினரின் சமூக வலைதள பிரிவினர்(ஐடி விங்) மற்றும் அவர்களுக்காக இயங்கும் நிறுவனங்கள் முன்னெடுத்து செல்கின்றனர். சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் கூட ஐடி பிரிவு மூலம் ஆதரவான ஹாஸ்டேக் பீகாரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது என சமூக வலைதளங்களில் ஸ்க்ரீன்ஷார்ட்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.