அமுல் நிறுவனம் மாட்டிறைச்சி உண்ணும் 1.38 லட்சம் முஸ்லீம் ஊழியர்களை நீக்கியதாக வதந்தி !

இந்தியாவின் பிரபல பால் பொருட்கள் நிறுவனமான அமுல் தன்னுடைய நிறுவனத்தில் மாட்டிறைச்சி உண்ணக்கூடிய 1.38 லட்சம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியதாக ஓர் வதந்தி இந்தி உள்ளிட்ட மொழிகளில் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த வதந்திக்கு பின்னாலும் மதம், மாட்டிறைச்சி, அரசியல் என வெறுப்புணர்வே அமைந்து இருக்கிறது.

Advertisement

இந்தி மொழியில் பரவிய தகவலில், ” இந்து ஒற்றுமையை நோக்கி ஒவ்வொரு அடியும்.. அமுல் மில்க் உரிமையாளர் ஆனந்த் சேத் தனது தொழிற்சாலையில் இருந்து 1.38 லட்சம் முஸ்லீம்களை வெளியேற்றினார். நாட்டில் உள்ள இழிவான ஜிஹாத்தை பார்க்கும் போது, அசுத்தமான பால், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு அளிக்க முடியாது. நீங்கள் குடிப்பீர்களா ” எனப் பதிவிட்டு இருந்தது.

அமுல் மில்க் தன்னுடைய ஊழியர்களில் மாட்டிறைச்சி உண்பவர்களை மட்டும் பணியில் இருந்து நீக்கியதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. அவர்களின் சமூக வலைதள பக்கங்களிலும் கூட எந்த அறிவிப்பும் இல்லை. அமுல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முஸ்லீம் வெறுப்பு வதந்தியை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றனர்.

அமுல் ஆனது குஜராத் மாநிலத்தின் ஆனந்தை மையமாகக் கொண்ட ஒரு பால் கூட்டுறவு நிறுவனமாகும். இதை 1950களில் டாக்டர் வர்கீஸ் நிறுவினார். இதை குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் லிமிடெட்(ஜி.சி.எம்.எம்.எஃப்) நிர்வகித்து வருகிறது. இதன் கூட்டுறவு அமைப்பு 1973ல் உருவாக்கப்பட்டது.

அமுல் என்பது ஆனந்த் மில்க் உத்யோக் லிமிடெட் என்பதை குறிக்கிறது. ஆகையால், அதன் உரிமையாளர் ஆனந்த் சேத் என கற்பனையாக இணைத்துள்ளார். ஆனந்த் சேத் என்பது அமுல் நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் அல்ல. ஜி.சி.எம்.எம்.எஃப் உடைய தற்போதைய தலைவராக சமல்பாய் பி படேலும், துணைத் தலைவராக வலம்ஜிபாய் ஆர் ஹம்பல் என்பவரும் உள்ளனர். கூட்டுறவின் நிர்வாக இயக்குனராக ஆர்.எஸ்.சோதி உள்ளார்.

நிர்வாக இயக்குனராக ஆர்.எஸ்.சோதி aajtak எனும் இந்தி இணையதளத்திற்கு அளித்த தகவலில்,  ” அமுல் நிறுவனத்தில் 1.38 லட்சம் ஊழியர்கள் கூட இல்லை. ஆகவே இந்த கூற்று அடிப்படை ஆதாரமற்றது. அமுல் ஆனது எந்த உரிமையாளரும் இல்லாத கூட்டுறவு சமூகம். அமுல் அதனுடன் தொடர்புடைய பால் விநியோகம் செய்யும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு சொந்தமானது. அமுல் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

Advertisement

மதம் மற்றும் உணவின் அடிப்படையில் அமுல் நிறுவனத்தில் இருந்து யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிராக கொண்ட வெறுப்புணர்வால் கற்பனையாக உருவாக்கப்பட்ட உரிமையாளரைக் கொண்டு 1.38 லட்சம் ஊழியர்களை அமுல் நிறுவனம் நீக்கியதாக வதந்தியை உருவாக்கி இருக்கிறார்கள். நாட்டில் திட்டமிட்ட வெறுப்புணர்வு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது அதிகரித்து வருகிறது என்பதை அறிவதற்கு இவையும் ஒரு எடுத்துக்காட்டே !

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button