இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு !

உயர்கல்வியில் ஆண்களை விட பெண்களின் சேர்க்கையே அதிகம்.. AISHE 2021-22 அறிக்கை குறித்த ஓர் தெளிவான பார்வை !

ன்றிய கல்வி அமைச்சகம் 2020-2021 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்விற்கான (AISHE) அறிக்கையை கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியிட்டது. இதன் படி இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது 18.87 லட்சம் அதிகரித்து, 4.14 கோடியாக உள்ளது. இது கணிசமான ஒரு வளர்ச்சியையே காட்டுகிறது.

உயர்கல்விக்கான அகில இந்திய அறிக்கை (AISHE) ஏன் அவசியம் ?

நாட்டில் உயர்கல்வியின் நிலையை ஆய்வு செய்து, ஒன்றிய கல்வி அமைச்சகம் 2010-11 முதல் ஆண்டுதோறும் “AISHE (All India Survey on Higher Education)” ஆய்வை நடத்தி வருகிறது.  மேலும் இணைய அடிப்படையிலான (Web Data Capture Format) கணக்கெடுப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. எனவே தற்போது வெளியிடப்பட்டுள்ள 12 வது பதிப்பு (2021–2022), இரண்டாவது முறை வெளியிடப்பட்ட இணைய அடிப்படையிலான அறிக்கையாகும்.

இந்த கணக்கெடுப்பு இளங்கலை, முதுகலை, பிஎச்டி, எம்ஃபில், டிப்ளமோ, பிஜி டிப்ளமோ, சான்றிதழ் (certificate Programmes) மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் (integrated programmes) போன்ற எட்டு வெவ்வேறு படிநிலைகளின் அடிப்படையில் மொத்த மாணவர் சேர்க்கையைப் பதிவு செய்கிறது. ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை, கல்வித் திட்டங்கள், தேர்வு முடிவுகள், கல்வி நிதி, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தரவுவுகள் இந்த அறிக்கையில் சேகரிக்கப்படுகின்றன.

மேலும் AISHE இல் பதிவு செய்துள்ள மொத்த கல்வி நிறுவனங்களில், 10,576 தனி நிறுவனங்கள் (standalone institutions), 42,825 கல்லூரிகள் மற்றும் 1,162 பல்கலைக்கழகங்கள் இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பிற்கு பதிலளித்துள்ளன. எனவே ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்த அறிக்கை மூலம், அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் நடைபெறும் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை வருங்காலங்களில் ஏற்படாதவாறு சரி செய்ய முடியும். இதற்காக http://aishe.gov.in என்ற இணையதளமும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

AISHE 2021-22 அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் :

ஆண்களை விட பெண்களின் சேர்க்கை அதிகம் :

2021-22 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட 4.33 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் (2020-21) 4.14 கோடியாக இருந்துள்ளது. அடிப்படை ஆண்டான 2014-15 இல், இது 3.42 கோடியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உயர்கல்வி சேர்க்கைக்காக 2014-15ல் பதிவு செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 1.5 கோடி இருந்த நிலையில், 2021-22ல் இது 32% அதிகரித்து 2.07 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18 இல் 1.74 கோடியாக இருந்த பெண்களின் எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 18.7% அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் (GER) : 

ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) பொறுத்தவரையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி சேர்க்கைக்கான GER, 28.4% ஆக அதிகரித்துள்ளது. இது 2020-21 இல் 27.3% ஆகவும், 2014-15 இல் 23.7% ஆகவும் இருந்தது. 

ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தில் அதிகமாக உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்தோம். இதில் இந்திய அளவில், சண்டிகர் (64.8), புதுச்சேரி (61.5), டெல்லி (49), தமிழ்நாடு (47), இமாச்சலப் பிரதேசம் (43.1), உத்தரகாண்ட் (41.8), கேரளா (41.3) மற்றும் தெலங்கானா (40) போன்ற மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.

பெரிய மாநிலங்களின் அடிப்படையில், ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு 47 விகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.

கணிசமாக அதிகரித்துள்ள பட்டியலின மாணவர்களின் சேர்க்கை:

2021-2022 இல் பதிவு செய்யப்பட்ட 4.33 கோடி மாணவர்களில்,15 சதவீதம் பேர் பட்டியல் சமூகத்தினர், 6 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர், 37 சதவீதம் பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மீதமுள்ள 40 சதவீதம் பேர் பிற சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன்படி பட்டியல் சமூக (SC) மாணவர்களின் மொத்த சேர்க்கை 66,22,923 ஆகும். இது மொத்த சேர்க்கையில் 15.3%.

2020–21ல் 58.95 லட்சமாக இருந்த பட்டியல் சமூக (SC) மாணவர்களின் எண்ணிக்கை, 2021–22ல் 66.23 லட்சமாக அதிகரித்துள்ளது. 2014 மற்றும் 2015 க்கு இடையில் பட்டியல் சமூக (SC) மாணவர்களின் மொத்த சேர்க்கை அதிகரிப்பு 44% ஆக இருந்தது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்டியல் சமூக (SC) மாணவர்களின் சேர்க்கை விகிதம் 25.4% ஆக அதிகரித்துள்ளது. 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை :

ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் ஒரு பகுதியாக இருக்கும் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மட்டுமே அதிகாரப்பூர்வ கல்லூரிகளாக AISHE  மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் AISHE இல் பதிவு செய்யப்பட்ட கல்லூரிகளில், 10.7% கல்லூரிகள் இந்தியாவின் 10 மாவட்டங்களில் பரவலாக காணப்படுகின்றன. 

மேலும் கல்லூரிகளின் அடர்த்தியைப் (college density) பொறுத்த வரையில், அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு காணப்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் முப்பதாக உள்ளது. 

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில், 2014 மற்றும் 2015 க்கு இடையில், 341 பல்கலைக்கழகங்கள்/பல்கலைக்கழக அளவிலான நிறுவனங்கள் இருந்தன. இந்நிலையில் 2020–21ல் பதிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் 1168 ஆக உள்ளன. இவற்றில் 685 அரசின் மூலமும், 473 தனியார் மற்றும் 10 தனித்து இயங்கும் பல்கலைக்கழகங்களாகவும் உள்ளன.  2014-15ல் பெண்களுக்காக இயங்கும் பல்கலைகழகங்கள் 11 ஆக இருந்தநிலையில், 2020–21ல் இது பதினேழாக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 125 பல்கலைக்கழகங்கள் மற்ற சிறப்பு வகைகளைச் சேர்ந்த பல்கலைகழகங்களாக உள்ளன. 

இதே போன்று கல்லூரிகளைப் பொறுத்த வரையில், 2021-2022 இல் 45473 பதிவுசெய்யப்பட்ட கல்லூரிகள் உள்ளன. 2014-15ல் 38498 கல்லூரிகள் AISHE ஆல் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்கள்:

அதிகபட்ச கல்லூரிகள் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. 

ஆசிரியர்களின் எண்ணிக்கை :

AISHE 2021-22 அறிக்கைப்படி, 2021-2022ல் மொத்தம் 15,97,688 ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஆசிரியர்களில் 43.4% பெண்கள், 56.6% ஆண்கள். மேலும் இந்தியா முழுவதும் 100 ஆண் ஆசிரியர்களுக்கு 77 பெண் ஆசிரியர்கள் உள்ளனர். பட்டியலினப் பிரிவில் 100 ஆண் ஆசிரியர்களுக்கு 61 பெண் ஆசிரியர்களும், ST மற்றும் OBC பிரிவில் முறையே 100 ஆண் ஆசிரியர்களுக்கு 78 மற்றும் 73 பெண் ஆசிரியர்களும் உள்ளனர். 

மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை (PWD) :

உயர்கல்வியில் 88,748 PWD மாணவர்கள் சேர்ந்துள்ளனர், அவர்களில் 51,373 பேர் ஆண்கள் மற்றும் 37,375 பேர் பெண்கள் ஆவர். 

தொலைதூரம் மற்றும் வழக்கமான முறையில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் :

தொலைத்தூரக் கல்விக்கு (Distance Education) 2021-22ல் 20.06 லட்சம் பெண்களும், 25.67 லட்சம் ஆண்களும் என மொத்தமாக 45.73 லட்சம் பேர் பதிவுசெய்துள்ளனர். 

வழக்கமான கல்வி (Regular Mode) நிறுவனங்களைப் பொறுத்தவரையில், இளங்கலைப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக வளர்ந்துள்ளது. 2017–18ல் இருந்து மாணவர் சேர்க்கையில் ஏறக்குறைய 15% உயர்ந்துள்ளது. மேலும் இளங்கலை பட்டப்படிப்புக்கான முந்தைய கணக்கெடுப்பில் இருந்து இது சுமார் 6% அதிகரித்து காணப்படுகிறது. 

உயர்கல்வி படிப்பிகளில் தற்போதுள்ள முக்கிய சிக்கல்கள் :

மாணவர் மற்றும் ஆசிரியர் விகிதத்தைப் (Student to Teacher Ratio) பொறுத்தவரையில், வழக்கமான முறையில் (Regular Mode) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் கணக்குப்படி, ​​மாணவர்-ஆசிரியர் விகிதம் 24 ஆக உள்ளது. அதே சமயம் வழக்கமான மற்றும் தொலைதூர முறைகள் இரண்டிலும் சேர்த்து (both the Regular and Distance modes) கணக்கிட்டால் மாணவர் மற்றும் ஆசிரியர் விகிதம் 28 ஆக உள்ளது. ரஷ்யா(10:1), ஸ்வீடன்(12:1), கனடா (9:1) என மற்ற உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இந்த விகிதம் குறைவாக உள்ளது. இதன் மூலம் கல்வித்தரத்தில் இந்தியா பின்தங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

– ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கையின் பாலின சமத்துவத்தில் (GPI of 2021-22 – 1.05) பெண்கள் முன்னிலையில் இருந்தாலும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவுக்கான சேர்க்கையில், பெண்கள் ஆண்களை விட பின்தங்கியேயுள்ளனர்

ஆதாரங்கள்:

PIB Release: Ministry of Education releases All India Survey on Higher Education (AISHE) 2021-2022

All India Survey on Higher Education (AISHE) 2021-2022 Report

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader