Articles

ஆந்திராவின் அனந்தையா லேகியங்கள் கொரோனாவிற்கு பலன் அளிக்கிறதா? ஆய்வு அறிக்கை கூறுவதென்ன ?

கொரோனா நோயை குணப்படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்திய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வைத்தியரின் மருந்து எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, எனவே அதனை விநியோகிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Advertisement

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணபட்டணம் ஊரை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் போரிஜ் ஆனந்தையா என்பவர் தான் தயார் செய்த மருந்தை (சில லேகியங்கள் மற்றும் கண் மருந்து) கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் விநியோகித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் குறைவாக இருந்த மக்கள் கூட்டம், இந்த மருந்து குறிப்பாக கண் மருந்து உண்மையாகவே கொரோனாவை குணப்படுத்துகிறது, ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது என செய்தி சுற்றுவட்டார மக்களிடம் பரவவே கடந்த மே 17-ம் தேதி கூட்டம் கூட்டமாக இந்த ஆயுர்வேத மருந்தை பெற மக்கள் முன்வந்தனர். ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டம் குவியத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருக்கு எந்த ஒரு தொழில்முறை பயிற்சியும் இல்லை என்றாலும், அவரது அனுபவத்தின் அடிப்படையில் இந்த மருந்தை தயாரித்ததாகவும், மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின.  அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் இம்மருந்து நல்ல பயனை அளிக்கிறது என மக்கள் கூறி வந்தனர். அப்பகுதியில் மருந்து வாங்க மக்கள் தொடர்ந்து படையெடுத்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தலையிட வேண்டியிருந்தது. இந்த மருந்தை விநியோகிக்க முறையாக எந்த அனுமதியும் பெறப்படவில்லை  இந்த கூட்டத்தில் உள்ள பலருக்கும் கோவிட்-19 தொற்று உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

நெல்லூர் மாவட்டத்தின் கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அனந்தையாவின் மூலிகை கண் சொட்டு மருந்து எடுத்துக்கொண்டதாகவும், அது நல்ல பலனை தருவதாகவும் பேசிய காணொளி ஒன்று கடந்த மே 21 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பரவியது. இது போல அனந்தையாவின் கண் மருந்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பல காணொளிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

முறையாக அரசு அனுமதி பெறாவிட்டாலும் சர்வேபள்ளியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வான கனி கோவர்தன் ரெட்டி, ஆயுர்வேத மருந்துகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருவதாக அறிவித்து மருந்து விநியோகத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இது குறித்து அவர் கூறியதாவது, “ மக்கள் அமைதியற்ற நிலையில் இருப்பதால் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது ” என தெரிவித்தார்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஒரே இடத்தில் கட்டுப்பாடு அற்ற முறையில் கூட்டங்கள் கூடுவது மிக ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும், அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் கட்சிகள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவரும் கண்டனங்களை எழுப்பினர். இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் இந்த மருந்து விநியோகத்தை தடை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். முன்பு இந்த மருந்தை பரிந்துரைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அந்த இடத்தை பார்வையிட்டு, அடுத்த 10 நாட்களுக்கு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகளுக்கு தெரிவித்தார்.

மேலும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆனந்தையா அளிக்கும் மருந்துக்கு ஏதேனும் அறிவியல் ஆதாரங்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு விரிவான ஆய்வுக்கு உத்தரவிட்டார். இந்த மருந்து குறித்து ஆய்வு செய்ய அம்மாநில சுகாதாரத்துறை, ஆந்திராவின் ஆயுஷ் ஆணையர் ராமலு நாயக் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. அதுபோக மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கும், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி ஆணையத்திற்கும் (CCRAC) இந்த மருந்து குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மே 24ம் தேதி ஆந்திர ஆயுஷ் குழு அனந்தையாவிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து விஜயவாடாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து அனந்தையா விநியோகித்த மருந்தை ஆந்திர அரசு “பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான” மருந்து என அறிவித்தது.

இதுகுறித்து ஆயுஷ் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வில், மருந்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 8 வகையான மூலிகைகள் மூலப்பொருட்களாக கொண்டு இம்மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 80,000 பேர் இந்த மருந்தை உட்கொண்டுள்ளனர். அவர்களில் சிலரிடம் நாங்கள் பேசினோம், யாரிடமிருந்தும் புகார்கள் எதுவும் வரவில்லை. எனினும் இதை ஆயுர்வேத மருந்தாக அங்கீகரிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்த மருந்துகளை ஆய்வு செய்ய நெல்லூர் மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு, “அனந்தையா ஆயுர்வேத மருத்துவத்தில் தகுதி வாய்ந்த நிபுணர் அல்ல என்றும், அவர் விவரித்த செயல்முறைகள் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை செயல்முறை இல்லை ” எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி கண் மருந்து பயனளிப்பதாக கூறிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நுரையீரல் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எனும் செய்திகள் வெளியானதை அடுத்து மீண்டும் சர்ச்சைகள் எழத் தொடங்கின.

கொரோனா தொற்றை குணப்படுத்துவதாக கூறிவரும் அனந்தையாவின் 4 வகையான லேகியங்களையும், கண் மருந்தையும் ஆய்வுகளுக்கு உட்படுத்திய CCRAS முதல்நிலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் “கிருஷ்ணபட்டணம் மருந்தை” விநியோகிக்க கடந்த மே 30-ம் தேதி ஆந்திரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனினும், ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதாக கூறப்படும் கண் மருந்தின் செயல்திறனைப் பற்றி முழு அறிக்கைகள் வர 2-3 வாரங்கள் ஆகும் என்பதால் அதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மருந்துகள் குறித்தான முழுமையான ஆய்வு அறிக்கை வர 2 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கோவிட் -19 குறித்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 4 லேகியங்களில் மூன்றை விநியோகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சி.சி.ஆர்.ஏ.எஸ் அறிக்கையின் படி, கிருஷ்ணபட்டணம் மருத்துவம் கோவிட் -19 ஐ குணப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் நோயாளிகள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழக்கமான மருந்துகளை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணாபட்டணம் மருந்தையும் சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்துள்ளது.

மேலும் , இந்த மருந்துகளை விநியோகம் செய்யும்போது முறையாக கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்டமுறையில் வராமல் உறவினர்களை அனுப்பி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவின் அனந்தையாவின் மூலிகை லேகியங்கள் கொரோனாவிற்கான அதிசய மருந்து என்கிற தலைப்பில் எண்ணற்ற கட்டுரைகள், வீடியோக்கள் வெளியாகின. ஆனால், அனந்தையா மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என ஆயுர்வேத ஆய்வுக்குழு அறிக்கையும், கொரோனாவை குணப்படுத்தியதாக எந்த ஆதாரங்களும் இல்லை என சி.சி.ஆர்.ஏ.எஸ் ஆய்வு அறிக்கையும் கூறுகிறது. பக்கவிளைவுகள் இல்லாதது என்பதால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மற்ற மருந்துகளுடன் 3 லேகியங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

Links :

retired-andhra-headmaster-who-vouched-for-effectiveness-of-herbal-eye-drops-dies-of-covid-19

andhra-pradesh-govt-gives-nod-to-distribute-bonigi-anandaiahs-herbal-covid-medicine

anandaiah-covid19-ayurvedic-medicine-vaccine-andhra-pradesh

andhra-declares-krishnapatnam-medicine-safe

andhra-pradesh/andhra-pradesh-government-permits-usage-of-anandaiah-herbal-medicine-for-covid-patients

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button